Home » » ஒரே மேடையில் மன்மோகன்சிங் - மோடி சொற்போர் !

ஒரே மேடையில் மன்மோகன்சிங் - மோடி சொற்போர் !




ஒரே மேடையில் பங்கேற்ற பிரதமர் மன்மோகன் சிங்கும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் சர்தார் வல்லபாய் பட்டேலை மேற்கோள்காட்டி, சொற்போரில் ஈடுபட்டனர்.

வல்லபாய் படேல்தான் நாட்டின் முதல் பிரதமராகியிருக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால் நாட்டின் தலைவிதியே மாறியிருக்கும் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆதங்கத்துடன் குறிப்பிட்டார். 

நேருவுக்கும், வல்லபாய் படேலுக்கும் கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்பட்டபோதிலும், முக்கிய விவகாரங்களில் ஒரே கருத்துடன் இருவரும் இணைந்து செயல்பட்டனர். படேலும் காங்கிரஸ்காரர் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். 

படேல் நினைவுச் சங்கம் சார்பில் குஜராத் மாநிலம் அகமதாபாதில் படேலுக்கு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

இந்த விழாவில், இந்நாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் பிரதமர் பதவிக்கு போட்டியிடும் நரேந்திர மோடியும் ஒரே மேடையில் கலந்து கொண்டனர்.
படேல்தான் பிரதமராகி இருக்க வேண்டும் - மோடி

விழாவில் முதலில் உரையாற்றிய நரேந்திர மோடி, படேலுக்கு புகழாரம் சூட்டியும் ஜவஹர்லால் நேருவை மறைமுகமாகக் குற்றம்சாட்டியும் பேசினார்.

அவர் பேசியது: நாட்டின் முதல் உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற சர்தார் வல்லபாய் படேல் சிதறிக் கிடந்த இந்தியாவை ஒன்றிணைத்தார். ஆனால் இன்று நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் பல்வேறு முனைகளில் இருந்து அச்சுறுத்தல்கள் வந்து கொண்டிருக்கின்றன. தீவிரவாதம், மாவோயிஸ்ட் என பல்வேறு வடிவங்களில் நாட்டின் அமைதிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. 

இரும்பு மனிதர் சர்தார் படேல்தான் நாட்டின் முதல் பிரதமராகப் பொறுப்பேற்றிருக்க வேண்டும். ஆனால் அது ஏனோ நடக்கவில்லை. ஒருவேளை அவர் பிரதமராகி இருந்தால் நாட்டின் தலையெழுத்தே மாறியிருக்கும். 

சில இளைஞர்கள் தவறான வழிகாட்டுதலால் பாதை தவறியுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் அவர்கள் குண்டுகளை வெடிக்கச் செய்தும் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியும் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கின்றனர். அவர்கள் நாட்டுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறார்கள். ஆனால் ஒரு விஷயத்தை அவர்கள் மறந்துவிட்டார்கள். 

தங்களது சொந்த சமூகத்துக்கே அவர்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறார்கள். தவறான பாதையில் சென்று கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
படேல் காங்கிரஸ்காரர்; மதசார்பற்றவர் - பிரதமர் பதிலடி

சர்தார் வல்லபாய் படேலின் அருங்காட்சியகத்தைத் திறந்துவைத்து பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது: "சர்தார் படேல் மதச்சார்பின்மையை முக்கிய கொள்கையாகக் கொண்டிருந்தார். இந்திய ஒருமைப்பாட்டில் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். நாட்டையே ஒரு கிராமமாகவும், அதில் வசிப்போர் அனைவரும் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என்றும் அவர் கருதினார். 

சுதந்திரமடைந்தபோது, அப்போதைய துணைப் பிரதமரும், உள்துறை அமைச்சருமான படேல், 500 சமஸ்தானங்களை ஒன்றிணைத்து இந்தியாவை கட்டமைத்தார். படேலுக்கும், அன்றைய பிரதமர் நேருவுக்கும் கருத்து வேறுபாடுகள் அதிக அளவில் இருந்தன. ஆனால், அதே சமயம் இருவரும் பல முக்கிய விவகாரங்களில் இணைந்து செயல்பட்டனர். ஒருவரின் கருத்துக்கு மற்றவர் மதிப்பு அளித்தனர். 

படேலின் தியாகத்தையும், பங்களிப்பையும் பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்வது அனைவரின் பொறுப்பாகும். குறிப்பாக இளைஞர்கள் இப்பணியில் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும். படேல் ஒரு காங்கிரஸ்காரர். அவர் இருந்த அதே கட்சியில் நானும் இருப்பதில் பெருமை கொள்கிறேன். 

நாட்டின் ஒருமைப்பாட்டில் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் படேல், மௌலானா அபுல் கலாம் ஆசாத் ஆகியோர் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர். முற்போக்குக் கொள்கை, ஏழைகளின்பால் கரிசனம், மதச்சார்பின்மையுடன் கூடிய அணுகுமுறையை அவர்கள் பின்பற்றினர்.

மாற்றுக் கொள்கைகளுக்கு, கருத்துகளுக்கும் அவர்கள் மதிப்பளித்தனர். அந்த கொள்கைகள் அனைத்தும் இன்றைய சூழ்நிலையில் நடைமுறையில் இல்லை என்பதை இங்கிருக்கும் அனைவரும் ஒப்புக்கொள்வார்கள்" என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.

தி இந்து - 29-10-2013

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger