Home » » சொல் புதிது - 1 -முனைவர் ம. இராசேந்திரன்

சொல் புதிது - 1 -முனைவர் ம. இராசேந்திரன்

தினமணி' ஆசிரியர் ஒரு நாள் இரவு 10 மணிக்குத் தொலைபேசியில் கேட்டார். Whistle Blower என்பது குறித்துத் தேடத் தொடங்கினேன்.


அரங்குகளிலும் நிகழ்ச்சிகளிலும் விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்தும் "விசில் அடிச்சான் குஞ்சுகள்' என்று சொல்ல முடியாதென்று தெரியவந்தது. சமூகப் பொறுப்புணர்வோடு அநீதிகளை வெளிப்படுத்துகிறவர்களை விசில் அடிச்சான் குஞ்சுகள் என்று சொல்ல முடியாது.


பணியாற்றும் நிறுவனங்களின் உள்ளே நடக்கும் தவறுகளை வெளிப்படுத்துகிறவர்கள் - பார்வையில் படும் அநீதிகளை உரியவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறவர்கள். ஆற்று மணல் கொள்ளை, கிரானைட் ஊழல், கள்ளச்சாராயம், சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தொழிற்சாலைகள், ஏமாற்றும் சீட்டுக் கம்பெனிகள், அரசின் ஊழல் நடவடிக்கைகள் ஆகியவற்றை மக்களுக்கும் உரிய அமைப்புகளுக்கும் அம்பலப்படுத்துகிறவர்கள்தாம் Whistle Blowers.


World net daily இதற்கென்று ஒரு மாதப் பத்திரிகையை நடத்துகிறது. அமெரிக்காவில் உள்நாட்டு வருவாய்த் துறையில் இதற்கென்று ஒரு கிளை இருக்கிறது. அரசாங்கத்தை ஏமாற்றி வரி ஏய்ப்புச் செய்கிறவர்கள் பற்றிய தகவல்களைத் தருகிறவர்களுக்கு ஊக்கத் தொகையை அமெரிக்கா வழங்குகிறது. இப்படி Whistle Blowers மூலம் கண்டுபிடிக்கப்பட்டு வசூலித்த வரி ஏய்ப்புத் தொகை மட்டும் 2008-இல் 65 பில்லியன் டாலராம். அதாவது 6500 கோடி லாடர்கள். மூன்று லட்சத்து தொண்ணூறாயிரம் ரூபாய்கள்!


உலகம் முழுதும் ஏமாற்றுகிறவர்களும் மக்கள் நலத்திற்கு எதிராகச் செயற்படுகிறவர்களும் இருப்பதைப் போலவே வெளிப்படுத்துகிறவர்களும் இருக்கிறார்கள். ஏமாற்றுகிறவர்களும் அமைப்புகளும் இப்படி வெளிப்படுத்துகிறவர்களை விட்டு வைப்பதில்லை. பணியிடை நீக்கம், பணியிட மாறுதல் தொடங்கி வேலைக்கு வேட்டு வைப்பது வரை நடக்கின்றன. தனிநபர் எனில் அடி தடி தொடங்கி ஆளைக் காலி செய்யும் அளவுக்குப் போகிறார்கள்.


இவற்றிலிருந்து பாதுகாப்பளிக்க, அமெரிக்கா போன்ற நாடுகளில் சட்டம் இருக்கிறது. இந்தியாவிலும் நாடாளுமன்றத்தால் விசில் ப்ளோயர்ஸ் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.


விதிமுறைகளை மீறும் விளையாட்டு வீரர்களைக் கண்டிக்கவும் கட்டுப்படுத்தவும் வெளியேற்றவும் நடுவர்கள் விசில் ஊதுவார்கள். சட்ட விதிமுறைகளை மீறி, சமூக அநீதிகளைச் செய்கிறவர்களை அம்பலப்படுத்துகிறவர்களைக் காவல் துறைக்கு உளவு சொல்லும் தகவலாளிகள் என்று சொல்ல முடிவதில்லை. எனவே, சமூகப் பொறுப்புணர்வோடு எடுத்துரைக்கும் இவர்களை "இன்பார்மர்ஸ்' (informers) என்று சொல்லக்கூடாதென்று ரால்ப் நாடர் 1970களில் குறிப்பிட்டார்.


இன்று விசில் ப்ளோயர்ஸ் பாதுகாப்பு அமைப்புகளும் உதவும் அமைப்புகளும் உலகம் முழுதும் உருவாகத் தொடங்கியுள்ளன.  


அநீதிகளில் நாம் பங்கேற்காமல் இருக்கலாம். அதற்காக அநீதிகளைக் கண்டும் அமைதி காக்க முடிவதில்லை. அநீதியை எதிர்த்துப் போராட முடியாமல் இருக்கலாம். ஆனால், தடுத்து நிறுத்த உரியவர்களிடமும் அமைப்புகளிடமும் எடுத்துரைக்க வேண்டியது சமூகக் கடமையாக இருக்கிறது. தடுக்காதபோது அரசுகளையும் அமைப்புகளையும் இடித்துரைக்க வேண்டிய தேவை எழுகிறது.


இதைத்தான் செய்கிறார்கள் விசில் ப்ளோயர்ஸ். இவர்களைத் தமிழில் எப்படி அழைக்கலாம்? "தினமணி' வாசகர்கள் தெரிவித்துள்ள சொல்லாக்கங்கள் சில.  


கா.மு. சிதம்பரம் - கம்பலை மாக்கள் (கண்ணகிக்குக் கொலைப்பட்ட கோவலனைக் காட்டியவர்கள்)


வெ. ஆனந்தகிருஷ்ணன், முனைவர் பெ. துரை - கீழ்க்கை ஒலி எழுப்புகிறவர்கள்.


செல்வம், ச. கிறிஸ்து ஞான வள்ளுவன் - உண்மை விளம்பி


முனைவர் க. அன்பழகன் - கலகமூட்டி


செ. நாராயணசாமி - கிண்ணாரக்காரன்


இரா.பொ. வீரையன் - குற்றம் சாட்டியவர்


கோ. மன்றவாணன் - வேவுரைஞர்


முனைவர் பா.ஜம்புலிங்கம் - தம்பட்டக்காரன்


என்.ஆர். ஸத்யமூர்த்தி - பறைஞர்  


"விசில் ப்ளோயர்ஸ்' - அநீதியை வெளிப்படுத்த எடுத்துரைப்பவர்கள் மட்டுமில்லை; தடுக்காதபோது இடித்துரைப்பவர்களும்கூட. தமிழ் மரபில் அரசர்கள் தவறு செய்கிறபோது புலவர்கள் எடுத்துரைப்பதோடும் இடித்தும் உரைத்திருக்கிறார்கள்.


திருவள்ளுவரும் "இடிப்பாரை இல்லாத' மன்னன் கெடுப்பவர்கள் இல்லாமலும் கெடுவான் என்று சொல்கிறார். எனவே,விசில் ப்ளோயர்ஸ் என்பதற்கு வள்ளுவத்திலிருந்தே சொல் எடுக்கலாம். "இடிப்பார்' என்பதை "இடித்துரையாளர்' என்று ஆக்கிக் கொள்ளலாம். சமுதாய நலனில் அக்கறை கொண்டு எடுத்துரைப்பவர்களையும் 


இடித்துரைப்பவர்களையும்


 "இடித்துரையாளர்' என்று பெருமை சேர்த்துக் 


கூறலாமே!  


விசில் ப்ளோயர்ஸ் (whistle Blower) - 


இடித்துரைப்பாளர்.


தமிழ்மணி, தினமணி

1 comments:

  1. நல்ல கட்டுரை. சரியான சொற்பதம் இடித்துரையாளர்.

    ReplyDelete

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger