Home » » டீசல் டேங்க் வெடித்ததால் சொகுசு பஸ் தீப்பிடித்து 45 பயணிகள் கருகிச்சாவு; BG-HYD

டீசல் டேங்க் வெடித்ததால் சொகுசு பஸ் தீப்பிடித்து 45 பயணிகள் கருகிச்சாவு; BG-HYD


பெங்களூரூவிலிருந்து ஹைதராபாத் சென்ற சொகுசுபஸ்
வரலாறு காணாத விபத்து

ஐதராபாத்,

அதிக வேகத்தால் விபத்தில் சிக்கிய தனியார் சொகுசு பஸ்சின் டீசல் டேங்க் வெடித்து, பஸ் கொழுந்து விட்டு எரிந்தது. இந்த கோர விபத்தில் 45 பயணிகள் உடல் கருகி பலியானார்கள்.

நெஞ்சை உருக்கும் இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு–

தனியார் சொகுசு பஸ் 

கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து, ஆந்திர மாநிலம் ஐதராபாத்துக்கு தனியார் சொகுசு (வால்வோ) பஸ் நேற்று இரவு 11 மணி அளவில் புறப்பட்டுச்சென்றது. இந்த பஸ்சில் தீபாவளி விடுமுறைக்காக சென்றவர்கள் அதிக அளவில் பயணம் செய்தனர்.

50 பயணிகள், டிரைவர் மற்றும் கிளீனர் உள்பட 52 பேர் அந்த பஸ்சில் பயணம் செய்தனர். காலை 5.10 மணி அளவில், ஆந்திரா மாநிலம் மெகபூப் நகர் அருகே ஒரு தரைப்பாலத்தில் பஸ் சென்று கொண்டு இருந்தது.

டீசல் டேங்க் வெடித்து தீப்பிடித்தது 

அப்போது அந்த பஸ்சின் டிரைவர், முன்னால் சென்ற மற்றொரு வாகனத்தை முந்திச்செல்ல முயன்றார். மணிக்கு 130 முதல் 140 கிலோ மீட்டர் வேகத்தில் முந்திச்சென்றபோது சாலையின் தடுப்புச்சுவரில் பஸ் பயங்கரமாக மோதியது.

மோதிய வேகத்தில் பஸ்சின் டீசல் டேங்க் வெடித்துச்சிதறி, பஸ்சில் குபீர் என்று தீப்பற்றிக்கொண்டது. சிறிது நேரத்தில் பஸ் முழுவதும் தீ பரவியது. அதிகாலை நேரத்தில் தூங்கிக்கொண்டு இருந்த பயணிகள் அலறியடித்தபடி, ‘‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’’ என்று அபயக்குரல் கொடுத்தனர். பஸ்சின் முன் பக்கம் மட்டுமே வாசல் கதவு இருந்தது.

கொழுந்து விட்டு எரிந்த பஸ் 

ஆனால், பஸ்சில் டிரைவர், கிளீனர்கள் இருந்த முன்பகுதி பூட்டப்பட்டு இருந்ததால், உடனடியாக பயணிகளால் கதவை திறக்க முடியவில்லை. அவசரமாக தப்பிச்செல்ல உதவும் ஜன்னல் கண்ணாடிகளை உடைப்பதற்கான சுத்தியல் அருகில் இல்லாததால், கண்ணாடிகளையும் உடைக்க முடியவில்லை.

அதிகாலை நேரம் என்பதால், சாலையிலும் அதிகமான மக்கள் நடமாட்டம் இல்லை. இதனால் கொழுந்து விட்டு எரிந்த பஸ்சில் சிக்கித்தவித்த பயணிகளை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. 30 நிமிடங்களுக்குள் பஸ் முழுவதும் எரிந்து சாம்பலாகி விட்டது. பஸ்சின் டிரைவர் பெரோஸ்கான், கிளீனர் ரியாஸ் மற்றும் 5 பயணிகள் மட்டுமே, தீக்காயங்களுடன் கண்ணாடிகளை உடைத்து வெளியே குதித்து உயிர் தப்பினார்கள்

45 பேர் உயிரோடு கருகி பலி 

மற்ற 45 பயணிகளும் பஸ்சுக்குள்ளேயே உயிரோடு எரிந்து கரிக்கட்டையாக பிணமானார்கள். இறந்தது ஆணா, பெண்ணா என்று அடையாளம் காண முடியாத அளவுக்கு உடல்கள் கருகிப்போய் விட்டன. உயிர் தப்பிய டிரைவர், கிளீனர் உள்பட 7 பேரும் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

பெங்களூர்–ஐதராபாத் தேசிய நெடுஞ்சாலையில், ஐதராபாத்தில் இருந்து 140 கிலோ மீட்டர் தூரத்தில் பாலிம் என்ற இடத்தில் இந்த கோர விபத்து நடந்தது 

தகவல் அறிந்ததும், மெகபூப் நகர் மாவட்ட கலெக்டர் கிரிஜா சங்கர் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்று விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர்.

மரபணுச் சோதனை மூலம் அடையாளம் 

விபத்தில் பலியானவர்கள் அடையாளம் தெரியாத அளவுக்குக் கருகி இருப்பதால், மரபணு சோதனை நடத்தப்பட்டு, உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று, அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக, டாக்டர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் விபத்து நடந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

பஸ் பயணிகளில் 33 பேர் இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். அவர்கள் பெயர் விவரம் உடனடியாக வெளியிடப்பட்டது. மற்றவர்கள், ஐதராபாத்திலோ, அல்லது வழியிலோ ஏறி இருக்கலாம் என்பதால், அவர்களை அடையாளம் காணுவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.
விபத்து நடந்த இடத்திற்கு வந்த பயணிகளின் உறவினர்கள், கருகிய உடல்களை அடையாளம் காண முடியாமல் கதறி அழுதபடி இருந்தனர்.

உயிர் தப்பிய பயணி பேட்டி 

விபத்தில் உயிர் தப்பிய பயணி ஒருவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘பஸ் தீப்பிடிக்கும்போது அனைத்து பயணிகளும் தூங்கிக்கொண்டு இருந்தனர். சிலர் பஸ்சின் ஜன்னல் கண்ணாடிகளை உடைக்க முயன்றோம். ஆனால், அவற்றை உடைக்க முடியவில்லை. உடனே அவசர வழி கண்ணாடியை உடைத்து உயிர் தப்பினோம்’’ என்று தெரிவித்தார்.

பஸ் தீப்பிடித்தும், தீக்காயங்களுடன் டிரைவர் பெரோஸ்கான் முதலில் வெளியில் குதித்து உயிர் தப்பி விட்டார். அவருக்கு அருகில் இருந்த கிளீனர் ரியாஸ் உதவி கேட்டு அலறினார். அப்போது பஸ்சுக்கு பின்னால் வந்து கொண்டு இருந்த மற்றொரு காரின் டிரைவர், பக்கவாட்டு கண்ணாடியை உடைத்து அவரை மீட்டார்.

தீப்பிடித்தபடி ஓடிய பஸ் 

விபத்து நடந்த பாலிம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர், தான் நேரில் பார்த்த கோரக் காட்சி பற்றிக் கூறியதாவது–

‘‘திடீரென்று டயர் வெடித்தது போன்ற பயங்கர சத்தம் கேட்டதும், ரோட்டுக்கு வந்த நான் திரும்பிப்பார்த்தேன். அப்போது தீப்பிடித்தபடி ஒரு பஸ் ஓடிக்கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியுடன் அந்த பஸ்சை நோக்கி நாங்கள் ஓடினோம். எங்களால் பஸ் அருகே நெருங்க முடியவில்லை.

உள்ளே இருந்த பயணிகள் கண்ணாடி வழியாகக் காப்பாற்றும்படி அழைத்ததைப் பார்க்க முடிந்தது. ஆனால், எங்களால் எதுவும் செய்யாமல் பதறத்தான் முடிந்தது. 10 நிமிடங்களுக்குள் பஸ் முற்றிலும் எரிந்து சாம்பலாகிவிட்டது. உதவி கேட்டு எழுந்த பயணிகளின் சத்தமும் அடங்கிவிட்டது. இப்படி ஒரு பயங்கர துயரத்தை என் வாழ்நாளில் சந்தித்ததே இல்லை’’.

இவ்வாறு அவர் கூறினார்.

மென்பொருள் என்ஜினீயர்கள் 

பலியான பஸ் பயணிகளில் பலர் பெங்களூரில் பணிபுரிந்து வந்த பிரபல நிறுவனங்களின் மென்பொருள் என்ஜினீயர்கள் என்று கருதப்படுகிறது. தீபாவளி கனவுகளுடன் உற்சாகமாக சொந்த ஊருக்கு புறப்பட்ட அவர்களுடைய கனவு, கொழுந்து விட்டு எரிந்த பஸ்சுக்குள் கரைந்துவிட்டது.

விபத்துக்குள்ளான சொகுசு பஸ், பிரபலமான ‘ஜப்பார் டிராவல்ஸ்’ என்ற நிறுவனத்துக்கு சொந்தமான தாகும். விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் பெங்களூர் மற்றும் ஐதராபாத்தில் உள்ள அந்த நிறுவன அலுவலகம் முன்பு பயணிகளின் உறவினர்களும், நண்பர்களும் கண்ணீர் மல்க கூடி விவரங்களை கேட்டவண்ணம் இருந்தனர்.

பஸ் நிறுவன நிர்வாகி கைது 

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்திய போலீசார் ஜப்பார் டிராவல்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி ஒருவரைக் கைது செய்து உள்ளனர்.

விபத்துக்குள்ளான பஸ், உரிய ஆவணங்கள் மற்றும் பயணத்துக்கு தகுதியான சான்றிதழ்களுடன் இயக்கப்பட்டு வந்ததாக, டிராவல்ஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில்,ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஆந்திர மாநிலப் போக்குவரத்துத் துறை மந்திரி பொச்சா சத்தியநாராயணா, வருங்காலத்தில் இதுபோன்ற விபத்துகளைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.                                                                          

தினத்தந்தி -30-10-2013

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger