Home » » கவிராயர்கள் நால்வர் -சிறு குறிப்பு

கவிராயர்கள் நால்வர் -சிறு குறிப்பு


திரிகூடராசப்பக் கவிராயர்

இவர் குற்றாலத்துக்கு அருகிலுள்ள "மேலகரம்' என்ற ஊரில் பிறந்தவர். திருவாவடுதுறை ஆதீனம் சுப்பிரமணிய ஞான தேசிகர் இவரின் வழிமுறையினராவார். இவர் இயற்றிய "திருக்குற்றாலக் குறவஞ்சி' நூல், குறவஞ்சி நூல்களுள் தலைசிறந்ததாகப் போற்றப்படுகிறது. இது தவிர, திருக்குற்றாலத் தலபுராணம், மாலை, அந்தாதி, உலா, கோவை, பிள்ளைத்தமிழ் முதலிய சிற்றிலக்கிய நூல்களையும் இயற்றியுள்ளார்.

சீகாழி அருணாசலக் கவிராயர்

இவர் "தில்லையாடி' எனும் சிற்றூரில் பிறந்தவர். சீகாழியில் வசித்த புலவர் சிதம்பரம் பிள்ளை இவருடைய நண்பர். சிதம்பரம் பிள்ளை, பள்ளு நூல் ஒன்றை இயற்றியிருந்தார். அது நிறைவு செய்யப்படாமல் இருக்க, அதை நிறைவு செய்துதரும்படி அருணாசலக் கவிராயரைக் கேட்டுக்கொண்டார். அருணாசலக் கவிராயரும் அதை நிறைவுசெய்து கொடுத்தார். தில்லையாடியில் வசித்துவந்த அருணாசலக் கவிராயர் சிதம்பரம் பிள்ளையின் வேண்டுகோளின்படி சீகாழியில் குடியேறினார். அன்றிலிருந்து "சீகாழி அருணாசலக் கவிராயர்' என்ற பெயர் பெற்றார். இவர் சீகாழிப்புராணம், சீகாழிக்கோவை, அசோமுகி நாடகம், அனுமார் பிள்ளைத்தமிழ், இராமநாடகம் முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.

அமிர்த கவிராயர்

இவர் சிவகங்கையைச் சார்ந்த 'பொன்னங்கால்' எனும் ஊரில் பிறந்தவர். சேது நாட்டை ஆண்ட திருமலை சேதுபதி காலத்தில் வாழ்ந்தவர். ஒருமுறை திருமலை சேதுபதி "அகத்துறையில் ஒரு துறையை பல பாடல்களால் பாட முடியுமா?' என்று கேட்க, "நான் நூறு' பாடுவேன் என்றார் அமிர்தகவி. அவைப் புலவர்கள் "கவிராயர் "நானூறு' பாடல்கள் பாடவேண்டும்' என்றனர். அமிர்த கவிராயரும் "நாணிக் கண்புதைத்தல்' எனும் துறையை எடுத்துக்கொண்டு நானூறு பாடல்களைப் பாடினார். அதைக்கேட்ட அரசர், கவிராயரின் ஊராகிய பொன்னங்காலையே அவருக்குக் கொடையாக வழங்கினார்.

முகவூர் கந்தசாமிக் கவிராயர்

இவர் சேற்றூருக்கு அருகில் உள்ள "முகவூரில்' பிறந்தவர். திருவாவடுதுறை ஆதீனம் சுப்பிரமணிய தேசிகரோடு, தாண்டவராயத் தம்பிரானிடம் கல்வி கற்றவர். முகவூரில் விநாயகர் கோயில் அமைத்து வழிபாடுகளை ஏற்படுத்தியவர்.

நன்றி :- தினமணி, தமிழ்மணி, 21-07-2013

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger