Home » » அனைத்து மாவட்டக் கலெக்டர்களுடன் தேர்தல் அதிகாரி ஆலோசனை

அனைத்து மாவட்டக் கலெக்டர்களுடன் தேர்தல் அதிகாரி ஆலோசனை

பாராளுமன்றத் தேர்தலைச் சந்திப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் அதிகாரி சம்பத் சமீபத்தில் சென்னை வந்தார். அப்போது தமிழ்நாட்டில் பாராளு மன்ற தேர்தலுக்குச் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரிடம் கேட்டு அறிந்தார். 

ஓட்டுப்பதிவு, பாதுகாப்பு, நேர்மையான தேர்தல் நடத்துவது குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். தமிழக அரசியல் கட்சிகளிடமும் ஆலோசனை நடத்தப்பட்டது. 

கடந்த 20ம் தேதி டெல்லியில் அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்கள், உள்துறைச் செயலாளர்கள், டிஜிபிக்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும் எந்த தேதியில், எத்தனை கட்டங்களாக தேர்தல் நடத்தலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான கால அட்டவணைகளைத் தயாரித்து வருகிறது. மார்ச் 3ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 

தமிழ்நாட்டில் 5 கோடியே 37 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 60 ஆயிரத்து 418 வாக்குச்சாவடிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 70 ஆயிரம் ஒட்டுப்பதிவு எந்திரங்கள் தயாராக உள்ளன. 15 வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிட்டால் 2 ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படும். 

பதட்டமான வாக்குச் சாவடிகள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. 20 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்படுகிறது. மாவட்டத்துக்கு 14 தேர்தல் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை தலைமை தேர்தல் அலுவலகத்தில் பணி ஒருங்கிணைப்பாளர்களாக 11 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில் முதல் முறையாக ஓட்டுப் போட விரும்பாதவர்களுக்கு ஓட்டு எந்திரத்தில் 'நேட்டோ' பொத்தான் அமைக்கப்படுகிறது. இது ஓட்டுப்பதிவு எந்திரத்தில் கடைசியாக இருக்கும். 

ஓட்டுப்பதிவு மற்றும் தேர்தல் பணிகள் குறித்து உயர் தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

மாவட்ட கலெக்டர்கள் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றுவார்கள். 

அவர்களுக்கான பயிற்சி மற்றும் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. 

தமிழகத்தில் ஒரே கட்டமாகத் தேர்தலை நடத்த வேண்டுமென அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தன. அதைத் தேர்தல் கமிஷன் ஏற்றுகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப ஒரே கட்டத் தேர்தல் நடத்த செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தமிழக தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நேற்று காலையில் ஆலோசனை நடத்தினார்.

சென்னை வள்ளுவர்கோட்டம் அருகில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் கலெக்டர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று காலை 10 மணிக்குத் தொடங்கியது.   

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவின்குமார் தலைமை தாங்கினார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் 39 மாவட்ட தேர்தல் பொறுப்பு அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.தேர்தல் கண்காணிப்பு பணிகள் குறித்து கலெக்டர்களுக்கு தேர்தல் பணி குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது. தேர்தல் பணிகளை கவனிக்கத் தலைமைச் செயலகத்தில் 11 ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இங்கிருந்தபடியே மாவட்டங்களில் தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர். அவர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மேலும், தமிழகத்தில் 1.30 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இந்த வாக்குச்சாவடியில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு மாவட்ட அளவில் கடந்த 2 நாட்களாகப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அதில் வாக்குப்பதிவு இயந்திரத்தைக் கையாளுவது குறித்துப் பயிற்சி அளிக்கப்பட்டன. இந்தப் பயிற்சி குறித்துக் கலெக்டர்களிடம் பிரவீன்குமார் கேட்டறிந்தார்.

தேர்தல் பணியில் 3.5 லட்சம் பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஒரு லட்சம் போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இது பற்றியும், தேர்தல் பிரசாரத்தைக் கண்காணிப்பது, வேட்பு மனு தாக்கல் செய்யும்போது கவனிக்க  வேண்டிய நடைமுறைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், வீடியோ கேமரா மூலம் கண்காணிப்பது ஆகியவை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மேலும், பதட்டமான இடங்களை கண்டறிந்து அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது, கூடுதல் பணியாளர்களை நியமிப்பது குறித்தும், வெப் கேமரா பொருத்த முடியாத வாக்குச்சாவடிகளில் வீடியோ கேமரா மூலம் கண்காணிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டன. 

இங்கு பயிற்சி பெறும் தேர்தல் அதிகாரிகள் மாவட்டங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்குத் தேர்தல் பணிக்கான பயிற்சிகளை அளிப்பார்கள். தமிழ்நாட்டில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



தினபூமி

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger