Home » » ஸ்ரீராம் இலக்கியக் கழகம் வழங்கும் ’அறம்' விருதைப் பெறும் டாக்டர் கே.வி. திருவேங்கடம் !

ஸ்ரீராம் இலக்கியக் கழகம் வழங்கும் ’அறம்' விருதைப் பெறும் டாக்டர் கே.வி. திருவேங்கடம் !

ஸ்ரீராம் இலக்கியக் கழகம் வழங்கும் 2012-ஆம் ஆண்டுக்கான "அறம்' விருது டாக்டர் கே.வி. திருவேங்கடத்துக்கு (87) (படம்) வழங்கப்படவுள்ளது.


சென்னை டி.டி.கே. சாலையில் உள்ள நாரதகான சபாவில் ஜூலை 24-ஆம் தேதி நடைபெறும் விழாவில் ஆளுநர் கே. ரோசய்யா விருதையும் ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசையும் வழங்குகிறார்.

இது குறித்து ஸ்ரீராம் குழுமத்தின் தலைவர் ஆர். தியாகராஜன், ஸ்ரீராம் இலக்கியக் கழகத்தின் தலைவர் அவ்வை நடராஜன் ஆகியோர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது:

திருக்குறள் காட்டும் உயர் நெறிகளை வாழ்வில் கடைப்பிடித்து சமுதாய மேம்பாட்டுக்காக உழைப்பவர்களை உலகுக்கு அடையாளம் காட்டவும் அவர்களை ஊக்குவிக்கவும் ஸ்ரீராம் இலக்கியக் கழகம் "அறம்' விருதை வழங்கி வருகிறது.

முதல் "அறம்' விருது கடந்த 2003-ஆம் ஆண்டு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் ஜி. வெங்கடசுவாமிக்கு வழங்கப்பட்டது. 
அதன் பிறகு மதுரை "தான்' பவுண்டேஷனின் செயல் இயக்குநர் வாசிமலை (2004), திண்டுக்கல் காந்திகிராம் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கௌசல்யா தேவி (2005), கூத்தம்பாக்கம் ஆர். இளங்கோ (2006), பான்யன் தொண்டு நிறுவனம் (2007), டாக்டர் ஆர். சக்திவடிவேல் (2008) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

 நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு 2012-ஆம் ஆண்டுக்கான "அறம்' விருது 60 ஆண்டுகளாக மருத்துவ சேவையாற்றி வரும் டாக்டர் கே.வி, திருவேங்கடத்துக்கு வழங்கப்படுகிறது.

1950-ல் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் அவர் எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றார். ஸ்டான்லி மற்றும் சென்னை அரசு மருத்துவக் கல்லூரிகளில் 31 ஆண்டுகளும், தனியார் கல்லூரிகளில் 25 ஆண்டுகளும் மருத்துவப் பேராசிரியராகப் பணியாற்றி ஆயிரக்கணக்கான மருத்துவர்களை உருவாக்கியவர்.

டாக்டர் பி.சி. ராய் விருது, தன்வந்திரி விருது, பரமாச்சாரிய விருது, சென்னை மருத்துவக் கல்லூரியின் வாழ்நாள் சாதனையாளர் விருது, பத்மஸ்ரீ விருது ஆகியவற்றை பெற்றுள்ள அவருக்கு அறம் விருது வழங்குவதில் பெருமை கொள்வதாக அவ்வை நடராஜன் தெரிவித்தார்.

பேட்டியின்போது ஸ்ரீராம் குழுமத்தின் இயக்குநர் ஆர். கண்ணன், விருதுத் தேர்வுக் குழுவில் இடம் பெற்றிருந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஜி. ரங்காராவ், ஏ.எம். சுவாமிநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.                                    

நன்றி :- தினமணி, 18-07-2013



0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger