Home » » மனித ஆற்றலை வீணாக்கலாமா? - முனைவர்.ப.சையது இப்ராகீம், புதுவை

மனித ஆற்றலை வீணாக்கலாமா? - முனைவர்.ப.சையது இப்ராகீம், புதுவை
கல்வி என்பது கடைச்சரக்கான பிறகு, எவரும் நினைத்த மாத்திரத்தில், நினைத்த பட்டங்களைப் பெறுவது மிக எளிதாயிற்று. அதனூடே கல்வியின் தரமும் தாழ்ந்து போயிற்று. ஒரு சூழலில், "எம்.பி.ஏ.' என்றால் எட்டாக்கனியாக இருந்த படிப்பு இன்று எவரும் எளிதில் பெறும் நிலைமைக்கு மாறியிருக்கிறது.

கூடவே அதன் மதிப்பும் போய்விட்டது. இது எம்.பி.ஏ. என்ற படிப்பிற்கு மட்டுமல்ல, அநேகமாக அனைத்துப் பட்டப்படிப்புகளுக்கும் இந்த நிலைமைதான். பொறியியல் படிப்பின் நிலையும் இதுதான். மருத்துவத் துறை மட்டும் இன்னும் மவுசு குறையாமல் இருக்கிறது.

(அதுவும் ஏழைக்கு எட்டாக்கனியாகவே உள்ளது.)

மெக்காலேயின் கல்வித் திட்டம் அன்று ஆங்கிலேயர்களுக்குத் தேவையான எழுத்தர்கள், பொறியாளர்கள் போன்றோரை உருவாக்கியது. அந்த நிலைமை இன்றும் தொடர்கிறது.

கணினித் துறையில் பட்டம் பெறும் மாணவர்கள் அனைவரும் வெளி நாட்டில் வேலை என்று பெருமையோடு சொல்லிக் கொண்டாலும், அவர்களின் அறிவு, திறமை, ஆற்றல் அனைத்தும் தாய்நாட்டிற்குச் செலவிடப்படவில்லை என்பதை மறக்க முடியுமா?

 டாலரில் பெறுகின்ற சம்பளம் அவர்களின் கண்களை மூடிவிட்டது என்பதை மறுக்க முடியுமா? இன்றும் நாம் அன்னியர்களுக்குத் தேவையான எழுத்தர்கள், பொறியாளர்கள் போன்றோரைத்தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

அயல்பணி ஒப்படைப்பு மூலம் அதிகமான இளைஞர்களை மேலை நாடுகள் தமது பணிக்கு நியமனம் செய்கின்றன.

ஈடுபாடு குறைந்த கல்வி, வெளிநாட்டுச் சேவகர்களை உருவாக்கும் கல்வி, கற்பது பொருளீட்டவே என்ற மூன்று கருத்துகளும் சிந்திக்கவேண்டியவை.
கல்வியின் மீது பதிந்திருக்கும் நமது பார்வை முற்றிலும் மாறுபடவேண்டும்.

மருத்துவம், பொறியியல், ஐ.டி. துறை சார்ந்த படிப்புகள் மூலம் அதிகம் சம்பாதிக்க முடியும் என்பதே இன்றைய பெரும்பாலான மக்களின் மனோநிலை.

மெடிக்கல் "கட்-ஆஃப்' குறைந்து விட்டது, பிடிஎஸ் - பல்மருத்துவப் படிப்புதான் கிடைக்கும் என்றால், மாணவனுக்கும், பெற்றோருக்கும் மன நிம்மதியில்லை. காரணம் எம்.பி.பி.எஸ். படித்து கிடைக்கும் சம்பளம் போல் பிடிஎஸ் - பல் மருத்துவப் படிப்பில் சம்பாதிக்க முடியாது என்பதே. சமூக அந்தஸ்து என்கிற துணைக் காரணமும் உண்டு. இந்நிலைமை அனைத்துத் துறைசார்ந்த கல்விக்கும் பொருந்தும்.

எந்தப் படிப்பு படித்தால் எளிதில் வேலையும், அதிகச் சம்பளமும் கிடைக்கும் என்பதே இன்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் தேடலாக இருக்கிறது. பணத்தை மையமாகக் கொண்டு இன்றைய மக்கள் கல்வியைத் தேடுவதால், கல்வியின் அசல் நோக்கம் அழிந்துவிடுகிறது.

இதன் காரணமாக சில குறிப்பிட்ட துறையைத்தான் மக்கள் விரும்புகின்றனர். பொறியியல் படித்தால் கண்டிப்பாக வேலை கிடைக்கும் என்கிற தவறான சிந்தனையே காளான்களைப்போல் பொறியியல் கல்லூரிகள் இன்று உருவாகக் காரணமாகும்.

இவ்வாறு குறிப்பிட்ட பட்டப்படிப்புகளை மட்டுமே படித்து வந்தாலும் அனைவரும் வேலை வாய்ப்பு பெறுகின்றனரா என்றால், இல்லை என்பதே உண்மை.

இவ்வாண்டில் மட்டும் நாடு முழுவதும் 3,000-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளிலிருந்து 15 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் வெளிவந்திருக்கிறார்கள். இவர்களில் எத்தனை பேர் வேலைக்கு அமர்த்தப்படுவர்?

கல்வித் துறையில் ஏன் இந்த பாரபட்சம் கடைப்பிடிக்கப்படுகிறது? மருத்துவம் மற்றும் பொறியியல் துறைக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் கலை-அறிவியல் துறைக்குக் கொடுக்கப்படுவதில்லை, ஏன்?

அரசும், ஊடகங்களும் தொடர்ந்து அதிக வரவேற்புள்ள துறை என்று ஒரு சில கல்வித்துறைக்கு மட்டும் கொடுக்கின்ற முக்கியத்துவம் காரணமாக மற்ற கல்வித்துறைகளில் மாணவர்களுக்கு ஆர்வமின்மையைத் தோற்றுவிக்கிறது.

இதனால்தான் மருத்துவம், பொறியியல் மற்றும் ஐ.டி. துறை தவிர மற்ற கலை-அறிவியல் துறைக்கு வருகின்ற மாணவர்கள் மதிப்பெண் குறைவாக வாங்கிய மாணவர்களாகவும், "வேறு வழியில்லை கிடைத்ததைப் படிப்போம்' என்கிற மனநிலையிலும் உள்ளனர். எந்தக் கல்வியும் வீணாவதில்லை, எந்தத் துறையில் படித்தாலும் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையை ஊட்டுவதில் அரசு மற்றும் ஊடகங்களுக்கு முக்கியப் பங்குண்டு.

பட்டப்படிப்பு படித்து வெளிவரும் மாணவர்கள் தாங்கள் படித்த பாடங்கள் தவிர மற்ற பாடங்களில் குறைந்தபட்ச அறிவைக் கூடப்பெறுவதில்லை. பொறியியல் படிக்கும் மாணவனுக்கு உயிரியல் குறித்து விழிப்புணர்வு கிடையாது. உயிரியல் படிக்கும் மாணவனுக்குக் கணித அறிவு கிடையாது. பொருளாதார மாணவர்கள் புள்ளியியல் குறித்து அறிவதில்லை.

வடமாநிலங்களில் பெருவாரியான பல்கலைக்கழகங்கள் இளங்கலை பட்டப்படிப்புகளில் கணிதம் அல்லது வேதியியல் அல்லது இயற்பியல் போன்ற பாடங்கள்கூட இல்லாமல் மாணவர்களுக்குப் பட்டம் வழங்குகின்றன. இத்தகைய மாணவர்கள் மேற்கண்ட பாடங்களின் அடிப்படை அறிவுகூட இல்லாமல் மேற்படிப்பு எவ்வாறு மேற்கொள்ள முடியும்?

ஒரு துறையில் தேர்ச்சிபெற்ற மாணவர்கள் மற்ற துறைகளில் பயிலவேண்டும் என்றால் அதற்கான வாய்ப்பு பெறும்படி நமது கல்வித் திட்டம் அமைய வேண்டும். இதன்மூலம் எல்லாத் துறைகளிலும் மாணவர்கள் அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்வதுடன், வேலை வாய்ப்புகளுக்குத் தனது துறையையே சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போகும்.

அதுமட்டுமின்றி ஆராய்ச்சியில் ஈடுபட விரும்பும் மாணவர்கள் அனைத்துத் துறைகளின் அடிப்படை அறிவைப் பெற்றிருப்பது அவசியமாகும்.
வெளிநாடுகளில் ஆராய்ச்சித் துறையில் அதிக முன்னேற்றம் அடைவதற்கு அடிப்படைக் காரணம் இதுவே.

அங்கே மாணவர்கள் எல்லாத் துறைகளிலும் அடிப்படை அறிவைப் பெற வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஆராய்ச்சி நிறுவனங்களிலிருந்து அரசு வரை மாணவ ஆற்றலை வளர்ப்பதிலும், பயன்படுத்துவதிலும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றனர்.

 நம் நாட்டில் வகுக்கப்படும் கல்விக் கொள்கையும் இத்தகைய சூழலை எதிர் நோக்கி அமைய வேண்டும். கல்வியானது நமது நாட்டிற்குத் தேவையான மாணவர்களை உருவாக்க வேண்டும். இல்லையென்றால் நாம் இன்னும் 90-களில் வாழ்வதாகத்தான் தோன்றுகிறது.

கல்வியில் கடைப்பிடிக்கப்படும் பாரபட்சம் களையப்பட வேண்டும். ஒவ்வொரு வருடமும் வெளிவருகின்ற மாணவர்களின் ஆற்றலை எந்தத் துறையில் பயன்படுத்தலாம், எந்தத் துறையில் தேவை அதிகமிருக்கிறது எத்தகைய மாணவர்களை உருவாக்கவேண்டும் என்று அரசு திட்டமிட வேண்டும்.

இல்லையென்றால் இந்த மனித ஆற்றல், அயல்பணி ஒப்படைப்பு மூலம் வெளிநாடு செல்வதைத் தடுக்க இயலாது. நமது கல்வி நிறுவனங்களின் விளம்பரமே, திறமையான மாணவர்கள் வெளிநாடுகளுக்கு எளிதில் செல்ல முடியும் என்கிற ரீதியில் அமைந்திருப்பது கவலைக்குரிய ஒன்று.

புற்றீசலாய்ப் பெருகிவரும் கல்வி நிறுவனங்களும், சுயநிதிக் கல்லூரிகளும் தரமான மாணவர்களை நாட்டுக்காக உருவாக்குவதில் போட்டி போடவேண்டும்.

வணிக நோக்கில் செயல்படும் கல்வி நிறுவனங்கள் நாட்டிற்குத் துரோகமிழைக்கின்றன என்றால் அது மிகையாகாது.

தமிழகத்தில் கிட்டத்தட்ட 11,000-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன; 438 அரசு மற்றும் தனியார் கலை-அறிவியல் கல்லூரிகளும், 565 பொறியியல் கல்லூரிகளும், 18 அரசு மற்றும் 11 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன.

இவ்வாண்டு 7.04 இலட்சம் மாணவர்கள் "பிளஸ்-2' தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 28,785 விண்ணப்பங்கள் மருத்துவக் கல்லூரிகளில் பெறப்பட்டன. மீதி மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளிலும், கலை-அறிவியல் கல்லூரிகளின் வாசல்களிலும் காத்துக்கிடக்கின்றனர் என்று நம்பலாம்.

இதில் எத்தனை லட்சம் மாணவர்கள் மேற்படிப்பைக் கைவிடுவார்கள் என்பதற்கு இதுவரை எந்தப் புள்ளிவிவரமும் நம்மிடம் இல்லை.

ஆண்டுதோறும் "பிளஸ்-2' தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதேபோல் கல்லூரிப் படிப்பை முடித்து வெளிவருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

ஆனால் இவர்கள் அனைவரும் வேலையில் சேர்கின்றனரா, இவர்கள் நிலைமை என்னவாகும் என்பது பற்றி அரசோ அல்லது மக்களோ கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அரசு நிர்வாகத்தின் முக்கியப் பணி இங்கு தேவைப்படுகிறது.

மக்களின் தேடல் எந்தத் துறையில் அதிக வரவேற்பு இருக்கிறது என்பதுதான். எந்தத் துறையில் அதிக வரவேற்பு இருக்கிறது என்பதை விட, எந்தத் துறைக்கு மனிதஆற்றல் தேவைப்படுகிறது,

எங்கு தேவையில்லாமல் மனிதஆற்றல் வீணாகிறது என்பதைக் கணிக்கவும், மாறுதலுக்கு உட்படுத்தவும், அரசு மற்றும் கல்வித்துறை முயலவேண்டும். நமது நாட்டிற்குப் பன்முகத்திறன் கொண்ட மனிதவளம் உருவாவது அரசின் திட்டமிட்ட செயல்பாட்டில் தான் அடங்கும்.

மருத்துவம் மற்றும் பொறியியல் வல்லுநர்கள் மட்டுமே நாட்டின் தேவையல்ல. நமது நாட்டிற்குக் கலை-அறிவியலிலும் வல்லுநர்கள் தேவை. வரலாற்று நிபுணர்கள் தேவை, புவி - தகவலியல், விவசாயம்-பாசனப் பொறியியல், உயிர் - தகவலியல் என்று ஒவ்வொரு துறையிலும் நிபுணர்கள் உருவாக்கப்பட வேண்டும்.

இவ்வாறு உருவாகும் மாணவர்களை ஆராய்ச்சிக்கும், வேலை வாய்ப்புகளுக்கும் பயன்படுத்துவது அரசின் கடமை. நமது நாட்டில் உருவாகும் மனித ஆற்றல் அன்னிய நாடுகளில் பணிபுரியச் செல்லுமானால் அது அரசின் செயல்படாத - அவலமான தன்மையை வெளிப்படுத்துகிறது.                                   

நன்றி :- முனைவர் ;ப.சையது இப்ராகீம், புதுவை பல்கலைக் கழகம்
                 கருத்துக்களம், தினமணி, 29-07-2013

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger