Home » » ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: குழந்தையும் தாய்ப்பாலும்! - எஸ். சுவாமிநாதன்,

ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: குழந்தையும் தாய்ப்பாலும்! - எஸ். சுவாமிநாதன்,



எனது மகளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து 4 மாதங்கள் ஆகின்றன. குழந்தை அருந்துவதற்குப் போதுமான அளவு தாய்ப்பால் சுரப்பு இருந்தபோதிலும் சில நேரங்களில் குழந்தையால் தாய்ப்பாலை உறிஞ்சிக் குடிக்க முடியாத சிரமம் உள்ளதாகத் தெரிகிறது. ஆயினும் குழந்தை தாய்ப்பால் குடிக்க ஆர்வமுள்ளதாக இருக்கிறது. இந்த வகைப் பிரச்னைக்கு என்ன தீர்வு?

எம்.எஸ்.நளினி, சென்னை.

குழந்தையினுடைய வாய் தாயாரின் மார்புக் காம்பில் சரியானபடி பதியும்படி அதன் பின் தலையைப் பிடித்து வைத்துக் கொள்வதன் மூலம், குழந்தைக்குத் தாய்ப்பாலை உறிஞ்சிக் குடிப்பது எளிதாக இருக்கும். மடியில் வைத்துக் கொள்ளும்விதம் சரியாக இல்லையென்றால் குழந்தையால் தாய்ப்பாலை குடிக்க முடியாது. இதை ஆங்கிலத்தில் INCORRECT FEEDING POSITION என்று கூறுவார்கள்.

வாய் அண்ணப் பகுதியில் பிளவு அல்லது உதட்டில் பிளவு போன்று குழந்தைக்கு இருந்தால், அதனால் பாலை உறிஞ்சிக் குடிக்க முடியாது. இதற்கு CLEFT PALATE OR LIP என்று பெயர். சிறு அறுவை சிகிச்சையின் மூலம் இப்பிரச்னையைச் சரி செய்துவிடுகிறார்கள்.

தாடைப் பகுதியோ நாக்கோ சற்று உள் இருந்திருந்தால் குழந்தையால் பாலைப் பருக முடியாது. இது RETRACTED JAW OR TONGUE என்று அழைக்கப்படுகிறது.

நாக்கினுடைய அடிப்பகுதி தொண்டையினுள்ளே சற்று அழுத்தி அமைந்திருந்தால் வாயினுள்ளே நாக்கினுடைய ஆக்கிரமிப்பு முழுவதும் இல்லாமற் போனால், குழந்தையினுடைய உறிஞ்சும் சக்தி குறைந்துவிடும்.  மேலும் வாயினுடைய மேற்கூரைப் பகுதியின் பிளவும் சேர்ந்திருந்தால், பாலை உறிஞ்சுவது கடினமாகும். இது PIERRE ROBIN SYNDROME  என்று கூறப்படுகிறது.

சில குழந்தைகளுக்கு நாக்கில் படியும் படிவங்களால் பாலை சரி வர உறிஞ்ச  முடியாது.

தாய்ப்பால் போதுமான அளவில் இல்லாத போது, நிப்பிள் வைத்த பாட்டிலின் வழியாகப் பாலைப் புகட்டினால், குழந்தைக்கு மார்புக் காம்பு எது? நிப்பிள் எது? என்ற ஒருவிதமான குழப்பம் ஏற்படும். இதற்கு NIPPLE CONFUSION  என்று பெயர்.

தாய்ப்பாலை பருகும்போதே சில குழந்தைகள் தூங்கும். அப்போது அடிக்கடி அதன் வாய் மார்புக் காம்புகளிலிருந்து வெளியே வந்துவிடுவதால், அதனால் சரி வர உறிஞ்சி குடிக்க முடியாது. இதனை DROWINESS IN IN FANT என்று அழைப்பார்கள்.

மேற்குறிப்பிட்ட பிரச்னைகளால் குழந்தை  சரியான அளவில் பால் குடிக்காமற் போனால் ஆதஉஅநப டமஙட மூலம் பாலை எடுத்து குழந்தைக்குப் புகட்ட வேண்டி வரலாம்.

குழந்தைக்கு வாயில் புண் இருந்தால் தாய்ப் பாலையோ, பாட்டில் பாலையோ உறிஞ்சிக் குடிக்க முடியாது. தாயின் மார்பு, பாட்டிலின் நிப்பிள் இவற்றின் மேல் உள்ள அழுக்கினால் குழந்தைக்கு வாய்ப்புண் ஏற்படலாம். பால் தரும் தாயின் உணவில் புளிப்பு, உப்பு, காரம் அதிகமிருந்தாலும் நெய், பால் குறைவாக இருந்தாலும், தாய்ப்பாலின் வழியே சூடான வீர்யம் வருவதால் குழந்தைக்கு வாய்ப்புண் வந்துவிடும். இதிலும் கவனம் தேவை.

குழந்தை பால் குடிக்கவில்லையே என்ற வருத்தத்தினால் அதைக் குடிக்கச் செய்ய வற்புறுத்தும் விதமாக அடிக்கடி மார்புக் காம்புகளில் குழந்தையின் வாயை வைக்கக் கூடாது. அப்படி வற்புறுத்துவதால், சிணுங்குவதும், சுணங்குவதும் அதிகமாகும்.

அப்போதே, "வாழ்க்கையே பெரும் போராட்டம்தான் போலிருக்கிறது' என்று உணர ஆரம்பித்தால், தாய்ப்பாலை சரியாகப் பருகாது. தாயின் மார்பகத்திலிருந்து குழந்தை சரியாகக் குடிக்கத் தொடங்கிவிட்டால் தன்னம்பிக்கை, மகிழ்ச்சி, தாயைத் தனக்கு மிகவும் நெருங்கியவளாக உணர்வது போன்ற இன்பமயமான சுகத்தை அது தூங்கும்போது சப்புக் கொட்டுவதிலிருந்தும், இன்பக் கனவு காண்பதிலிருந்தும் சிரிப்பதிலிருந்தும் தெரிந்து கொள்ள முடியும்.                                                                                                            

கதிர், தினமணி, 27-10-2013

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger