Home » » கவிராயர் அறுவர்

கவிராயர் அறுவர்


 முகவூர் மீனாட்சிசுந்தரக் கவிராயர்

இவர் முகவூர் கந்தசாமிக் கவிராயருடைய மகன். சேற்றூர் சமஸ்தானப் புலவராக விளங்கியவர். வண்டு விடு தூது, முருகர் அநுபூதி, திருப்பரங்குன்றம், குதிரைமலை பதிகங்கள் முதலிய நூல்களையும் பல தனிப்பாடல்களையும் இயற்றியுள்ளார்.

திருக்குருகைப் பெருமாள் கவிராயர்

இவர் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் பிறந்தவர். இயற்பெயர் சடையன். இவர் முன்னோர்கள் திருக்கோயில் புலவர்களாக விளங்கியதால், "திருக்குருகைப் பெருமாள் கவிராயர்' என்ற பெயரே இவர் வழிவந்தோர்க்கு வழங்கப்பட்டு, இயற்பெயர் மறைந்துவிடும்.

இவரும் தன் தந்தையாருக்குப் பிறகு கோயில் புலவராக இருந்தவர். மாணவர்களுக்குப் பாடம் கற்பித்தும், பழந்தமிழ் நூல்களைத் தேடிச் சேகரித்து, பாதுகாத்தும் வந்தவர். ஆதிநாதபட்டரின் வேண்டுகோளுக்கு இணங்க

வடமொழியில் இருந்த குருகூர் மான்மியத்தை தமிழில் "திருக்குருகூர் மான்மியம்' என்ற பெயரில் கி.பி.1548-இல் இயற்றியுள்ளார். மேலும், நம்பெருமாள் மும்மணிக்கோவை, மாறன் கிளவிமாலை, மாறன் அலங்காரம், மாறன் அகப்பொருள் முதலிய நூல்களையும் இயற்றியுள்ளார்.

பன்னிருகைப்பெருமாள் கவிராயர்

இவர் பத்தைபண்டிதன் குறிச்சி என்னும் ஊரைச் சேர்ந்தவர். குலசேகரநாதக் கவிராயரின் மகன். திருச்செந்தூர் "கந்தர் அற்புதமாலை' எனும் நூலை (மூன்று பாகங்கள்) இயற்றியுள்ளார்.

அ. குழந்தைக் கவிராயர்

இவர் குன்றக்குடியில் பிறந்தவர். குன்றக்குடி முருகன் மீது தினம் ஒரு பாடல் பாடி, "தினகவிதை' என ஒரு நூலை இயற்றியுள்ளார்.

குமார கவிராயர்

இவர் ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்தவர். சண்முகக் கவிராயரின் மகன். இவரைக் குமாரகவிகள் என்றும் அழைப்பர். குமரகுருபர சுவாமியின் உடன்பிறந்த சகோதரர் இவர். குமரருபரரின் பாடல்களை ஏட்டில் எழுதும் பணியை இவரே புரிந்து வந்துள்ளார். மதுரை மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ் அரங்கேற்றத்தின்போது அந்நூலை இவரே படித்தார் என்றும் கூறுவர்.

அரங்கநாதக் கவிராயர்

இவர் புதுவையைச் சேர்ந்தவர். நல்லாப்பிள்ளை பாரதத்தையும், பிரகலாதன் நாடகத்தையும் உரைநடையில் இயற்றியுள்ளார்.                                                           

நன்றி :- தமிழ்மணி, தினமணி, 04-08-2013

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger