Home » » எய்ட்ஸ், தொழுநோய் :- கட்டுப்படுத்தும் கண்டல் மரங்களல்ல; கைகள் !

எய்ட்ஸ், தொழுநோய் :- கட்டுப்படுத்தும் கண்டல் மரங்களல்ல; கைகள் !

சதுப்பு நிலக் காடுகளை வளர்ப்பதில் நாம் அக்கறை காட்டினால் இயற்கைப் பேரிடர்களிலிருந்து நாம் தப்பிக்கலாம். இந்த விழிப்புணர்வு கடலோர மாவட்டங்கள் முழுவதும் கடந்த (ஜூலை 26) வாரம் எதிரொலித்தது. கண்டல் மரங்களை வளர்ப்பதின் அவசியம் குறித்து சிதம்பரம், பரங்கிப்பேட்டையில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின உயராய்வு மைய உதவிப் பேராசிரியர் முனைவர் டி.ராமநாதனிடம் பேசினோம்:

 ""சுனாமி பேரழிவின் போது பெரும்பாலான உயிர் சேதத்தை தடுத்து, பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காத்த பெருமையோடு கடல் நீரின் மேல் கூட்டமாய்க் கரம் கோர்த்து நிற்பவை கண்டல் மரங்கள். அலையாத்தி காடுகள் என்றழைக்கப்படும் இவை கடலும் ஆறும் கலக்கும் உவர் நீர் நிலைகளில் வளரும் தன்மை கொண்டவை.

 கடல் அலைகளின் வேகத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டவையாதலால் அலையாத்திக் காடுகள் என்ற காரணப் பெயரோடு விளங்குகின்றன.

 உலகின் மிகப்பெரிய சதுப்பு நிலக்காடுகள் மேற்கு வங்காளத்தில் உள்ள சுந்தரவனக் காடுகளாகும். இவை தவிர, இந்தியாவில் குஜராத், அந்தமான், நிக்கோபார், ஆந்திரா, ஒரிசா, மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் இக்காடுகள் பரவியுள்ளன.

 தமிழ்நாட்டில் சிதம்பரம் அருகே வங்கக் கடலை ஒட்டிய பகுதியான பிச்சாவரத்தில் 2800 ஏக்கரில் அலையாத்தி காடுகள் உள்ளன. மேலும் தமிழகத்தில் முத்துப்பேட்டை, கோடியக்கரை, பள்ளிக்கரணை, பழவேற்காடு பகுதிகளிலும் இக்காடுகளைக் காணலாம்.

 கழுதை முன்னி, நரிக்கண்டல், வெண்கண்டல், பன்னுக்குத்தி, கருங்கண்டல், சிறுகண்டல், தில்லை, திப்பரந்தை, நெட்டை, சுரபுண்ணை, குட்டை சுர புண்ணை, மலட்டு சுரபுண்ணை, சோமுந்திரி உள்ளிட்ட மரங்கள் இக்காடுகளில் அதிகமாக உள்ளன.
இவை செப்டம்பர் முதல் நவம்பர் வரை பூக்கும் தன்மை கொண்டவை. 
இம்மரங்களின் மருத்துவப் பயன்கள் உலகிற்கு இன்னுமோர் அதிசயமாக திகழ்கின்றன. எய்ட்ஸ், தொழுநோய் உள்ளிட்ட உயிர்க்கொல்லி நோய்களையும் கட்டுப்படுத்தும் வல்லமை கொண்ட வேதிப்பொருள்களை 
 ( Secondary Metabolites )  உள்ளடக்கியவை இவை.
 கண்டல் மரங்களின் இலை, நுனி, காம்புகள் முதல் வேர் வரை மருத்துவத்திற்காக பயன்படுகின்றன.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கடல்வாழ் உயிரியல் உயராய்வு மையத்தின் இயக்குநர் முனைவர் பேராசிரியர் க.கதிரேசன், சதுப்பு நிலக்காடுகளின் பரப்பளவை அதிகமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இக்காடுகளை வளர்க்க பல்வேறு உத்திகளை இம்மையம் கண்டறிந்துள்ளது. நிகழ்காலத்தில் நாம் வளர்க்கும் சதுப்புநில மரங்கள் எதிர்காலத்தில் நம் உயிர்காக்கும் கரங்கள் என உணர்ந்து கடலோர பகுதிகளில் கண்டல் மரங்களை வளர்த்து வருங்கால சந்ததியினருக்கு வளமான பூமியை பரிசளிப்போம்'' என்றார் டி.ராமநாதன்.

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger