Home » » காஸ் சிலிண்டர் வெடித்து தாய், மகள் சாவு

காஸ் சிலிண்டர் வெடித்து தாய், மகள் சாவு


ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை காஸ் சிலிண்டர் வெடித்ததில் தாய், மகள் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் தீயணைப்பு வீரர் உள்பட இருவர் படுகாயம் அடைந்தனர்.

ஈரோடு வளையக்கார வீதியை சேர்ந்தவர் வரதராஜ் (45). ஊர்க்காவல் படையில் கமாண்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சொந்தமான குடியிருப்பு வளாகம் வளையக்கார வீதியில் உள்ளது. இங்கு இவரது வீடு உள்பட 14 வீடுகள் உள்ளன.

வரதராஜ் வீட்டுக்கு எதிர் வீட்டில் அவரது தாய் சரஸ்வதி (85), சகோதரி மகாலட்சுமி (50) ஆகியோர் வசித்து வந்தனர்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு சரஸ்வதி வீட்டிலிருந்து புகை வெளியேறியது. இதைத் தற்செயலாகப் பார்த்த வரதராஜ், பக்கத்து வீடுகளில் உள்ளவர்களை தட்டி எழுப்பினார். பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் எழுந்து வீடுகளில் இருந்து வெளியேறினர்.

 ஆனால், சரஸ்வதியின் வீட்டை தட்டியும் வெகுநேரமாக அவர் வெளியே வரவில்லை. ம்சரஸ்வதியின் வீட்டை வரதராஜ் தட்டிக்கொண்டிருந்தபோது திடீரென வீட்டில் இருந்த காஸ் சிலிண்டர் வெடித்தது.

இச்சம்பவத்தில் சரஸ்வதியும், மகாலட்சுமியும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தனர். தீக்காயத்துடன் தூக்கிவீசப்பட்ட வரதராஜ், படுகாயம் அடைந்தார். சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் சரஸ்வதி மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்த சபியா என்பவரது வீடும் இடிந்தது.

இது பற்றிய தகவல் அறிந்த ஈரோடு கோட்ட தீயணைப்பு அலுவலர் மதியழகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் தீயணைப்பு வீரர் ராஜ்குமார் தீக்காயம் அடைந்தார். தீக்காயம் அடைந்த வரதராஜ், ராஜ்குமார் ஆகியோர் சிகிச்சைக்காக கோவைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இச்சம்பவத்தில் 15 வீடுகளின் மின்சார ஒயர் எரிந்துவிட்டது. பல வீடுகளில் கீறல் விழுந்துள்ளது. மின்கசிவு காரணமாக சிலிண்டரில் தீப்பற்றி வெடித்துவிட்டதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

இச்சம்பவம் தொடர்பாக ஈரோடு நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பொதுப்பணித் துறை அமைச்சர் கே.வி.இராமலிங்கம், மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் சு.கணேஷ், ஈரோடு மேயர் ப.மல்லிகா பரமசிவம், துணை மேயர் கே.சி.பழனிசாமி ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

செய்தி :-தினமணி, 19-08-2013

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger