Home » » இன்று பசும்பொன்னில் தேவர் குருபூஜை துவக்கம் !

இன்று பசும்பொன்னில் தேவர் குருபூஜை துவக்கம் !




பசும்பொன்னில் தேவரின் 51வது குருபூஜை விழாவும், 106ஆவது ஜெயந்தி விழாவும் திங்கள்கிழமை (அக்.28) தொடங்கி 3 நாள்கள் நடைபெற உள்ளது. இதையொட்டி ஞாயிற்றுக்கிழமை போலீஸ் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவர் நினைவு மணி மண்டபம் உள்ளது. இங்கு நடக்கும்  தேவர் குரு பூஜை மற்றும் ஜெயந்தி விழாவில் தமிழகம் முழுவதிலிருந்தும்  ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டு வருகின்றனர்.

தேவரின் 51ஆவது குருபூஜை மற்றும் 106ஆவது ஜெயந்தி விழாவும் பசும்பொன் தேவர் நினைவிடத்தில் திங்கள்கிழமை (அக்.28 ) காலை  தொடங்குகிறது. தேவர் நினைவாலய பொறுப்பாளர் த.காந்தி மீனாள் நடராஜன் முன்னிலை வகிக்கிறார். காலை 8 மணிக்கு கோவை காமாட்சிபுரி ஆதீனம் குரு மகா சன்னிதானம், காமாட்சிபுரி ஆதீனம் ஞானகுரு சாக்தஸ்ரீ சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள் தலைமையில் லட்ச்சார்ச்சனை நடைபெறுகிறது.

காலை 9 மணிக்கு தேவர் நினைவிடம் அருகே உள்ள கலையரங்க வளாகத்தில் மதுரை சன் கண் மருத்துவமனையும், தேவர் நினைவாலய நிர்வாகத்தினரும் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடத்துகிறார்கள். மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு 9 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேவரின் ஐம்பொன் சிலை தேரோட்ட உற்சவமும் நடைபெறுகிறது.

செவ்வாய்க்கிழமை (அக்.29) காலையில் லட்சார்ச்சனையும் இரவு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. 30-ஆம் தேதி (புதன்கிழமை) காலை 6 மணிக்கு பசும்பொன் தேவர் 51-வது குருபூஜையை 33 அபிஷேகங்களுடன் ஞானகுரு சாக்தஸ்ரீ சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள், தனது ஆதீன குழுவினருடன் நடத்துகிறார்கள்

தமிழக அரசு சார்பில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ள 106ஆவது ஜெயந்தி விழாவில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளிட்ட பலரும் பங்கேற்கிறார்கள். விழாவையொட்டி தேவரின் நினைவிடம் புதுப்பிக்கப்பட்டு, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை தேவர் நினைவாலயத்தினர், தேவர் குடும்பத்தினர் மற்றும் விழாக் குழுவினர் செய்துள்ளனர்.

போலீஸ் அணிவகுப்பு:  முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை காலை கமுதியில் போலீஸ் படையினரின் கொடிஅணிவகுப்பு நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.என்.மயில்வாகனன் உத்தரவின்பேரில் அதிரடிப் படை காவல் கண்காணிப்பாளர் கருப்பசாமி தலைமையில் 200க்கும் மேற்பட்ட அதிரடி போலீஸார் சிங்கப்புளியாபட்டி, வெள்ளையாபுரம், தெற்குத்தெரு, நாடார் பஜார், மேட்டுத் தெரு, பஸ் நிலையம் சாலை, குண்டாறு பாலம் வரை அணிவகுத்து சென்றனர்.

பசும்பொன் செல்கிறார் ஸ்டாலின்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 106-வது பிறந்த தினம் அக்.30-ஆம் தேதி குருபூஜையுடன் கொண்டாடப்பட உள்ளது.

இதனையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்த உள்ளதாக திமுக தலைமைக் கழகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.                                                                                                                                       

தினமணி, 28-10-2013




0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger