சென்னை,
மாற்றுத்திறனாளிகள் 71 ஜோடிகளுக்கு இலவச திருமணம் சென்னையில் நடந்தது.
71 மாற்றுத்திறனாளிகள்
சென்னையில் உள்ள ஸ்ரீ கீதாபவன் அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு ஊனமுற்றோர் கூட்டமைப்பு சார்பில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் உடல் ஊனமுற்ற ஏழை, எளியோரின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் இலவச திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு இதே போல், சாதி மதம் கடந்து திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து 4–வது ஆண்டாக இந்த ஆண்டு 71 ஜோடிகளுக்கு கடந்த ஆகஸ்டு 3–ந்தேதி நிச்சயிக்கப்பட்டு நேற்று சென்னை கோபாலபுரத்தில் உள்ள ஸ்ரீ கீதாபவன் அறக்கட்டளையில் திருமணம் நடைபெற்றது.
மணக்கோலத்தில் ஜோடிகள்...
இதில் சமூக நலத்துறை மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் பா.வளர்மதி கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். விழாவில் மாற்று திறனாளிகள் நலன் முதன்மை செயலாளர் மற்றும் ஆணையர் வி.கே.ஜெயக்கொடி முன்னிலை வகித்தார்.
விழாவில் கலந்து கொண்ட 71 ஜோடிகள் அலங்கரித்து கொண்டு மணக்கோலத்தில் உற்சாகம் தழும்ப வந்து அமர்ந்தனர். திருமண ஏற்பாடுகள் அனைத்தும் இந்து முறைப்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. திருமணம் முடிந்ததும் அனைத்து ஜோடிகளும் தங்கள் திருமணத்தை பதிவு செய்து கொண்டார்கள்.
உறுதிமொழி
ஜோடி ஜோடியாக அமர்ந்து இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரே அவர்களது உற்றார் உறவினர்கள் அமர்ந்து ஜோடிகளை வாழ்த்தி மகிழ்ந்தனர். திருமணம் முடித்த கையோடு, அவர்களுக்கு தேவையான வீட்டு சாமான்கள், திருமணத்துக்கு வந்து செல்வதற்கான செலவுகள் அனைத்தும் திருமண ஜோடிகளுக்கு வழங்கப்பட்டன.
திருமண ஜோடிகள் தாலி கட்டுவதற்கு முன்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். ‘‘ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து இல்வாழ்க்கையை அன்புபாராட்டி பயனுள்ளதாக அமைத்து கொள்வோம். மேலும் இந்த சமுதாயத்தை உயர்த்துவதற்கு அனைத்து முயற்சியையும் இணைந்து மேற்கொள்வோம் என்று உளமாற உறுதி அளிக்கிறோம். ‘அன்பும் அறனும் உடைதாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது’ என்ற வாக்கிற்கு ஏற்ப உறுதிமொழி ஏற்கிறோம்’’ என்று சாஸ்திரிகள் கூற திருமண ஜோடிகள் கூறினர்.
நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்...
இதுகுறித்துத் திருமணமான தம்பதி ரங்கதுரை–கோமதி கூறியதாவது:– நான் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவன். பி.எட். பட்டதாரி ஆசிரியர் படித்துள்ளேன். தற்போது வேலைக்காகக் காத்து இருக்கிறேன். ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வருகிறேன். எனது மனைவியும் அதே மாவட்டத்தை சேர்ந்தவர் தான். எங்கள் இருவருக்கும் கண்கள் தெரியாது.
ஆனாலும் எங்கள் வாழ்க்கையில் ஒரு ஒளி விளக்கு ஏற்றி வைத்து இருக்கிறார்கள். இந்தத் திருமண ஏற்பாடுகளைச் செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று கூறினர்.
இந்த திருமண விழாவில் ஸ்ரீ கீதாபவன் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு ஊனமுற்றோர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
தினத்தந்தி - 30-10-2013

 
0 comments:
Post a Comment