Home » » இஞ்சினீயரிங் படிப்பின் மோகம்

இஞ்சினீயரிங் படிப்பின் மோகம்


Image

வருடத்திற்கு சராசரியாக 7 லட்சம் மாணவர்கள் +2வில் தேர்ச்சி பெற்று மருத்துவம், மற்றும் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ், டிப்ளமோ போக மீதமுள்ளவர்கள் இன்ஜினீயரிங் படிப்பில் மேனேஜ்மென்ட் மற்றும் கவுன்சிலிங் மூலமாக வருடத்திற்கு 525 கல்லூரிகள் மூலமாக படிக்கின்றனர். இதில் வருடத்திற்கு சுமார் 1,25,000 மாணவர்கள் தமிழகத்திலிருந்து மற்றும் இன்ஜினீயர்களாக வெளிவருகின்றனர். எல்லா வசதிகளும், தகுதிகளும் பெற்றுள்ள கல்லூரிகளில் சேர மாணவர்களும், பெற்றோர்களும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். விரும்பும் பிரிவு, விரும்பும் கல்லூரி என தேர்வு செய்வதில் பெற்றோரும், மாணவர்களும் பகீரத பிரயத்தனமே செய்கின்றனர். ஆனால் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே தீர்வும் அமைகிறது. இதுபோக சிலருக்கு விரும்பிய பிரிவு கிடைத்தும், விரும்பிய கல்லூரி கிடைக்காது, சிலருக்கு விரும்பிய கல்லூரி கிடைத்தும் விரும்பிய பிரிவு கிடைக்காது. இருந்தாலும் சிலர் ஏதோ கிடைத்ததே என்று கிடைத்ததைக் கொண்டு படித்துவிட்ட வருவோரும் உண்டு.

÷கல்லூரியைவிட்டு வெளிவரும் மாணவர்கள் அனைவருக்கும் காம்பஸ் எனும் வளாகத் தேர்வில் வெற்றி பெறுவதில்லை. ஐ.ஐ.டி. போல சேர்ந்த மாணவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு உறுதி செய்யுமளவிற்கு எல்லா கல்லூரிகளிலும் தகுந்த கட்டமைப்பு இல்லை என்பதே உண்மை. இதுபோக காம்பஸில் தேர்வானவர்கள் போக பாக்கி உள்ள அனைவருக்கும் கல்லூரியை விட்டு வெளியே வரும்போது வேலைவாய்ப்பு உள்ளதா? அதுவும் அவர்கள் படித்த துறையிலேயே உள்ளதா? ஏற்கெனவே கல்லூரி காம்பஸில் தேர்வானவர்களில் கூட அவரவர் படித்த படிப்பில் தேர்வானவர்கள் மிகச் சிலரே என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். ஏனெனில் படித்தது ஒன்று, தேர்வானது மற்றொன்று. மெக்கானிக்கல் முடித்திருப்பார் ஆனால் சாப்ட்வேர் கம்பெனிக்கு தேர்வாகியிருப்பார். அதைப்போல படித்தவர் அனைவருக்கும் அரசுத் துறைகளில் (மத்திய, மாநில) வேலைவாய்ப்பு என்பதும் சாத்தியமில்லாத விஷயம். படிக்கும்போதே சொந்தமாக தொழில் தொடங்கி நமக்கும் நாட்டிற்கும் பயன்பட வேண்டும் என்று படிப்பவர்கள் எத்தனை பேர்? ஒருவழியாக தொழில் தொடங்க ஆர்வமுடன் வருபவர்களுக்கு, அரசு செய்யும் உதவிகள், அணுக வேண்டிய நபர்கள் என அவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் கவுன்சிலிங் போன்று ஒரே இடத்தில் நடைபெற்று மாணவர்களை கல்லூரிகளுக்கு அனுப்புவதைப் போல அவர்கள் தொடர்பு கொள்ள வேண்டியவர்களை தொடர்பு கொள்ள வசதிகள் செய்து கொடுத்தால் அவர்களுக்கும், மற்றும் நமது நாட்டின் எதிர்காலம் வளம்பெற செய்ய வசதியாக இருக்கும். இல்லையென்றால் இங்கு போ! அங்கு போ! என இழுத்தடித்தால் அவர்களின் ஆர்வம் கடைசிவரை நீண்டுபோகுமா? என எண்ணிப் பார்க்க வேண்டும்.

÷வங்கித் துறையாகட்டும், அரசுத் துறையாகட்டும், காப்பீட்டு துறையாகட்டும், ஆட்சியர் மற்றும் இராணுவத் துறை அதிகாரிகள் பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்திருந்தாலே தேர்வெழுதி, தேர்ந்தவர்களை பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம்! ஆனால் தற்போது நடப்பது என்ன என்றால் பெரும்பாலான இடங்களுக்கு இன்ஜினீயரிங் முடித்தவர்களே தேர்ச்சி பெற்று வருவதைப் பார்க்கிறோம்.


படித்த படிப்பில் தொடர்ந்து படிக்கும்போது அல்லது வேலை செய்யும்போது மட்டுமே எண்ணற்ற சாதனைகளை செய்ய முடியும் என்பதுதான் நிதர்சன உண்மை. ஆனால் நட ப்பது என்னவோ வேறுவிதமாக உள்ளது. கல்லூரிகளில் படிக்கும்போது அதிக மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்து விடுகிறது. குறைந்த மதிப்பெண் பெறுபவர்களின் கதி என்ன? 40% முதல் 80% வரை பெறும் (மதிப்பெண்கள்) மாணவர்களை அவர்கள் தகுதிக்கேற்ப பயிற்சி கொடுத்து அவர்களையும் தகுதியுள்ள நிறுவனத்தில் சேர்க்க அரசோ, அல்லது தனியார் நிறுவனங்களோ அல்லது அந்தந்த கல்லூரிகளோ முன்வர வேண்டும். அதன் மூலமாக வேலைவாய்ப்பையும் உறுதி செய்ய முடியும் அல்லவா!

÷அளவுக்கதிகமான இன்ஜினீயரிங் கல்லூரிகள் இருப்பது, தரமான, தகுதியான மாணவர்களை உருவாக்க, வளமான தேசத்தை உருவாக்கவா? அல்லது நாம் இவ்வளவு தொகை செலவு செய்து கல்லூரியை கட்டிவிட்டோம்; வருடா வருடம் நமக்கு இவ்வளவு தொகை வரவு வரவேண்டும் என நிர்ணயம் செய்து கட்டப்பட்டுள்ளதா? என்று புரிய நமக்கு இன்னமும் எவ்வளவு காலம் ஆகுமோ? இன்ஜினீயரிங் படித்தவர்களில் வேலைவாய்ப்பு பெற்றவர்கள் அதிகமா? அல்லது பெறாதவர்கள் அதிகமா? பெறாதவர்கள் அதிகம் என்றால் வேலைவாய்ப்புகள் குறைவா? அல்லது படித்தவர்களில் தகுதியானவர்கள் இல்லையா? பெரும் வேலைவாய்ப்பு நிறுவனங்களின் அதிகாரிகள் செய்திகளில் பேசும்போது படித்தவர்கள் அதிகம் இருந்தாலும் தகுதியானவர்கள் குறைவு என்கிறார்கள்? ஏன் இந்த நிலை? இதற்கு யார் பொறுப்பு? தகுதியான கல்லூரிகளுக்கு தரச்சான்று, நிர்வாகத் திறன், தகுதி போன்றவற்றை நிர்ணயிக்கும்போது, தகுதி குறையும்போது யாரிடம் முறையிடுவது?

÷படித்த அனைவருக்கும் வேலைவாய்ப்பை பெற்றுத் தந்தால் அவரவர் வாழ்க்கை தரம் உயர எதிர்காலம் சிறக்க வழி வகுக்கலாம். இல்லையென்றால் விளையாட்டு போட்டிகளில் முதலில் வரும் மூன்று பேருக்கு மட்டும் பரிசு அறிவித்துவிட்டு மற்றவர்களுக்க ஒன்றுமில்லை என்று சொல்வதுபோல் அமைந்துவிடும்.

ஆர். பாண்டியன், அணைக்கட்டுச்சேரி,சென்னை-72.


நன்றி: தினமணி, 02-09-2013-

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger