Home » » உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் தமிழ் வளர்ச்சி கருத்தரங்குகள் நடத்தப்படும்

உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் தமிழ் வளர்ச்சி கருத்தரங்குகள் நடத்தப்படும்



உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் தமிழ் வளர்ச்சிக் கருத்தரங்குகள் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச் செல்வன் கூறினார். 

உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்ற, "தமிழ் வளர்ச்சியில் முன்னேற்றம்' என்ற தலைப்பிலான கருத்தரங்கைத் துவக்கிவைத்து அவர் பேசியது:

தமிழ் வளர்ச்சிக்கும், தமிழர்களின் முன்னேற்றத்துக்கும் உந்து சக்தியாக தமிழக முதல்வர் ஜெயலலிதா செயலாற்றி வருகிறார். தமிழின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட பல்வேறு தமிழறிஞர்களுக்கும் அங்கீகாரம் அளித்து அவர்களுக்கு விருது வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறார்.

உலகின் தொன்மையான மொழிகளான லத்தீன், கிரேக்கம், சீனம், ஈபுரு, சமஸ்கிருதம் ஆகியவற்றின் வரிசையில் தமிழுக்கு தனி இடம் இருக்கிறது. பிற தொன்மையான மொழிகளைக் காட்டிலும் பேச்சிலும், எழுத்திலும் நிலைத்து நிற்கும் மொழியாக தமிழ் விளங்கி வருகிறது. பிற மொழிகளோடு ஒப்பிட்டுப் பேச முடியாத பெருமையைப் பெற்றிருப்பது தமிழ்தான்.

அத்தகைய சிறப்புக்குரிய தமிழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில், மதுரையில் தமிழ்த்தாய் சிலை அமைக்க ரூ.100 கோடியை தமிழக முதல்வர் ஒதுக்கியுள்ளார். 
 
முன்னாள் முதல்வர் அண்ணா, 2 ஆவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்தியபோது, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் கொண்டு வரப்பட்டது. ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்திய எம்.ஜி.ஆர்., உலகத் தமிழ்ச் சங்கத்தை அறிவித்தார். 
 
முதல்வர் ஜெயலலிதா, 8 ஆவது உலகத் தமிழ் மாநாடு நடத்தியபோது அறிவியல் தமிழ் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது உலகத் தமிழ்ச் சங்கத்துக்கு உயிரோட்டத்தைக் கொடுத்துள்ளார். உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் தமிழ் வளர்ச்சிக் கருத்தரங்குகள் நடத்தப்படும் என்றார் அமைச்சர் வைகைச்செல்வன்.

தமிழ் வளர்ச்சித் துறைக்கு இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளில் தமிழக முதல்வர் ஏராளமான திட்டங்களை வழங்கியுள்ளார் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அறிவித்த உலகத் தமிழ்ச் சங்கத்தை, முந்தைய அரசு அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக கிடப்பில் போட்டது. தற்போது முதல்வர் ஜெயலலிதா அதற்கு உயிரோட்டம் கொடுத்திருக்கிறார். உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வர வேண்டும் என சட்ட அமைச்சர்கள் மாநாட்டிலேயே வலியுறுத்தியுள்ளார் என்று தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே.ஜக்கையன் கூறினார்.

தமிழ் வளர்ச்சித் துறைச் செயலர் எம்.ராஜாராம், மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா, மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.கே.போஸ், ஆர்.சுந்தர்ராஜன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கா.மு. சேகர், உலகத் தமிழ்ச் சங்க தனி அலுவலர் (பொறுப்பு) க.பசும்பொன் ஆகியோர் பேசினர்.                                                                                           

தமிழ்த்தாய் சிலை அமைப்பதற்கு    மதுரையில் 4 இடங்கள்  தேர்வு செய்யப்பட்டுள்ளன.சிலை அமையவுள்ள இடத்தை முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பார். இதற்கு முதற் கட்டமாக ரூ.25 கோடிஒதுக்கியுள்ளார். .                                                                  
 
நன்றி :- தினமணி, 19-07-2013.


0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger