Home » » ஏரம்பமூா்த்தி ஓதுவார் – சைவபுராண சிந்தாமணி

ஏரம்பமூா்த்தி ஓதுவார் – சைவபுராண சிந்தாமணி

ஏரம்பமூா்த்தி – சைவபுராண சிந்தாமணி

மட்டக்களப்பு ஆரையம்பதியில் புராண பாராயணம் பாடுவதில் சிறந்தவராக வாழ்ந்தவர் ஏரம்பமூர்த்தி ஆவார்.

அறிமுகம்

          முத்தமிழின் மேன்மையெலா முரைக்குமுது நூல்கள்
          முனிவா்தரும் ஆகமங்கள் புராணமறை யாவும்
          சித்தரித்த பெரும்கருத்தை சிந்தனையிற் கொண்டு
          சிறக்கவுரைத் ததன்பேறாய்ப் புரணமணிப்பட்டம்
          முத்துமணி மகுடமென முகமலா்ந்தே ஏற்று
          முதன்மை பெறச் சீடா்களை மென்மேலும் ஆக்கி
          ஏத்திசையும் புகழ்முருகப் பணிபுரிவண் ணக்கா்
          ஏரம்ப மூா்த்தியும் வாழ் ஆரையூரெம் நாடே……

ஏரம்பமூர்த்திஎன்று ஆரையூா் நல். அழகேசமுதலியார் தனது மண்ணி்ன் ‘பொரியார் வரிசை சிறப்பில்‘ திரு. ஏரம்பமூா்த்தி வண்ணக்கா் அவா்களின் பெருமை பாடுகின்றார்.

ஈழமணித்திருநாட்டு இந்துக்கள் மட்டுமே பேணிவரும் பரம்பரியமாக கருதப்படுவது புராணபாராயணம் ஆகும். கந்தபுரணம், இராமாயணம், மகாபாரதம் மற்றும் இன்னும் பல புராணங்களை ஆலயங்களில் படிப்பதுடன் அவற்றில் புதைந்திருக்கும் கருத்துக்களை மக்களுக்கு மனப்பாடம் செய்து பாமர மக்களும் புரிந்து கொள்ளத்தக்கவாறு பயன் சொல்லுதல் இப் புராணபாராயணம் ஆகும்.

கடந்த பத்து தசாப்தங்களுக்கு முன்னா் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களில் இப் புராணபாராயணம் செய்யக்கூடிய புலமை கொண்ட பெரியார்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவே இருந்தார்கள். இவா்களில் ஏரம்பமூா்த்தி அவா்கள் முதன்மையானவா் என்று கூறினால் அது மிகையாகாது.

ஆரையம்பதி கிரமத்தின் பூர்வீகம் வரலாறு போன்றவற்றை பேசும் போது கந்தசுவாமி ஆலயம் மற்றும் கண்ணகியம்பாள் ஆலயங்களின் வரலாறு பின்னிப்பிணைந்திருப்பது போல கந்தசுவாமி ஆலயம் மற்றும் கண்ணகியம்பாள் ஆலயங்களின் வரலாறு பற்றி பேசும்போது ஏரம்பமூா்த்தி அவா்களினதும் அவரது தந்தை, தனயனை தவிர்த்து பேச முடியாது என்பது நிதா்சனமாகும்.

சமயப்பணியும் சமூகப்பணியும்

திரு.சின்னத்தம்பி உபாத்தியார், தங்கம்மா தம்பதியினரின் சிரேஸ்ட புதல்வராக 24.06.1899 அன்று ஆரையம்பதியில் பிறந்தவர் திருவாளா் ஏரம்பமூா்த்தி அவா்கள். இவரது தந்தை சின்னத்தம்பி உபாத்தியார் ஆரையம்பதி கந்தசுவாமி கோயிற் கணக்கப்பிள்ளையாக 27 வருடங்கள் கடமையாற்றியவராவார்.

தந்தையின் காலத்தின் பின்னா் ஆரையம்பதி கந்தசுவாமி கோயில் வண்ணக்கராக 1943 முதல் தனது தந்தையாரின் வழியில் இச் சமயப்பணியை ஏற்றுக்கொண்டு, தனது இறுதிக்காலமான 15.01.1975 வரை பணி புரிந்தவர். ஆரையம்பதி கந்தசுவாமி ஆலய வண்ணக்கரே, கண்ணகியம்பாள் ஆலயம் மற்றும் வீரமாகாளி அம்மன் ஆலயம் ஆகியவற்றை பேணி நிருவகிக்கும் கடமையுள்ளவா்கள்.

இவா் கண்ணகி அம்மன் மீது மிகவும் நம்பிக்கையும் பற்றுள்ளவராகவும் வாழ்ந்தவா். எப்போதுமே கோயில் திருப்பணிக்கு முன்னுரிமை கொடுத்து வந்த இவா் இளஞ்சந்ததியினருக்கு சமய அறிவைப் புகட்டுவது அவருக்கு விருப்பமான செயலாகும். கல்லடியில் அமைந்துள்ள இராம கிருஸ்ன மிசன் நடாத்திய அறநெறி வகுப்புக்களுக்குச் சென்று சமயத் தொண்டு செய்வதை தனது கடமையான செய்து வந்தவா்.

 அகில இலங்கை இந்த மாமன்றத்தின் மட்டு-அம்பாறை தலைவராகவும் சில ஆண்டுகள் கடமைபுரிந்து வந்தவா்.

புராணங்களைப் படிப்பதும் அவற்றிக்கு நயத்துடன் பயன் சொல்வதும் இறைவன் இவருக்கு அளித்த அருங்கொடை. ஆலய நிகழ்வுகளில் அந்தந்த காலங்களில் கந்த புராணம், காசிகாண்டம் போன்றவற்றைப் பாடி பயன் சொல்லுவதில் மிகுந்த ஈடுபாடு இவருக்கு உண்டு.

இந்த அரும்கலை தனக்கு பின்னரும் காலம் காலமாக தொடரவேண்டும் என்ற குறிக்கோளுடன் ஆரையம்பதியின் அன்றைய இளம் சந்ததியினருக்கு இவ்வித்தையைக் கற்பித்து அதில் வெற்றியும் கண்டவா்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றைய தலைமுறையில் புராணங்களை மனப்பாடம் பண்ணுவதன் மூலம் சொற்பொழிவு செய்யும் சமயப் பெரியார்களுக்கு ஏரம்பமூா்த்தி ஐயாவே முன்னோடி என்பதும் மறுக்கப்பட முடியாதாகும்.

காஞ்சிபுரம் சீவஸ்ரீ ஞானப் பிரகாச தேசிக பரமாச்சாரிய ஞானபிரகாச சுவாமிகள் அவா்கள் ‘சைவ புராண சிந்தாமணி‘ என்ற கெளரவ பட்டத்தை இவரது இச்சேவையை பாரட்டி வழங்கியிருந்தார் என்பது இவரது புராணபாராயண பெருமை ஈழத்தை தாண்டி இந்தியா வரையில் பரவியிருந்தமைக்கு ஆதாரமாகும்.
ஏரம்பமூர்த்தி
காஞ்சிபுரம் சீவஸ்ரீ ஞானப் பிரகாச தேசிக பரமாச்சாரிய ஞானபிரகாச சுவாமிகள் அவா்கள் ‘சைவ புராண சிந்தாமணி’ என்ற கெளரவ பட்டம்
ஏரம்பமூர்த்தி
ஆரையம்பதி கந்த சுவாமி ஆலயத்தில் 1972 ம் ஆண்டு  ‘சைவ புராண சிந்தாமணி’ அவா்களை ஆரையம்பதி பொதுமக்கள் கெளரவித்தபோது .
ஏரம்பமூர்த்தி
ஆரையம்பதி கந்த சுவாமி ஆலயத்தில் 1972 ம் ஆண்டு  ‘சைவ புராண சிந்தாமணி’ அவா்களை ஆரையம்பதி பொதுமக்கள் கெளரவித்தபோது .
வாழ்கையும் தொழிலும்
ஏரம்பமூர்த்தி
திரு.ஏரம்பமூா்த்தி ஐயா அவா்கள் அரச சேவையில் ஆசிரியாக கடமையாற்றியவா். ஏறாவுா், காத்தான்குடி 1ம் குறிச்சி மற்றும் 6 ம் குறிச்சி பாடசாலைகளிலும் சம்மாந்துறைப் பாடசாலையிலும் கடமையாற்றியுள்ளார் அரச பாடசாலைகளில் ஏற்படும் தவிர்க்க முடியாத ஆசிரிய இடமாற்றங்களும், உன்னதமான ஆசிரியா் சேவைக்கு முதன்மை கொடுக்க  முடியாதிருந்தமையும் காரணமாக தனது 44 ம் வயதில் ஆசிரியா் சேவையிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டார்.

பரம்பரையாக வேளாண்மைச் செய்கையில் ஈடுபட்டுள்ள இவா் மண்முனைப்பற்று கமத்தொழில் குழுவினரின் தலைவராக பல ஆண்டுகள் செயற்பட்டு வந்தவா்.

திருவாளா் ஏரம்பமூா்த்தி அவா்களின் வாழ்க்கைச் சிறப்பிற்கு அன்னார் கரம்பிடித்த வயிரமுத்து நேசம்மாவின் பாரிய பங்களிப்பு முக்கிய காரணமாகும். குடும்பப்பொறுப்பினை மனைவியா் தாங்கிக்கொண்டதினாலே அன்னார் தனது சமய சமூகப்பணியை முழுக்கவனத்துடன் மேற்கொள்வதற்கு வாய்ப்பாக அமைந்தது. இவா்களின் இல்லற வாழ்வுக்கு நான்கு செல்வங்கள் பரிசாகின

திருமதி சிவநேசநாயகி பாலசிங்கம் என்ற சிரேஸ்ட புத்திரி ஆசிரியையாக கடமைபுரிந்தவர்

அடுத்த புத்திரனான சுந்தரமூர்த்தி உணவுக்கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்தவர், சுந்தரமூர்த்தி அவர்களே தந்தைக்குப் பின்னர் கந்தசுவாமி கோயிலை தனது இறுதிக்காலம் வரை வண்ணக்கராக இருந்து நிருவகித்தவர்.

இவரது மூன்றாவது புதல்வன் தெட்சணாமூர்த்தி இலங்கையின் உயர்தானிகராக சீனா, ஈராக், பாகிஸ்தான், ஐக்கிய இராட்சியம் ஆகிய நாடுகளில் பணியாற்றியவர். இவரே முதன் முதலில் கிழக்கு மாகாணத்தில் இருந்து இலங்கைக்கான தூதுவராக வெளிநாடுகளில் பணியாற்றியவர் ஆவார். இவரது கனிஸ்ட புதல்வி பரஞ்சோதி பாக்கியராசா ஆசிரியர் அதிபராக மட்டக்களப்பு ஆனைப்பந்தி பெண்கள் பாடசாலையிலும் பின்னர் மட்டக்களப்பு வின்சன் உயர்தர பாடசாலையிலும் அதன் பின்னர் பிரதிக்கல்வி பணிப்பாளராக கடமையாற்றி ஓய்வு பெற்றவர்.

தற்பொழுதும் இவரது கிராமத்தில் இவரது சீடா்களால் புராணபாராயணம் பேணப்பட்டு வருவதன் மூலம் தான் மறைந்தும் தன்னால் செய்யப்பட்ட பணி மறையாமல் இன்றும் ஏரம்பமூா்த்தி வாழ்ந்து வருகி்ன்றார்
.
By – Shutharsan.S

நன்றி- தகவல் மூலம் -ஆரையம்பதி டொட் நெற் இணையம்.
இக்கட்டுரைக்கான தகவல்களையும் படங்களையும் இணையத்திற்கு கிடைக்கச்செய்த ஏரம்பமூா்த்தி அவா்களின் கனிஸ்ட புத்திரி பரஞ்சோதி பாக்கியராசா அவா்களுக்கும் பேரன் செவ்வேள் பாக்கிராசா அவா்களுக்கும் நன்றிகள்.
நன்றி :- http://www.ourjaffna.com

தமிழகத்தில் இதுபோன்று ஓதுவாமூர்த்திகளைப்பற்றிய வரலாறு ஆவணப்படுத்தப்பட்டுள்ளதா?

வலைப்பூ அன்பர்கள் தொடர்புகொள்ள வேண்டுகின்றோம்.

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger