Home » » தமிழ் மண் தவழா மோடி அலை

தமிழ் மண் தவழா மோடி அலை

மோடி அலை! இந்தியாவில் வீசியதா? இல்லையா? இது இந்துத்துவ அலை என்றால், இந்தப் பேராபத்தைத் தடுப்பதெப்படி? தமிழகத்தில் வீசியது என்ன அலை? திராவிடம் வளர்ந்த தமிழ் மண்ணில் பாஜக வெல்லுமா? எனப் பல கேள்விகளும், இதன் தொடர்விளைவாகப் பல விவாதங்களும் விளக்கங்களும் எழுந்த வண்ணமுள்ளன.

Modi 330மோடி என்னும் பெரு மனிதரின் அலைதான் பாஜகவை இந்தியக் கொடுமுடியில் அமர்த்தியுள்ளதாகப் பெருமைப்படுகிறது சங்கக் குடும்பம். இல்லை, இல்லை...

மோடி என்னும் வெற்று மனிதரை பூதாகரப்படுத்திக் காட்டுவதில் இந்துத்துவ சக்திகள் வெற்றி பெற்று விட்டதாகச் சொல்கிறது இடதுசாரிக் குடும்பம்.

இது மோடி செய்த மாயம் என்கிறார்கள் வளர்ச்சி பஜனை பாடுவோர். இது வெறும் ஊடகத் தந்திரம் என்கிறார்கள் மதச்சார்பின்மை மந்திரம் ஓதுவோர்.
இரு தரப்பிலும் வந்து விழும் வாதங்களில் எது உண்மை? எதுவும் முழு உண்மையில்லை என்பதே உண்மை.

பாஜகவின் வெற்றி கார்ப்பரேட்டுகள் நடத்திக் காட்டிய வெற்றி எனக் கவலைப்படுகிறார் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் காம்ரேடு சி. மகேந்திரன். இது கெப்பல்ஸ் பாணி பிரச்சாரத்துக்குக் கிடைத்த வெற்றி என்கிறார் ஆம் ஆத்மி ஞாநி. இது இந்தியாவுக்கே பெரிய ஆபத்து என்கிறார் காங்கிரசின் மணிசங்கர் ஐயர். இப்படி இந்தியப் பாணி மதச்சார்பின்மை பேசும் அனைவருமே மோடியை இந்து வெறியர் என்றும், இனப்படுகொலையாளர் என்றும் அடையாளப்படுத்துகின்றனர்.

இவர்கள் கூற்றுப்படி, இந்திய ஊடகங்கள் ஓர் இந்து வெறிக் கொலைகாரரை வளர்ச்சி நாயகனாகக் காட்டி வெற்றி கண்டு விட்டனவாம். அப்படியானால் ராகுல், காரத், பரதன், கெஜ்ரிவால் என அனாத ரட்சகர்கள் திருக்காட்சி அளித்து நிற்க, ஏதுமறியா அப்பாவி மக்கள்தான் ஊடக வித்தையில் மயங்கி மோடியிடம் ஏமாந்து போய் விட்டதாக நாம் புரிந்து கொள்ளலாமா?

இந்தியம் என்பதே இந்துத்துவந்தான். இந்தியத்தை ஆதரிப்பதும் இந்துத்துவத்தை ஆதரிப்பதும் ஒன்றே. ஆர்எஸ்எஸ் கூட்டம் சொல்லிலும் செயலிலும் வெளிப்படுத்தும் இக்கருத்தைத்தான் இதர பாரதப் புதல்வர்கள் தங்கள் செயல்களில் வெளிப்படுத்துகின்றனர். குசராத்தில் இசுலாமியர்களைக் கொன்ற மோடியைப் புகழ்வதையே பாவமாகக் கருதும் இடதுசாரிகள் அமிர்தசரசிலும் தில்லியிலும் சீக்கியர்களைக் கொன்று குவித்த காங்கிரசைத் தாங்கிப் பிடிப்பதையே பெரும் புண்ணியமாகக் கருதவில்லையா என்ன?

2002 குசராத் படுகொலைகளை இந்துத்துவத்தின் கோர வெளிப்பாடாகச் சரியாகவே சித்திரிக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியக் கட்சிகள் அனைத்தும் இந்துத்துவம் தலைவிரித்து ஊழிக் கூத்தாடும் காஷ்மீரத்தில் செய்வதென்ன? அவை உள்ளபடியே காஷ்மீரத்து இசுலாமிய நரவேட்டையில் ஒன்றையொன்று முந்திக் கொள்வதில் அல்லவா போட்டி போடுகின்றன? 

நேரு உறுதியளித்த காஷ்மீர் கருத்து வாக்கெடுப்புப் பிரகடனங்களைக் கிழித்தெறிந்து இசுலாமியப் பெரும்பான்மையினரை இந்திய ஓர்மை என்னும் இந்துத்துவச் சகதியில் மூழ்கடிக்கத் துடிப்பதில் இவர்களுக்குள் வேறுபாடு உண்டா? எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைக் கடுகளவும் சகித்துக் கொள்ள மாட்டோம் எனத் தேர்தல் அறிக்கையில் இந்துத்துவம் கக்குகிறது 

நேற்று முளைத்த ஆம் ஆத்மி. அவன் எல்லையை அவன் விருப்பப்படி தாண்டுவதையே பயங்கரவாதம் என வர்ணிக்கும் இவர்கள் அல்லவா உண்மைப் பயங்கரவாதிகள்? ராகுல், காரத், பரதன், கெஜ்ரிவால் கூட்டத்துக்கும் மோடிக்கும் என்ன வித்தியாசம் - ஒற்றைத் தாடி தவிர.

உலக வானிலையில் கட்ரினா, சாண்டி, தானே எனப் பல பெயர்களில் புயல்கள் வீசுவது போல், இந்திய அரசியலில் இந்திராவின் நெருக்கடி நிலைக்கு எதிரான ஜனதா அலை, ராஜீவின் போஃபர்சுக்கு எதிரான வி. பி. சிங் அலை, வாஜ்பாய் புளுகிய ஒளிரும் இந்தியாவுக்கு எதிரான காங்கிரஸ் அலை எனப் பல அலைகள் வீசியதுண்டு. காங்கிரசின் கடைந்தெடுத்த ஊழல் ஆட்சிக்கு எதிரான இந்தப் புயலை இன்றைய இந்திய அரசியல் மோடி அலை என அழைக்கிறது, அவ்வளவே! எல்லாம் சாரத்தில் இந்துத்துவ அலைகளே! உலகமய, தாராளமய ஆதரவு அலைகளே!

இந்தியக் கட்சிகள் அனைத்தும் வெவ்வேறு அணிகள் அல்ல, அவை உள்ளபடியே ஒரே இந்துத்துவ அணியில் கைக்கோத்து நிற்பதை இன்னும் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகின்றன தமிழகத் தேர்தல் முடிவுகள்!

மோடி அலை என்றல்ல, காங்கிரஸ், சிபிஐஎம், சிபிஐ, ஆம் ஆத்மி என எந்த இந்துத்துவ அலையும் வீசாது தடுத்து நிறுத்தியது பெரியார் பண்படுத்தித் தந்த தமிழ் மண்.

ஆரிய சமற்கிருதக் குடும்பத்தின் இந்தியைத் திணிப்பதே இந்தியம் என்றால், அதனை எதிர்ப்பதே சரியான இந்துத்துவ எதிர்ப்புக் கொள்கை, சாரத்தில் உண்மையான இடதுசாரிக் கொள்கை. அந்த இந்தியை ஆதரித்த காங்கிரசுக்குத் தமிழ் மண் 1967இல் மரண அடி கொடுத்தது என்றால், இன்று அந்தக் காங்கிரசையும், இந்தித் திணிப்பு எதிர்ப்பு உட்பட தெளிவான மொழிக் கொள்கை ஏதுமில்லாத இடதுசாரிகளையும் வெறும் உதிரிக் கட்சிகளாக்கி, அவர்கள் பாஷையில் சொன்னால் ஃபிரிஞ்ச் க்ரூப்பாக்கி, அவற்றின் சவப் பெட்டிகளுக்குக் கடைசி ஆணிகளையும் அறைந்து விட்டது.

இந்தித் திணிப்பு என்றல்ல, தமிழீழ விடுதலை, காவிரிச் சிக்கல், மூவர்த் தூக்கு எனத் தமிழகத்தின் அனைத்து உயிர்நாடிச் சிக்கல்களிலும் தமிழர்களுக்கு இரண்டகம் செய்து வந்ததால் காங்கிரசுக்கும் இடதுசாரிகளுக்கும் கிடைத்த இறுதி அடியிது.

காஷ்மீரத்துக்குச் சிறப்புத் தகுநிலை அளிக்கும் 370 சட்டப் பிரிவை நீக்கச் சொல்லும் பாஜகவின் கொள்கையை இனவெறியாகக் காட்டுவதில் இந்தியக் கட்சிகள் எதற்கும் முரண்பாடில்லை என்பது போல்தான் தெரிகிறது. ஆனால் 370இன்படி காஷ்மீரத்தில் அயல் மாநிலத்தார் நிலம் வாங்குவதைத் தடுக்கும் வலிமை தமிழகத்துக்கும் வேண்டும் எனத் தமிழ்த் தேசியர்கள் கேட்டால் போதும், உடனே காங்கிரஸ் போன்ற வலதுசாரிகளும், ஆம் ஆத்மி போன்ற நடுசாரிகளும், மார்க்சிஸ்டு போன்ற இடதுசாரிகளும், ஏன், மகஇக போன்ற தீவிர இடதுசாரிகளுங்கூட பாரத ஒற்றுமையே கெட்டு விட்டதென வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கின்றனர். தமிழகச் சொத்துரிமை தமிழர்களுக்கு வேண்டும் என்ற சனநாயகக் குரலை இனவாதம் எனத் தூற்றுகின்றனர். அதற்காகப் போராடுவோரைப் பிரிவினைவாதிகள் என்றும் பாசிஸ்டுகள் என்றும் பழிக்கின்றனர். பாரதக் கட்சிகளின் இந்த அநீதிப் பார்வைதான் தேவிகுளம், பீர்மேடு உள்ளிட்ட தமிழர்களின் பாரம்பரிய நில மீட்புப் போராட்டத்தை எதிர்ப்பது வரை நீள்கிறது.

தமிழகத்துக்கு அனைத்து வகையிலும் பகையாகச் செயல்பட்ட காங்கிரஸ், இடதுசாரிகளின் தேர்தல் தோல்வியில் குளிர் காயலாம் எனப் படபடத்த இந்துத்துவக் கூட்டத்தினர், குறிப்பாகப் பெரியாரை எதிர்க்கும் ஒரு கட்சி தமிழக ஆட்சியைப் பிடிக்காதா என்று அரை நூற்றாண்டுக்கு மேலாகக் கனவு கண்டு வந்த சோ கூட்டத்தினர் மோடியை வாராது வந்த மாமணியாகக் கருதினர். சில தமிழகக் கட்சிகளின் தயவில் வானவில் கூட்டணி அமைத்து விட்டதாகவும், இது பெரும் மோடி அலையாக எழுந்து திராவிடக் கட்சிகளைச் சாய்த்துக் காட்டும் எனவும் கொக்கரித்தனர். இது பெரியார் பிறந்த மண் என்று பேச இனி ஆளிருக்காது என இந்துத்துவக் கனா கண்டனர். மோடி அலையால் பாஜக மட்டுமே 20 விழுக்காடு வாக்குகளை அறுவடை செய்யும் எனக் கதை அளந்தனர். ஆனால் மொத்தக் கூட்டணியும் 15 விழுக்காட்டைத் தாண்டவில்லை!

சிற்சில தொகுதிகளில் பாஜக ஓரளவுக்கு நல்ல வாக்கு அறுவடை செய்திருப்பது உண்மைதான். ஆனால் தமிழீழத்துக்கு, மீனவர்களுக்கு, எழுவர் விடுதலைக்கு எதிரான காங்கிரசின் நடவடிக்கைகளை எதிர்ப்பதாகக் கூறித்தான் தமிழக பாஜகவால் இந்த நிலையைக் கூட அடைய முடிந்துள்ளது. ஆனால் இந்திய பாஜகவின் உண்மையான ஈழ எதிர்ப்பு முகம் வெளிப்படும் போது காங்கிரசுக்கும் இடதுசாரிகளுக்கும் ஏற்பட்ட நிலையே பாஜகவுக்கும் ஏற்படும்.

காங்கிரசின் அனைத்துத் தமிழ் விரோத நடவடிக்கைகளிலும் பங்கு வகித்த திமுக தனது குற்றங்களிலிருந்து கடைசி நேரத்தில் சாமர்த்தியமாகக் கழன்று கொள்ள நினைத்தாலும், மக்கள் அவர்களை மன்னிக்கத் தயாராக இல்லை என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன.

இந்தத் தேர்தலில் பெரு வெற்றி கண்டுள்ள அதிமுகவின் தலைவியான ஜெயலலிதாவுக்கு உண்மை உளக்கிடக்கை இந்துத்துவமாக இருக்கலாம். ஆனால் அவர் தடம் மாறும் போதெல்லாம் வாக்கு வங்கி அரசியல் அவரைச் சமூகநீதிக்கும் தமிழுணர்வுக்கும் ஆதரவாகத் தள்ளியதை வரலாறு படம்பிடித்துக் காட்டுகிறது. வி. பி. சிங்கின் மண்டல் குழு நிலைப்பாட்டை எதிர்த்த ஜெயலலிதாதான் பின்னர் தமிழகத்தின் 69% இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகத் தனிச் சட்டம் இயற்றினார். தமிழீழ விடுதலையை அன்றாடம் எதிர்த்து வந்த ஜெயலலிதாதான் தமிழகச் சட்டமன்றத்தில் இலங்கையின் மீதான பொருளாதாரத் தடை கேட்டும், தமிழீழத்தில் பொது வாக்கெடுப்பு கோரியும், சென்னையில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை ஆட்டக்காரர்களை நீக்க வேண்டியும் தீர்மானங்கள் இயற்றினார். தூக்கிலிருந்து கலைஞரால் நளினி ஒருவர் விடுவிக்கப்பட்டதையே எதிர்த்தவர்தான் இன்று எழுவர் விடுதலைக்கும் குரல் கொடுக்கிறார்.

இந்த அனைத்துச் சிக்கல்களிலும் அதிமுக, திமுக உள்ளிட்ட மாநிலக் கட்சிகளும், காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்டு உள்ளிட்ட இந்தியக் கட்சிகளும் அடிப்படையில் பிளவுபட்டு நிற்பதைத் தெளிவாய்க் காணலாம்.

மேம்போக்காகப் பார்த்தால், தமிழகத்தில் பெரியாருக்கு எதிரான பாஜக கொஞ்சம் கொஞ்சம் குருத்து விடுவதாகத் தெரிந்தாலும், அது பெரியார், அண்ணா மொழியில் பேசித்தான் மக்களைச் சந்திக்கிறது, வாக்குக் கேட்கிறது. "நமஸ்காரம்" என அக்கிரகாரத் தமிழில் பேசி வந்த காங்கிரஸ்காரர்களை, இன்று சோ தொடங்கி பெரியாரை அநாகரிக வார்த்தைகளில் இழிவுபடுத்தி வரும் எச். ராஜா வரை, ஏன், குசராத்தி மோடிக்குங்கூட "வணக்கம்" எனப் பேசக் கற்றுக் கொடுத்தது, அல்லது பேச வைத்தது திராவிடமும் அதன் தலைவர்களுமே! அக்கிராசனர், அபேட்சகர் என மணிப்பிரவாளத்தில் நடந்து வந்த அவர்களின் தேர்தல் பரப்புரைகளில் தலைவர், வேட்பாளர் ஆகிய அழகு தமிழ்ச் சொற்களைத் தவழச் செய்ததும் திராவிடக் கட்சிகளே!

பாஜகவினர் உண்மையிலேயே பெரியாரை எதிர்த்துத் தமிழக ஆட்சிக் கட்டிலேற விரும்பினால், பேசிப் பார்க்கட்டுமே: "எல்லாருக்கும் நமஸ்காரம்! பாஜகவின் இந்திய அக்கிராசனர் ராஜ்நாத்சிங், தமிழக அக்கிராசனர் பொன்னார் ஆகியோர் ஆசிர்வதித்த எங்களின் மதறாஸ் அபேட்சகர்களுக்கு ஓட் பண்ணுங்கோ! நாங்க மத்திய சர்க்காருக்கு வந்தா, எங்க ஆர்எஸ்எஸ் அக்கிராசனர் ஹெட்கேவர் உபன்யாசத்தின்படி, சமஸ்கிருதத்தை பாரத பாஷா ஆக்குவோம்! பாரதத்தை பாஷைக்கு ஒண்ணா பிரிக்க மாட்டோம்! கோ மாமிசம் சாப்பிட்டா தேசப் பிரஷ்டம் பண்ணுவோம்! வருணாசிரம தர்மத்தை நிந்திக்கும் நாஸ்திகர்களை த்வம்சம் பண்ணிடுவோம். அதனால நிச்சயமா எல்லாரும் எங்களுக்கு ஓட் பண்ணி ஜெயம் கொடுக்கணும்!"

இந்த பாஜக பரப்புரை வென்றால், அதுவே உண்மையான மோடி அலை, இந்துத்துவ அலை! அது வரை தமிழ் மண்ணில் மேவி தவழப் போவது பெரியார் அலையே!

(01.06.2014 ஆழம் இதழில் வெளியான கட்டுரை)

- நலங்கிள்ளி (enalankilli@gmail.com

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger