Home » » குவாதமாலா அதிபருக்கு வழங்கப்பட்ட தண்டனை - தமிழர்களுக்குத் தரும் நம்பிக்கைகள்

குவாதமாலா அதிபருக்கு வழங்கப்பட்ட தண்டனை - தமிழர்களுக்குத் தரும் நம்பிக்கைகள்




மின்னஞ்சல்
 
முதலாம் உலகப் போர் நடைபெற்ற, 1915, 1916ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஒட்டோமன் பேரரசினால் 1.5 மில்லியன் வரையான ஆர்மேனியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 
 
இன்று இலங்கையின் இனப்படுகொலைகளுக்கு அஞ்சி தமிழர்கள் உலகம் முழுவதும் புலம்பெயர்ந்தது போன்றுதான், அன்று ஒட்டோமன் பேரரசின் தாக்குதலுக்கு அஞ்சி உலகம் முழுவதும் ஆர்மேனியர்கள் சிதறிப் போனார்கள். 
 
ஒட்டோமன் பேரரசின் இந்த அழிப்பு நடவடிக்கையை ஒரு இனப்படுகொலை என்றே ஆர்மேனியா கூறிவந்தது. ஆனாலும், உலகம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
 
படுகொலை நடைபெற்று நூற்றாண்டுகளை எட்டும் நிலையில், ஒட்டோமன் பேரரசு நடத்திய இந்தப் படுகொலையை, இனப்படுகொலை என்று பிரான்ஸ் தேசம் அங்கீகரித்தது. கடந்த ஆண்டு ஜனவரியில் பிரென்சு மேலவையில் மசோதாவைக் கொண்டுவந்து நிறைவேற்றியதுடன், நடந்தது 
 
இனப்படுகொலை என்பதை ஏற்க மறுக்கும் எவருக்கும் ஓராண்டு வரை சிறைத்தண்டனையையும், 45,000 ஈரோக்கள் வரை அபராதமும் விதிக்கும் சட்டமூலத்தையும் நிறைவேற்றியது.
 
ஆனாலும், ஒட்டோமன் பேரரசின் பின்னர் ஆட்சிக்கு வந்த தற்போதைய துருக்கிய குடியரசு, நூற்றாண்டுக்கு முன்னர் நடந்த இந்தப் படுகொலையை இனப்படுகொலை அல்லவென்றும், கொல்லப்பட்டவர்கள் மிகக் குறைவென்றும், பிரான்ஸ் அரசு தவறான முடிவை எடுத்துவிட்டதாகவும் குற்றம்சாட்டி வருகின்றது. 
 
ஆனாலும், காலம் கடந்தேனும், தங்கள் இனத்தின் மீது நடத்தப்பட்டது ஒரு இனப்படுகொலை என்பதை இந்த உலகம் ஏற்றுக்கொண்டதில் ஆர்மேனியர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.
 
மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள குவாதமாலா 19ஆம் நுற்றாண்டின் தொடக்கத்தில் ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது. எனினும் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்களாலும், அயல் நாட்டு அரசியல் தலையீடுகளாலும் குவாதமாலாவின் பூர்வீக குடிகளான மாயா இன மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டார்கள். 
 
அகிம்சை வழியிலான அவர்களது போராட்டங்கள் அனைத்தும் தோற்றுப்போன நிலையில், 1960களில் ஆயுதங் தாங்கிய கொரில்லாப் போராட்டங்களில் குதித்தார்கள். 
 
விளைவு, தொடர்ச்சியாக வந்த ஆட்சியாளர்கள் அவர்களை ஒடுக்குவதில் கங்கணம்கட்டி நின்றார்கள். இலங்கைத் தீவைப்போல் மாறிமாறி ஆட்சியிலமர்ந்த எல்லோருமே, கொரில்லாக்களை ஒடுக்குவதாகக் கூறிக்கொண்டு அந்த மக்களை ஒடுக்குவதிலேயே முன்னின்று செயற்பட்டார்கள்.
 
 இவர்களில் மாறுபட்ட ஒருவராக இராணுவ அதிகாரியாக இருந்து வந்து அதிகாரத்தைக் கைப்பற்றியவர்தான் எஃப்ரெய்ன் ரியோஸ்மான்ட். 1982ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இவர் ஆட்சியைக் கைப்பற்றியபோது, அமைதியான நாட்டை உருவாக்கியுள்ளதாகக் கூறி இவருக்குப் பெரும் தொகைப் பணத்தை அள்ளிக்கொடுத்தது அமெரிக்கா. 
 
ஆனால், அந்தப் பணம் இன்னும் அழிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவே என்பதை பின்னர்தான் பலரும் உணர்ந்துகொண்டார்கள். சுமார் 15 மாதமே (1983 ஆகஸ்ட் வரை) இவர் பதவி வகித்தபோதும், இவரது ஆட்சியில் சுமார் இரண்டு இலட்சம் பேர் கொல்லப்பட்டதாகவும், 50 ஆயிரம் பேர் கடத்தப்பட்டு காணாமல் போனதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன
கடத்தப்பட்டவர்கள் உலங்கு வானூர்திகளில் ஏற்றிச்செல்லப்பட்டு பசுபிக் பெருங்கடலில் உயிருடன் வீசப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இவரது ஆட்சிக் காலமே மிகவும் இருண்ட காலமாக வர்ணிக்கப்பட்டது.
 
இலட்சக் கணக்கானவர்களின் படுகொலைக்கு இவர் காரணமானபோதும், 1771 பேரது படுகொலைக்கு இவரே காரணம் என்றும் இதுவொரு இனப்படுகொலை என்றும் இவர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வழக்குத் தொடரப்பட்டது. 
 
அந்த வழக்கை ஏற்றுக்கொள்ள குவாதமாலா அரசு மறுத்துவிட்டது. இந்நிலையில்தான் 2006ஆம் ஆண்டும் இவர் மீதான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணைகளின் முடிவில் இவர் மீதான இனப்படுகொலை மற்றும் போர்க் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதையடுத்து, கடந்த வாரம் அவருக்கு நீதிமன்றம் 80 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி உள்ளது.
 
"இனப்படுகொலை நிகழ்ந்ததற்கு ரியோஸ் மூல காரணமாக இருந்துள்ளது நிரூபணமாகியுள்ளது. இனவெறி காரணமாக ஒரு குறிப்பிட்ட இனம் முழுவதையும் அழிக்க முயற்சி செய்துள்ளார். இதுபோல அவர் மீதான போர்க் குற்றமும் நிரூபிக்கப்பட்டுள்ளது. 
 
இனப்படுகொலை குற்றத்துக்காக 50 ஆண்டுகளும், போர்க் குற்றத்துக்காக 30 ஆண்டுகளும் தண்டனை வழங்கப்படுகிறது'' என்று இந்த வழக்கு விசாரணையை நடத்திய நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார். அத்துடன், ரியோஸின் வீட்டுக் காவலை இரத்து செய்து அவரை சிறையில் அடைக்கவும் அவர் உத்தரவிட்டார்
.
நீதிமன்றத்தில் குழுமியிருந்த போரினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும், உறவினர்களும் நீதிபதியின் தீர்ப்பைக் கேட்டதும் கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
 
 இந்தத் தீர்ப்பை எதிர்த்து ரியோஸ் மேல் முறையீடு செய்யமுடியும் என்றபோதிலும், ரியோஸ் மான்ட் இனப்படுகொலைக்காக தண்டிக்கப்பட்ட முதல் இலத்தீன் அமெரிக்கர் ஆகியுள்ளார். 
 
இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பு என மனித உரிமையாளர்களும், சமூக ஆர்வலர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர். 
 
ஏனெனில், உலகிலேயே முதன்முறையாக இனப்படுகொலை வழக்கில் அதே நாட்டைச் சேர்ந்த ஒருவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளனர். இன, மத, அரசியல் காரணங்களுக்காக ஒரு குறிப்பிட்ட இன மக்களை ஒட்டுமொத்தமாக அழிக்க முயற்சி செய்ததாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
 
காலம் கடந்தேனும் ஆர்மேனியர் மீதான இனப்படுகொலை அங்கீகரிக்கப்பட்டதும், குவாதமாலா முன்னாள் ஜனாதிபதிக்கு இனப்படுகொலைக்காகத் தண்டனை வழங்கப்பட்டதும், இன அழிப்பிற்கு உள்ளான தமிழ் மக்களுக்கு நம்பிக்கை தரும் செய்திகளாக உள்ளன.
 
சிங்களப் பேரினவாதம் இவர்களையெல்லாம் விட மிகக் கொடூரமான இனப்படுகொலையை தமிழர்கள் மீது புரிந்துள்ளது. 60 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களால் தமிழர்கள் தொடர்ச்சியாக திட்டமிட்டு அழிக்கப்பட்டு வந்துள்ளார்கள். 
 
இந்தப் பேரினவாதம் நடத்திய தனது இன அழிப்பின் உச்சத்தை தற்போதைய ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சே எட்டியுள்ளார். இந்த இன அழிப்பைத் தனது ஆட்சியின் பெரும் வெற்றியாகக் கொண்டாடியும் வருகின்றார்.
கிடைத்துவரும் உலக ஆதரவுகளும், பாதுகாப்பும் தற்போது இவர்களை விட்டுவைக்கலாம். 
 
ஆனால், இவர்களும் இனப்படுகொலையாளிகளாக இந்த சர்வதேசத்தினால் அங்கீகரிக்கப்பட்டு, தண்டனை வழங்கப்படும் நாள் விரைவில் வந்தே தீரும். காலம் கடந்து வழங்கப்படும் நீதி, அநீதியை விடக் கொடுமையானது. 
 
காலத்தைக் கடத்தாது அந்த நாளை புலம்பெயர்ந்த தமிழர்கள் விரைந்து உருவாக்க வைப்பதே, முள்ளிவாய்க்கால் இறுதிவரையும் அதற்குப் பின்னரும் இனப்படுகொலைக்கு உள்ளாகிக்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களுக்கு வழங்கக்கூடிய குறைந்தளவு நீதியாக இருக்க முடியும்.
 
நன்றி : ஈழமுரசு 14-20 மே 2013 
 

 

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger