Home » » ஞானாலாயா ஆய்வு நூலகம் - புதுக்கோட்டை

ஞானாலாயா ஆய்வு நூலகம் - புதுக்கோட்டை நூலகத்தின் துவக்கம்

பா.கிருஷ்ணமூர்த்தி  தன்னுடைய தந்தை கொடுத்த நூறு புத்தகங்களுடன், 2011 ஆம் ஆண்டு துவக்கிய  ஞானாலயா ஆய்வு நூலகம்  இன்று ஒரு ஆல மரமாக, சுமார் தொண்ணூறாயிரம் புத்தகங்கள், ஆயிரத்தைநூறு சிற்றிதழ்கள், பல அபூர்வமான கடிதங்கள் என்று வளர்ந்திருக்கிறது .ஆலமரத்தின் சிறப்பே, அந்த மரத்தை அதன் விழுதுகளே வேர்களாய் மாறி அதைத் தாங்குவது தான்! வாழையடி வாழையாய் ஒரு சமுதாயம் தன்னுடைய வரலாற்றுப் பிரக்ஞையோடு இயங்குவது, தன்னுடைய பண்பாடுகள், மரபுகளைக் காப்பாற்றிக்கொள்வது இப்படித் தான்.

 நூலகத்தின் பயன்பாடு

ஞானாலயா ஆய்வு நூலகம் வாசகர்களுக்கு எந்த அளவுக்குப் பயன்படுகிறது,வெறும் புத்தக அட்டவணையை மட்டுமே அறிந்த நூலகர்கள் என்று இல்லாமல், இருக்கும் நூல்களை முழுமையாக வாசித்து உள்வாங்கிக் கொண்டு, நூல்களைத் தேடுகிறவர்களுக்கு நூல்களையும் தாண்டி நூலாசிரியர், பதிப்பகம், வெளியான சூழ்நிலை, வாசகர்கள் மீது அந்தப் புத்தகம் ஏற்படுத்திய தாக்கம், இப்படி மேலதிக விவரங்களைத் தரக் கூடிய நூலகம் தமிழ் நாட்டில் ஒன்று இருக்குமென்றால் அது புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம் ஒன்று மட்டும்தான் என்று நிச்சயமாகச் சொல்ல முடியும்.

இப்படிச் சொல்பவர்கள் யாரோ ஒருவர் இருவர் மட்டுமே இல்லை! இந்த நூலகத்தைப் பயன்படுத்திக் கொண்ட எழுத்தாளர்கள், பதிப்பகங்கள், அரசியல்வாதிகள், விமரிசகர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் அத்தனை பேருடைய ஒருமித்த குரல்! 

10-க்கும் 75-க்கும் என்ன வேறுபாடு

சென்னை ரோஜா முத்தையா நூலகத்தை பயன்படுத்தி பத்துக்கும் குறைவானவர்கள் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்கள் என்ற தகவலோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் புதுக்கோட்டை ஞானாலயாவின் உதவியோடு சுமார் 75 பேருக்கும் மேல் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்கள் என்ற தகவல் ஞானாலயா ஆராய்ச்சி செய்பவர்களுக்கு எந்த அளவுக்கு உதவியாக இருந்திருக்கிறது என்பதை சொல்லும். 

சென்னையில் கிடைக்காத நூல்கள்கூட ஞானாலாயாவில் கிடைக்கும்

அது தவிர மாநிலத் தலைநகர் சென்னையில்கன்னிமாரா உட்படப் பலப்பல நூலகங்கள் இருந்தும் கூட, ஞானாலயாவைத் தேடி புதுக்கோட்டைக்கு வந்து ஆராய்ச்சியாளர்களும், எழுத்தாளர்களும் அரசியல்வாதிகளும் தங்களுக்குத் தேவையான தகவல்களைப் படியெடுத்துச் செல்கிறார்கள் என்றால், அது ஞானாலயாவில் எப்படி தலைப்பு வாரியாக, அரியவகைப் புத்தகங்களை முறையாகத் தொகுத்து வைத்திருக்கிறார்கள், வைத்திருக்கிறார்கள், பாதுகாத்துவருகிறார்கள் என்பது தான்  விசேஷம், வித்தியாசமே!

 தினமணி கலாரசிகனின் ( ஆசிரியர் வைத்தியநாதன் ) பாராட்டு

கலாரசிகன் பகுதியில் (08-07-2012) தினமணி நாளிதழில் நின்று போன கணையாழி மீண்டும் தொடங்கிய கதையில் ஆரம்பித்து, மார்க்சீயத் திறனாய்வாளரும்,சிறந்த எழுத்தாளருமான தி.க.சிவசங்கரன்  மிகுந்த அபிமானத்தோடு தி க சி என்றழைக்கப் படுகிறவருடைய  கட்டுரைகள் அத்தனையையும் தொகுத்து  காலத்தின் குரல் என்ற தலைப்பில் கவிஞர் முத்துக்குமார் ஒரு நூலாக வெளியிட்டிருக்கிறார் என்ற செய்தியோடு, தி.க.சியின் கட்டுரைகளைப் பல இடங்களிலும் தேடிக் கிடைக்காத நிலையில், புதுக்கோட்டை ஞானாலயாவில் அத்தனை கட்டுரைகளும் கிடைத்ததைத் தன்னுடைய முன்னுரையில் திரு முத்துக் குமார் குறிப்பிட்டிருப்பதாகவும் ஒரு செய்தி இருக்கிறது. 

ஞானாலாயாவின் சிறப்பு

ஞானாலயா ஆய்வு நூலகத்தில் சுமார் ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட சிற்றிதழ்கள் இருக்கின்றன. அதை நடத்தியவர்களிடமே  பிரதி ஏதுமில்லாத நிலையில்,ஆய்வு செய்ய விரும்புகிறவர்களுக்கும், வாசகர்களுக்கும், மறுபதிப்பு செய்ய விரும்பும் பதிப்பகங்களுக்கும் இன்றியமையாத துணையாக ஞானாலயா திரு.பா.கிருஷ்ணமூர்த்தி இருந்து வருகிறார்.                                        

ஞானாலாவிற்கு நாம் செய்யவேண்டியது என்ன ?

ஞானாலாயாவிற்கு நாம் செய்யும் உதவி நமது தாய்க்கு செய்யும் உதவி.

 ஞானாலாயவை மிகைப்பட்ட பேர்களிடம் கொண்டு சேர்ப்பது ஒரு தகப்பனுக்கு மகனாற்றும் கடமை.

 பொழுது போக்குக்காய் இணையம் வந்தோம் சென்றோம் என்றில்லாமல் ஞானலாயாவை ஆதரிப்போம், உதவிகள் செய்வோம்... அதை நமது உயிராய் நினைப்போம்....!

தொடர்புக்கு
================
ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா,
6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம்,
புதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.

தொ.பே. எண்: 04322-221059 மொபைல்: (0) 9965633140

வங்கி விவரம்:
Account Holder: Sri B. KRISHNAMOORTHY
S B Account Number: 1017047
Bank Name: UCO Bank
Branch: PUDUKKOTTAI (Tamilnadu India).
IFS CODE: UCBA0000112                                                                                                                      

முன்னதாகவே தொடர்பு கொண்டு ஞானாலாயா சென்று  வரலாம். எல்லாம் இலவசம். தேவையான நூல்களைப் பற்றிக்கேட்டால் எடுத்து வைத்திருந்தும் உதவுவார் .நகலும் எடுத்துக் கொள்ளலாம்.                
                                                            


!

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger