Home » » மதுரைத் தமிழ்ச் சங்கம் சிக்கல்களிலிருந்து மீண்டு வருவது எப்போது ??

மதுரைத் தமிழ்ச் சங்கம் சிக்கல்களிலிருந்து மீண்டு வருவது எப்போது ??

தமிழின் கலாசாரத் தலைநகராகக் கருதப்படும் மதுரையின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் 102 ஆண்டுகள் பாரம்பரியமிக்க தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடுகள் தற்போது தடுமாற்றத்தில் இருப்பதாக ஆதங்கப்படுகிறார்கள் தமிழறிஞர்கள்.

மதுரையில் 1901- ஆம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற 3 நாள் சென்னை மாகாண அரசியல் மாநாட்டில் தலைமை வகித்த பாண்டித்துரைத் தேவர் தமிழ் மொழி நிலை பெற்று வளர தமிழ்ச் சங்கம் அவசியம் என்றார். அதன்படி, சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழ்ச் சான்றோர் கூடி தமிழ்ச் சங்கம் அமைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றினர்.

1901 ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் தேதி மதுரை தமிழ்ச் சங்கம் உருவானது. அதன் நிறுவனராக பொன்.பாண்டித்துரைத் தேவரும், தலைவராக மன்னர் பாஸ்கர சேதுபதியும் இருந்தனர். பாஸ்கர சேதுபதி ரூ.10 ஆயிரத்தை தமிழ்ச் சங்கத்துக்கு நன்கொடையாக வழங்க, பாண்டித்துரைத் தேவர் தமது ஜமீனை விற்று சங்கத்துக்காக ரூ.1 லட்சம் வழங்கினார்.

அதன்படி, பழைய தமிழ் நூல்கள் புதுப்பிக்கப்படவும், ஓலைச்சுவடிகள் காப்பாற்றப்படவும், தமிழறிஞர்கள் தமிழின் தொன்மையை உலகுக்கு உணர்த்தும் வகையில் செயல்படவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தமிழ்ச் சங்கத்துடன் செந்தமிழ் கலாசாலை, பாண்டியன் புத்தகசாலை, நூலாராய்ச்சி சாலை ஆகியவையும் தொடங்கப்பட்டன.

செந்தமிழ்க் கலாசாலைக்கு இலக்கணப் புலவர் நாராயண ஐயங்காரும், நூலாராய்ச்சி சாலைக்கு தமிழறிஞர் மு. ராகவையங்காரும் தலைமை வகித்தனர். சங்கத்தில் 49 தமிழ்ப் புலவர்கள் இடம் பெற்றனர். தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதய்யர் தமிழ்ச் சங்கத்தின் உதவியுடன் மணிமேகலையை முழுமையாகவும், சிலப்பதிகாரத்தின் விடுபட்ட பகுதிகளையும் புதுப்பித்தார்.

இச் சங்க வெளியீடாக தொடர்ந்துவரும் செந்தமிழ் இதழில்தான் பரிதிமாற் கலைஞர் தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து வழங்கக் கோரி கட்டுரை எழுதினார். சங்கம் 1908-ல் முறையாக அரசிடம் பதிவுபெற்றது. அதன்படி, சங்கங்களது சட்டப்படி செயல்படுவது அவசியம். சங்கத்தின் நோக்கங்களில் ஒன்றான தமிழ்க் கல்லூரி தொடங்கும் வகையில் செந்தமிழ்க் கல்லூரி 1957-ல் தொடங்கப்பட்டது.

ஆரம்பத்தில் தமிழ்ப் புலவர் கல்வி கற்பிக்கப்பட்டுவந்த இக் கல்லூரியில் தற்போது தமிழ் இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சிப் படிப்புகளுடன், சம்ஸ்கிருதம், கணினி வழிக் கல்வியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கல்வெட்டு ஆராய்ச்சி, ஓலைச்சுவடி ஆய்வு ஆகியவையும் கற்பிக்கப்படுகின்றன.

இங்கு 50 ஆயிரம் தமிழ் நூல்கள் உள்ளன. இங்குள்ள வைத்தியசாரசங்கிரகம் எனும் ஜோதிட நூலும், பன்னூல் திரட்டும், 86 சிற்றிலக்கியத் தொகுப்பு உள்ளிட்ட பலவகை நூல்கள் வேறு எங்கும் கிடைக்காதவை.
மேலும், தமிழின் இலக்கண விளக்கம், பாகவதம், தொன்னூல் விளக்கம் உள்ளிட்ட மிக அரிய ஓலைச்சுவடிகள் இங்குள்ளன.

தற்போது 256 ஓலைச்சுவடிகள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதிலிருந்துதான் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கே ஓலைச்சுவடிகள் பார்வையிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மதுரைத் தமிழ்ச் சங்கத்தை பெருமைப்படுத்தும் வகையில் கடந்த 1981-ல் மதுரையில் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டபோது, வள்ளல் பொன்.பாண்டித்துரைத் தேவரின் முழு உருவச்சிலையும் நிறுவப்பட்டது. திமுக ஆட்சியிலும் சங்கக் கட்டடத்துக்கு நிதி அளிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு அரசு சார்பில் முதல்வர் ஜெயலலிதாவால் சங்கத்துக்கு தமிழ்த்தாய் விருது வழங்கப்பட்டது. இது மதுரைத் தமிழ்ச் சங்கத்துக்கு அரசு சார்பில் அளிக்கப்பட்ட முதல் விருது மட்டுமல்ல, முதல் மரியாதையாகும். விருதுடன் ரூ.5 லட்சம் நிதியும் கிடைத்துள்ளது.

ஆனால், கடந்த 2007 முதலே சங்கம் மற்றும் கல்லூரியில் நிர்வாக ரீதியில் ஏற்பட்ட பிரச்னை நீதிமன்றத்துக்கும் சென்றுள்ளது. சங்கத்தை தோற்றுவித்த பாண்டித்துரைத் தேவர் வாரிசுகளைக்கூட சங்கத்திலிருந்து நீக்கியிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்கள் தமிழறிஞர்கள். இதனால் சங்க நடவடிக்கை முடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

சங்கம் சார்பில் மாதந்தோறும் தமிழறிஞர்களது சிறப்புச் சொற்பொழிவு நடத்தப்படும். புதிய தமிழ் இலக்கிய, சொற்பொழிவு நூல்கள் வெளியிடப்படும். வெளிநாட்டு அறிஞர்களது, வெளி மாநில மொழி ஆய்வாளர்களது நூல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்படும். பிரச்னை காரணமாக கடந்த ஓராண்டில் எவ்வித செயல்பாடும் நடைபெறவில்லை என்கிறார்கள் தமிழறிஞர்கள்.

இந்த நிலையில் சமீபத்தில் தமிழ்ச் சங்கத்தின் அசாதாரண பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. கல்லூரி காலி பணியிடங்களை நிரப்புவதில் பிரச்னை ஏற்பட்டு, தமிழ்ச் சங்கத்தின் செயல்பாட்டையும் பாதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தற்போதைய நிர்வாகத் தரப்பினரிடம் கேட்டபோது, பிரச்னையைத் தீர்க்க சமரசப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறோம். ஆனால், எதிர் தரப்பினர் நீதிமன்றத்தை நாடுவதால் எதுவும் செய்ய முடியவில்லை என்கின்றனர்.

எது எப்படியோ, தமிழின் அடையாளமாகத் திகழும் மதுரை தமிழ்ச் சங்கத்தை எந்த நோக்கத்தில் பாண்டித்துரைத் தேவர் அமைத்தாரோ, அதை நிறைவேற்றும் வகையில் சம்பந்தப்பட்டோர் செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் கருத்து. கல்வி என்பது வர்த்தகமாகிவிட்ட நிலையில், அதிலிருந்து தமிழ்ச் சங்கமாவது விலகியிருக்க வேண்டும் என்கிறார்கள் தமிழ் ஆர்வலர்கள்.
 
ஆகவே, மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம் அமைக்கவும், 100 அடி உயர தமிழ்த்தாய் சிலை அமைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா நான்காம் தமிழ்ச் சங்கத்தின் சிக்கலைத் தீர்க்கவும் முன்வர வேண்டும் என்பதே தமிழறிஞர்களின் எதிர்பார்ப்பு.                                                         
----------------------------------------------------------------------------------------------------------------
நன்றி :- சிறப்பு நிருபர், மதுரை, தினமணி, 26-07-2013

--------------------------------------------------------------------------------------------------------------
தமிழகம் முழுவதும் இலக்கியக் கருதரங்குகளைப் அனைத்துப் பள்ளிக்கூடங்க்களிலும், கல்லூரிகளிலும் நடத்த வேண்டும். தமிழனாய்ப் பிறந்தவன்  அனைத்துத் தமிழ் நூல்களையும் கரைத்துக் குடிக்காவிட்டாலும்,
இன்னின்ன நூல்கள் தமிழில் இருக்கின்றன; அவற்றில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் எவை? என்பதுபற்றிய விழிப்புணர்வை மாணாக்கர்களுக்கு ஏற்படுத்திடல் வேண்டும்.
 --------------------------------------------------------------------------------------------------------------
அலங்காரமான பந்தல்களை அமைத்து, அவ்வப்போதைய ஆட்சியாளர்கள் மேடையில் ஏறிப்பேசி இறங்கினால் மட்டும் தமிழ் வளர்ந்து விடாது இத்தகைய ஆடம்பரச் செலவினங்க்களைத் தவிர்த்து, இருப்பனவற்றைக் காப்பாற்றி, மாணாக்கர்கள் மத்தியில் தமிழைப் பேசிட, வாசிக்கச் செய்திடல் வேண்டும்
 ------------------------------------------------------------------------------------------------------------
இன்றையச் சூழலில், சில தேர்வுகளுக்கு WITHI AID Of BOOKS --என்று இருப்பதுபோல்,  .மாணாக்கர்களை மேடையில் ஏற்றி, அறிமுகமில்லாத நூல்களைக் கொடுத்துப் பார்த்து வாசிக்கச் செய்து, சிறந்தோர்க்குப் பரிசு வழங்குவது கூடத் தமிழை வளர்க்கும் முயற்சிகளில் ஒன்றாக அமையும்.
--------------------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger