Home » » இது நிகழாதிருந்திருக்கலாம் -வி.ஜே.தமிழ்ச் செல்வி - தாரிணி பதிப்பக வெளியீடு !

இது நிகழாதிருந்திருக்கலாம் -வி.ஜே.தமிழ்ச் செல்வி - தாரிணி பதிப்பக வெளியீடு ! 
 
என் வார்ப்பில், என் நெகிழ்வில், என் உணர்வுகளின் வசப்படுதல் அற்ற தருணங்களில் வந்த ஒவ்வொரு எழுத்தின் உயிர்ப்பலைகள் தொடுத்த மாலை தான் இது நிகழாதிருந்திருக்கலாம்.

மின்தமிழ், பண்புடன் குழுமங்களிலும், விண்முகில் வலைப்பக்கத்திலும் என் கவிதைகளை படித்த திரு. சி. ஜெயபாரதன் அவர்கள், தமிழ்ச்செல்வி உங்கள் கவிதைகளை மெருகேற்றலாம். அழகாக்கலாம், நல்ல சொல்வளம் உங்களுக்கு என்ற போது, நன்றி அய்யா என்று சொல்லி ஒரே ஒட்டமாக ஓடி போனேன். மெருக்காக்குதல் அழகாக்குதல் இதெல்லாம் எனக்கு தெரியாத ஒன்று. நான் எழுதிய கவிதையை திரும்ப ஒரு பத்து நாட்கள் கழித்து கேட்டால் நானா எழுதினேன் என்று யோசிக்கக் கூடியவள் நான்.

மனதில் எழுதியே தீரவேண்டும், இப்பொழுது எழுதி தான் ஆக வேண்டும் இதற்கு மாற்றாக எதுவுமே இல்லை என்ற நிலையிலேயே எழுதுவேன். தோன்றாவிட்டால் வேறு வேலைப் பார்க்க போய்விடுவேன். ஒரு பேப்பரும் பேனாவும் எடுத்துக்கொண்டு இந்த கருவில் நாம் ஒரு கவிதை எழுதலாம் என்றால் இதுவரையில் என்னால் முடிந்ததில்லை.

நான் படித்தது அதிகம் அதாவது என் 8 வயதில் இருந்து 19 வயதான காலகட்டங்களில். எழுத்து எனக்கு உற்ற நண்பனாக, துணைவனாக,ஆசானாக இருந்துவந்திருக்கிறது. அதன்பிறகு நான் எழுதவோ படிக்கவோ இல்லை. அதன்பிறகு நான் மீண்டும் எழுத துவங்கியது, இப்போது நான் செய்துக்கொண்டிருக்கும் வேலையும் இணையமும் கிட்டியதால் தான். இரவு வெகு நேரம் தனித்து இரவு பணி செய்யும் வாய்ப்பும், இணையம் மூலமாக எனக்கு கிடைத்த முதல் நட்பான படுகை. காம் அதன் மூலம் வந்த நண்பர் தமிழ்ராஜாவின்  ஊக்கப்படுத்துதல் எழுத களம் அமைத்து தந்த படுகையின் உரிமையாளர் ஆதித்தன், ஊக்கப்படுத்தவென வலம் வந்த அருந்தா மற்றும் சுமையா? இன்னும் பலர்…அதன் பிறகு தொழிற்களம் அருணேஷின் அறிமுகம், சும்மா எழுதுக்கா எழுதுக்கான்னு கூலா சொல்லிட்டு போன மிக அருமையான சகோதரர் அவர். அதன் பிறகு ஜீவ்ஸ் என் மானசீக குரு, கவிதைன்னா இப்படி இருக்கனும்னு சொன்னவர். சில கவிதைகள் அவர் பாராட்டை பெறவேண்டும் என்று எழுதி ஐஸ்ட் பாசான தருணங்கள். ம் ஓகே ஆனா இது கவிதை அல்ல என்று ஜீவ்ஸ் ன் வாய்சில் நானே சொல்லிக்கொண்டதுண்டு. இந்த கவிதை தொகுப்பு என் எழுத்தின் ஆரம்ப கால பயண ஓட்டம்.

காகிதத்தில் பதிப்பித்து ஜி.ஜே.தமிழ்ச்செல்வியின் எழுத்துலகத்தை மற்றொரு களத்திற்கு கொண்டுச் சென்ற தாரிணி பதிப்பகத்தாருக்கு மிகவும் நன்றி. 

"இது நிகழாதிருந்திருக்கலாம்" 

 கவிதைத் தொகுப்பு.

படைப்பு ;- ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

தாரிணி பதிப்பகம், 

ப்ளாட். எண் 4-ஏ ரம்யா பிளாட்ஸ் 

32/79 காந்தி நகர் 4வது பிரதான சாலை,

அடையார் – சென்னை-600020 

இந்த விலாசத்தில் கிடைக்கும்.

vaiyavan.mspm@gmail.com

இந்த தொகுப்பு ஒரு மழலையில் கிறுக்கல்களை மகிழ்ந்து ஓவியமாக ரசிக்கும் இயல்புதான் என் பாற் அக்கறைக்கொண்டவர்களிடத்தில் இருந்தது. அந்த வரிசையில் நான் கேட்டதும், அணிந்துரை வழங்கிய கவிஞர்.மகுடேஸ்வரன் அவர்களுக்கும், நான் கேட்காமலேயே…அணிந்துரை வழங்கி கௌரவித்த திருமதி.பூங்குழலி மற்றும் திருமதி.பவளசங்கரி அவர்களுக்கும் எனது நன்றிகள்.

என் எழுத்துக்களை புத்தக வடிவில் ஏந்தியபோது ஒரு சிலிர்ப்பு மனதை நிறைத்தது. முழுவதும் இலக்கணத்துடனோ அல்லது இலக்கியமாகவோ இதைப்பார்த்தால் ஒரு பூஜ்ஜியம் அங்கு இருக்கும். ஒரு படைப்பாளியின் முதல் புத்தக அனுபவம் என்று பார்த்தால் அனைவர் உள்ளமும் நட்புடன் சிரிக்கும்.

மின்தமிழ் மற்றும், பண்புடன் குழும நண்பர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.

மீண்டும் ஒரு முறை புத்தகம் வெளிவர காரணராக இருந்த அனைவருக்கும் என் மனம் கனிந்த நன்றிகள் பல.

இங்கு நான் கூற விரும்பும் நன்றி என் பெற்றோருக்கு, காலஞ்சென்ற என் தந்தையார் நான் எழுத்துலகிற்கு வரவேண்டும் என்று விரும்பினார். துண்டு காகிதங்களில் எழுதிய என் எழுத்துக்களை படித்துவிட்டு என் பெண் அறிவாளி என்று புகழ்ந்துக்கொண்டிருக்கக் கூடியவர். அப்பொழுது அது எனக்கு தவறாக தோன்றி அதிக நாட்கள் சண்டை போட்டிருக்கிறேன் அவரோடு. ஆனால் இப்போது மிகவும் வருந்துகிறேன். நன்றி என்று சொல்லி ஒரு வார்த்தையில் நிறைவு செய்துவிட முடியாது இந்த நிகழ்வை.

என் தாயார் இன்று நான் உங்கள் முன் உயிருடன் இருக்க காரணமானவர். வெறும் கண்ணு மட்டும் தான் அசையுது இந்த குழந்தைய காப்பாற்றி என்ன செய்ய போற பேசாம கொஞ்சம் இளநீர் ஊற்றிடு ஜன்னிக் கண்டு இறந்துடும் என்று சொன்னவர்களிடம் சண்டைப்போட்டு இன்று வரை இந்த கணம் வரை என் ஒவ்வொரு அசைவிற்கும் உறுதுணையாக இருப்பவர்.

இந்த புத்தகத்ததின் நிறை குறைகளை கடந்து, இந்த புத்தகத்தை கையில் ஏந்திய போது அவள் விழிகளில் கசிந்த கண்ணீர் ஒன்றே எனக்கான உந்துதல் பரிசு.

வாழ்வில் எதுவும் நிகழாதிருந்திருந்தால் இதுவும் நிகழாதிருந்திருக்கும். இந்த நெகிழ்ச்சிக்கு இந்த நிகழ்தல் விதிக்கப்பட்டது என்று எண்ணுகிறேன்.

நட்புடன்
ஜி.ஜே.தமிழ்ச்செல்வி

3 comments:

 1. நான் ஜி.ஜே தமிழ்ச்செல்விங்க, வி.ஜே இல்லை பெயரில் மாபெரும் குழப்பம் தோன்றும் போல் இருக்கிறதே...

  ReplyDelete
 2. என் கவிதை நூலைப் பற்றி அழகாக வெளியிட்டுள்ளீர்கள் மிகவும் நன்றி.

  ReplyDelete
 3. அழகான பதிவு. வாழ்த்துக்கள். ஆமாம் "தமிழ்ச்" செல்வி, எப்பொழுது உங்கள் முன்னெழுத்தை (ஜி.ஜே.) தமிழில் மாற்றப் போகிறீர்கள்?
  --ஆ.மீ. ஜவகர்

  ReplyDelete

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger