Home » » தற்கொலைத் தடுப்புச் சட்டம் இபிகோ 309 - ஐ இன்னும் நீக்காதது ஏன் ? -முன்னாள் நீதிபதி

தற்கொலைத் தடுப்புச் சட்டம் இபிகோ 309 - ஐ இன்னும் நீக்காதது ஏன் ? -முன்னாள் நீதிபதி



 உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி

பிரபா ஸ்ரீதேவன்
 
தமிழ்நாட்டில்தான் அதிகமாக தற்கொலைகள் நிகழ்கின்றன என்ற செய்தி படித்தேன். தற்கொலை என்பது ஒரு சமூகப் பிரச்னை. இந்தப் பிரச்னைக்கு பல முகங்கள் உள்ளன. தற்கொலை செய்து கொள்பவர் ஆணா, பெண்ணா என்று தொடங்கி, இனம், வகுப்பு, ஜாதி, பொருளாதார நிலை, மனநிலை, படிப்பில் எவ்வளவு மதிப்பெண்கள் வரை பல முகங்கள். ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பற்றது. ஏதோ ஒரு காரணத்திற்காக தற்கொலை செய்து கொள்பவர்களுக்கு அந்த ஒரு நொடியில் இதை விட்டால் வேறு வழியில்லை என்று தோன்றுகிறது. அவர் குற்றவாளி அல்ல. ஆனால், இபிகோ பிரிவு 309 தற்கொலை முயற்சி குற்றம் என்கிறது. அதற்குத் தண்டனை வழங்குகிறது.

அருணா ஷண்பக் வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியது என்னவென்றால் ""தற்கொலை செய்ய முயற்சிக்கும் மனிதருக்குத் தேவை ஆறுதலும் உதவியும். தண்டனை அல்ல. ஆகையால் நாங்கள் பாராளுமன்றத்திற்குப் பரிந்துரை செய்வது என்னவென்றால் இபிகோவிலிருந்து பிரிவு 309-ஐ ரத்து செய்து விடுங்கள்''

நம் நாட்டின் தற்கொலை நிகழ்விற்கு வரைபடம் போட்டோமானால், குறிப்பிட்ட சில பிரிவினர் அதிகம் தற்கொலை புரிந்துகொள்ளுகிறார்கள். ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒரு தனிப்பட்ட உந்துகோல் உள்ளது.

முதலில் விவசாயிகள். சமூக ஆர்வலரான பி. சாய்நாத் நம் நாட்டில் 12 மணி நேரத்தில் ஒரு விவசாயி இறக்கிறார் என்கிறார். அப்படி என்றால் ஒரு நாளில் இரு விவசாயிகள். விவசாயத்தையே நம்பி வாழ்பவர்களுக்கு, வங்கிக் கடன் எளிதில் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் வட்டி அதிகம். விவசாய நிர்வாகம் பற்றி திறமையான பயிற்சி இல்லை. அவர்களுக்கு மருத்துவ ரீதியான வசதிகள் இல்லை. அரசும் தகுந்த முறையில் பாதுகாப்பு கொடுப்பதில்லை. இவையெல்லாம் ஒருங்கே சேர்ந்து விவசாயிகளின் தற்கொலைகள் அதிகமாக நிகழ்கின்றன.

அடுத்து உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர் தற்கொலை. கிராமத்திலிருந்து வரும் மாணவரால் படிப்பின் பளுவை தாக்குப்பிடிக்க முடியாமல் போகலாம். விவசாய நிலங்களை விற்றுத்தான் அவர் தந்தை அவரைக் கல்லூரிக்கு அனுப்பியிருப்பார். குறைந்த மதிப்பெண்களுடன் தந்தையை எப்படி சந்திப்பது? இல்லை ஆங்கிலம் தெரியாததினாலோ, வாழ்க்கை தர வித்தியாசங்களினாலோ சக மாணவர்களிடமிருந்து அன்னியப்பட்டுப் போகலாம்.

இப்படி பல காரணங்கள். மாணவர்களிடையே நிச்சயம் வித்தியாசங்கள் இருக்கும். ஏனென்றால், நம் சமூகம் அப்படி. ஆனால், ஒவ்வொரு கல்வி நிறுவனமும் இந்தப் பிரச்னையைப் புரிந்து தனிப்பட்டுப் போகும் மாணவர்கள், தான் தாழ்வென்றும் நினைக்கும் மாணவர்கள் அனைவருக்கும் உளவியல் ரீதியாக உதவி செய்ய வேண்டும். ஒருவருக்கு மற்றவர் தாழ்வல்ல என்ற பாடம் கல்வி நிறுவனங்களிலிருந்து தொடங்கினால்தான் நம் சமூகம் மாறும்.

அடுத்தது வரதட்சணை கொடுமையால் தன்னை மாய்த்துக் கொள்ளும் பெண்கள். வரதட்சணை தடுப்பு சட்டம் வந்து எவ்வளவு வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் இளம் பெண்கள் இறந்துகொண்டே இருக்கிறார்கள். இந்த மரணங்கள் தற்கொலையாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. கொலையாகவே கூட இருக்கலாம்.

பரீட்சை தற்கொலைகள். பள்ளிக்கூட இறுதிப் பரீட்சை முடிவுகள் வந்ததும் ஆரம்பமாகும் தற்கொலைகள். பெரிய கல்லூரிகளில் இடம் கிடைக்காவிட்டால் வாழ்க்கையே முடிந்துவிட்டது என்றெண்ணி மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். எல்லோரும் பொறியாளராகவோ, மருத்துவராகவோ இருக்க வேண்டும் என்று எங்கே எழுதியிருக்கிறது? சென்னை உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பில், மாணவர் தற்கொலைகளுக்கு காரணங்கள், பெற்றோர்களுடைய பேரவா, படிப்பிற்கு அளவுக்கு மிஞ்சிய முக்கியத்துவம், மற்ற மாணவர்களுடன் ஒப்பிடுதல் முதலியன என்று கூறியது.

அடுத்து காதல் தற்கொலைகள். இது ஒருதலைக் காதலாக இருக்கலாம். இல்லை தோற்றுப்போன காதலாக இருக்கலாம். இல்லை சமூகம் வரைந்திருக்கும் கோட்பாடுகளை மீறிய காதலாக இருக்கலாம். இல்லை சமூக, சாதிய தீயினால் எரிந்து போன காதலாக இருக்கலாம். கவரிமான் தற்கொலைகள், வட்டிக்காரன் வந்துவிட்டான், பெண் ஓடிப்போய்விட்டாள், இப்படி பல காரணங்கள். சமூகம் சில தற்கொலைகளைக் கண்டிப்பது கூட இல்லை. மாறாக போற்றிப் புகழ்கிறது. உதாரணத்திற்கு நல்லதங்காள்.

தற்கொலை முயற்சியை தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாக செய்ததினால் தற்கொலைகள் குறையாது. மாறாக, எதிர்மறையான விளைவுகள் நேரும். ஏனென்றால் தற்கொலை செய்து கொள்ள முயன்ற ஒருவரை ஆஸ்பத்திரியில் உற்றார், உறவினர் சேர்க்க அஞ்சுவார்கள். மருத்துவர்களும் போலீஸ் கேஸ் ஆயிற்றே என்று சிகிச்சை செய்ய மாட்டார்கள்.


பி. ரத்தினம், எதிர் இந்திய யூனியன் என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் தற்கொலை முயற்சி குற்றமென்று கருதக்கூடாது. இபிகோ பிரிவு 309-ஐ அகற்றுவதால் கருணைக்கொலைகள் நடக்க வாய்ப்பு உள்ளது என்று எண்ணுவது சரியல்ல என்று கூறியது. இந்தத் தீர்ப்பை பின்வந்த ஒரு தீர்ப்பு சரியல்ல என்று கூறிவிட்டது.

தற்கொலை பாவம் என்று எல்லா மதங்களும் கூறுகின்றன. அதனாலேயே நாம் தற்கொலை முயற்சி குற்றமாகாது என்று சொல்லத் தயங்குகிறோம். ஆனால், எல்லா உளவியல் நிபுணர்களும் என்ன கூறுகிறார்கள் என்றால் தற்கொலை என்ற ஒரு தனி மனிதனின் முடிவிற்கு தனிப்பட்ட காரணங்கள், சமூகக் காரணங்கள், பொருளாதாரக் காரணங்கள் என்று பல காரணங்கள்.

மென்மையான, எளிதில் காயப்படக்கூடிய மன நிலையில் உள்ளவர்களுக்கு மேலும் அழுத்தமும் காயமும் ஏற்படும் நிலை வரும்பொழுது அந்த முடிவு ஒன்றுதான் வழி என்று தோன்றுகிறது.

டாக்டர் லட்சுமி விஜயகுமார் தற்கொலை தடுப்பிற்காகவே அயராமல் 24 மணி நேரமும் பாடுபடுவர். அவர் தற்கொலை நிகழ்ச்சி அதிகமாக இருக்கும் இடங்களில், பயிர் பூச்சிக்கொல்லி மருந்துகள் எளிதில் கிடைக்காமல் செய்ய வேண்டும், குடி முதலிய போதைப் பொருள்கள் கிடைப்பதைக் குறைக்க வேண்டும், ஊடகங்கள் தற்கொலைச் செய்திகளை பொதுமக்களுக்கு பொறுப்புடன் தர வேண்டும். ஆசிரியர்கள், காவல்துறையினர், மதத்தலைவர்கள் எல்லோரும் தற்கொலை நிகழ்வதைக் குறைக்க முயற்சி செய்ய வேண்டும் என்கிறார்.

இலங்கையில் பிரிவு 309-க்கு ஒப்பான சட்டத்தை நீக்கிய பிறகு தற்கொலைகள் குறைந்துவிட்டதாம். இபிகோ பிரிவு 309 ரத்து செய்யப்பட்டால் அதுவே தற்கொலை தடுப்பிற்கு முதலும் முக்கியமுமானதுமான படி என்று சொல்கிறார்.

தற்கொலை முயற்சி குற்றமில்லை என்று சொல்லிவிட்டால் மக்கள் தற்கொலை என்ற பாவத்தைச் செய்வார்களே என்றெண்ணாதீர்கள். நாம் நரகத்திற்கு போகிறோமா இல்லை சுவர்க்கத்திற்குப் போகிறோமா என்ற கவலை அரசுக்கு வேண்டாம். அதுவுமே தற்கொலை செய்து கொண்டால்தானே நரகம். முயற்சி செய்பவர்களைக் காப்பாற்றி தக்க அறிவுரை கொடுத்து தேவை என்றால் சிகிச்சை செய்து பாதையைத் திருப்பிவிட்டோமானால் நரகத்திற்கு டிக்கெட் வாங்கிய ஒருவரைத் தடுத்திருப்போமல்லவா? இந்த ஒரு இபிகோ குற்றத்தின் தனி சிறப்பு, குற்றம் புரிந்தவர் சட்டத்திலிருந்து தப்பிப்பார். குற்றம் புரியமுடியாமல் போனவர் மாட்டிக்கொள்வார்.

ஒரு செயல் குற்றமாவதற்கு அடிப்படையாக இருக்க வேண்டியது குற்றமுறு எண்ணம். அதனால்தான் தற்காப்பிற்காகச் செய்யப்படும் கொலை, கொலையல்ல என்று இபிகோ சொல்கிறது. பரீட்சையில் தோற்ற மாணவனும், கடன் பளு தாங்காத விவசாயியும், வரதட்சணை கொடுமையால் வாழ்க்கையின் ஓரத்திற்கு ஓடும் பெண்ணும், குற்றமுறு எண்ணத்துடன் தற்கொலை செய்ய முற்படுவதில்லை.

ஏற்கெனவே வாழ்க்கை அவர்களைத் தண்டித்துவிட்டது என்று எண்ணித்தான் அவர்கள் தூக்கு போட்டுக்கொள்கிறார்கள். கயிறறுந்து பிழைத்துவிட்டார்கள் என்றால் இப்பொழுது நான் தண்டிக்கிறேன் என்று அரசு கூறுவதுபோல இல்லை?

2008-இல் சட்ட ஆணையம் தனது 210ஆவது அறிக்கையில் ""எல்லா வயதிலும் தற்கொலை நிகழ்கிறது, உயிர் என்பது இறைவன் கொடுத்த பரிசு. அதை அவனே பறிக்க முடியும். எந்த சமூகமும் உரிய காலத்திற்கு முன் உயிரைப் பறிப்பதை ஒப்புக்கொள்ளாது. தற்கொலைக்கு முயன்று அதிலும் தோற்றுப்போய் சொல்லொணா வேதனை அடைந்துள்ள ஒருவரை மேலும் தண்டிப்பது நீதியுமாகாது நியாயமுமில்லை'' என்று பரிந்துரை செய்தது.

இதற்குப்பின் மேலே சொன்ன அருணா ஷண்பக் வழக்கில் உச்ச நீதிமன்றமும் இந்த 309ஆவது பிரிவு நீக்கப்பட வேண்டும் என்று கூறிவிட்டது. இன்னும் எதற்கு காத்திருக்கிறோம்? இபிகோ கரும்பலகையிலிருந்து பிரிவு 309-ஐ அழிக்க வேண்டியதுதானே?                                                                                                

நன்றி :- தினமணி, 01-09-2013

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger