Home » » ஏரிப்பாசானத்தையும் பொதுப்பணித்துறையே மேற்கொள்ளுமா ?

ஏரிப்பாசானத்தையும் பொதுப்பணித்துறையே மேற்கொள்ளுமா ?

கி.சிவசுப்பிரமணியன்
சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின்
துணைப்பேராசிரியர் 
--------------------------------------------------------------------------------------------------------------
கால்வாய்ப் பாசானத்தில் ஏறத்தாழ 100 % பராமரிப்பு மேலாண்மையைப் பொதுப் பணித்துறையே மேற்கொண்டு வருகிறது.ஆனால், இதே நிலையில் இருக்கவேண்டிய ஏரிப்பாசானத்தின் பராமரிப்பு மேலாண்மை பல நிலைகளில் சீரழிக்கப்பட்டு, உபயோகமற்ற - செயல்படுத்த இயலாத பல்வேறு சட்டங்க்கள் மற்றும் அரசு ஆணைகளால் ஏரிப் பாசானம் மெல்லச் செயல் இழந்து வருகிறது .
--------------------------------------------------------------------------------------------------------------

பஞ்ச பூதங்களாகிய நிலம், நீர், காற்று, தீ மற்றும் ஆகாயம் ஆகிய இவ்வைந்தினுள் நிலம், நீர் இவை இரண்டில் மட்டுமே தனி மனிதர்களின் ஆட்சி, அதிகாரம் தழைத்து ஓங்கியுள்ளது. ஏனெனில் இவை இரண்டில் மட்டுமே தனி மனிதர்களோ அல்லது அரசுகளோ உரிமை கொண்டாட முடிகிறது.

உதாரணமாக, மாநிலங்கள் (தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளம்) இடையே உள்ள நீர் உடைமையிலுள்ள உரிமை மற்றும் நாடுகளுக்கு இடையே (இந்தியா - இலங்கை கச்சத்தீவு; இந்தியா - பாகிஸ்தான் இடையேயான காஷ்மீர்) உள்ள நில உரிமைப் பிரச்னை எனப் பல்வேறு நிலைகளில் இவைகளைக் கூறலாம்.

இந்த நிலம், நீர் உரிமைகள் தனி மனிதர்கள் மற்றும் அரசுகளின் அதிகார வரம்பில் இருக்கும்வரை அவற்றைப் பாதுகாத்து, சீர் செய்து பயன்படுத்திக் கொள்வது அவரவர்களின் கடமையாக உள்ளது.

ஆனால், இதே நிலம் மற்றும் நீர் உரிமைகள் பொதுச் சொத்துகளாக உள்ள நிலையில் அவற்றைப் பாதுகாப்பதும், பராமரிப்பதும் மிக மிகக் கடினமான செயலாகவே உள்ளது. அதுவும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இன்னும் மக்களிடையே படிப்பறிவு 100 சதவிகிதம் இல்லாத நிலையில் பொதுச் சொத்துகளைப் பராமரிப்பது மற்றும் பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு சிறிதும் இல்லாமல் இருப்பதால் அப்பொதுச் சொத்துகள் தனியார் மற்றும் அரசுகளால் பல்வேறு வழிகளில் அபகரிக்கப்படும் நிலையே தற்போது உள்ளது.

இதனால் வரும் பாதிப்பு தனி மனிதனுக்கு மட்டுமன்றி இயற்கை வளங்கள் சீர்கேடு மற்றும் சுற்றுச்சூழல் சமநிலை பாதிப்பு போன்ற பல்வேறு இன்னல்களால் பெருவாரியான மக்கள் பாதிப்படையும் சூழ்நிலை அதிகரித்துக்கொண்டே வருகிறது. மேற்கூறப்பட்ட பிரச்னைகளின் மொத்த வடிவமாகத் திகழ்வது தற்போதைய ஏரிப்பாசனம்.

தமிழகத்தின் மூன்று முக்கிய பாசன ஆதாரங்கள்: கால்வாய், ஏரி மற்றும் கிணறு. கால்வாயும் ஏரிகளும் தமிழகத்தில் பொது நீர்ப்பாசனத்தில் வருகின்றன. கால்வாய் பாசனத்தில் ஏறத்தாழ 100 சதவிகிதம் பராமரிப்பு மேலாண்மையை பொதுப்பணித் துறையே மேற்கொண்டு வருகிறது. ஆனால், 
 
இதே நிலையில் இருக்க வேண்டிய ஏரிப் பாசனத்தின் பராமரிப்பு மேலாண்மை பல நிலைகளில் சீரழிக்கப்பட்டு, உபயோகமற்ற - செயல்படுத்த இயலாத பல்வேறு சட்டங்கள் மற்றும் அரசு ஆணைகளால் ஏரிப்பாசனம் மெல்லச் செயல் இழந்து வருகிறது. இதன் வெளிப்பாடே தமிழகத்தின் 41,000 ஏரிகள் மூலம் 10 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட ஏரிப்பாசன ஆயக்கட்டில் நல்ல மழை பெறும் காலங்களிலும் சமீப ஆண்டுகளில் 5 முதல் 6 லட்சம் ஹெக்டேர் மட்டுமே பாசனம் செய்யும் நிலை உள்ளது.

மூன்றில் ஒரு பங்குக்கு மேல் தமிழக விவசாயிகளுக்குப் பாசன ஆதாரமாக விளங்கும் ஏரிகள் அதன் பொழிவை இழந்து வருகின்றன. இதன் அடிப்படைக் காரணம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஏரிகளின் மூலம் கிடைக்கின்ற வருவாய் ஆதாரங்களான ஏரி வண்டல்மண் அகற்றுதல், ஏரிகளில் மீன் வளர்ப்பு மற்றும் மரம் வெட்டுதல் போன்ற பல்வேறு வகையான வருவாய்களை அரசே எடுத்துக்கொண்டு பல்வேறு வகைகளில் விவசாயிகளுக்குப் பயனில்லாத அரசாணைகள் மூலம் அப்பாவி ஏரிப்பாசன விவசாயிகளை தங்கள் வயல் மேம்பாட்டுக்குக்கூட ஏரிகளின் வண்டல் மண்ணை உபயோகிக்க இயலாத நிலைக்குத் தற்போது தள்ளியுள்ளது.

உதாரணமாக, வருவாய்த் துறை; பொதுப்பணித் துறை; மீன்வளத் துறை; வனத் துறை மற்றும் கனிம வளத்துறை போன்ற பல துறையினர் ஏரிப்பாசன விவசாயிகளை அரவணைத்து ஏரிகளின் மேம்பாட்டிற்கு உதவாமல் ஏரிகளில் இருந்து கிடைக்கும் வருவாயையே குறியாகக் கருதி தற்போது செயல்பட்டு வரும்போது ஏரிகளைப் பயன்படுத்தும் ஒவ்வொரு விவசாயியும் சொல்லொணாத் துயருடன் காலம் கழித்து வருகின்றனர்.

தற்போது தமிழகத்தின் ஒவ்வோர் ஏரியிலும் உள்ள முக்கியப் பிரச்னைகளாக இருப்பவை; நில அபகரிப்பு; ஏரி நீர்ப்பரப்பில் பேரளவு மண் குவிந்து அதன் கொள்ளளவு குறைந்துள்ள நிலை; நீர்வரத்துக் கால்வாய்களின் சீரழிந்த மற்றும் மறைந்த நிலை; மதகுகளும், கலிங்குகளும் உபயோகிப்பாளர்களின் முழுத் திருப்தியுடன் இயக்க மற்றும் இயங்க இயலாத நிலை; மற்றும் தங்களது ஏரிப்பாசனப் பிரச்னைகளை உரிய சட்டம் (தமிழ்நாடு விவசாயிகள் நீர்ப்பாசன அமைப்பு முறை மேலாண்மைச் சட்டம் - 2000; சட்டம் எண் 7/ 2001) இயற்றப்பட்டும் அதன் மூலம் எப்படி பல்வேறு வகையான பிரச்னைகளை முழுமையாகத் தீர்த்துக்கொள்வது என அறியாத நிலை போன்றவை.

இப்பிரச்னைகளுக்கெல்லாம் சிகரமாக விளங்குவது, கடந்த 10 ஆண்டுகளாக அமைக்கப்பட்டுள்ள பல்லாயிரம் ஏரிப்பாசன சங்கங்களுக்கு எவ்வித வருவாயும் இல்லாத நிலை ஆகும். ஒவ்வோர் ஏரியும் தங்களின் பிரச்னைகளைச் சொல்ல இயலவில்லையே என கண்ணீர் வடித்துக்கொண்டே விவசாயிகளுக்குத் தாராளமாக உதவி வருவதோடு அரசுக்கும் நிதியளிக்கிறது.

வண்டல் மண் வருவாய்; மீன் ஏல வருவாய் மற்றும் மர ஏல வருவாய் என பல்வேறு வருவாயை ஏரிகள் அளித்தபோதும் அவை அனைத்தும் அரசின் பொது நிதியில் சேர்க்கப்பட்டு வரிகளை உபயோகிப்பவர்கள் ஏரிகளின் வருவாய் முழுமையாகச் சுரண்டப்படுவதை பார்த்துக்கொண்டு வாய்மூடி மௌனிகளாக இருக்கும் நிலையே இன்று உள்ளது.

இச்சூழ்நிலையில், பெருவாரியான ஏரிகளில் சட்டப்படி அமைக்கப்பட்டுள்ள பாசன சங்கங்களின் தலைவர்கள் மற்றும் தொகுதி மேம்பாட்டு உறுப்பினர்கள் தங்களுக்கு இப் பாசன சங்கங்களால் எவ்விதப் பயனுமில்லை எனக் கூறுவதோடு ஏரிகளின் வளங்களிலிருந்து கிடைக்கும் வருவாயைப் பெற்று ஏரிகளைப் பராமரிக்கத் தங்களுக்கு எவ்வித அதிகாரமும் இல்லாததால், இச்சங்கங்களின் மேல் விவசாயிகளுக்கு எவ்வித மதிப்போ, அக்கறையோ இதுவரை ஏற்படாமல் கடந்த 10 ஆண்டுகளாக இச்சங்கங்கள் சட்டப்படி அமைக்கப்பட்டும், "தூங்கும் சங்கங்களாகவே' இருப்பதாக பாசன சங்க உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, ஏரி வளங்களிலிருந்து கிடைக்கும் வருவாயில் பாதியை இப்பாசனச் சங்கங்களுக்கு அவற்றின் வங்கிக் கணக்கில் முழுமையாகக் கிடைக்க உடனடியாக வழிவகை செய்தாலன்றி இச்சங்கங்கள் செயல்பட இயலாது. இப்பாசனச் சங்கங்கள் திறம்படச் செயல்பட இயலாதபொழுது ஏரிகளின் மேம்பாடு ஏட்டளவில்தான் இருக்கும். காலப்போக்கில் ஏரிகளே மறைந்து போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தமிழக அரசு 2001-ஆம் ஆண்டு இயற்றிய பாசன மேலாண்மைச் சட்டம் இன்றளவும் செயல்பட இயலாமல் உள்ளது. ஒரு சட்டம் இயற்றினால் அச் சட்டம் இயற்றுவதற்கு முன்பு அது சம்பந்தமாக இருந்த சட்டங்கள், அரசு ஆணைகள் எல்லாம் முழுமையாக ஆராயப்பட்டு அவை எல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டு புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும். அப்பொழுதுதான் புதிய சட்டம் வலுவாக செயலுக்கு வர முடியும்.

ஆனால், முன்பு இருந்த, ஏரிகளின் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கும் அரசு ஆணைகள் எதையும் மாற்றாமல் எவ்விதப் பயனுமற்ற புதிய சட்டத்தை இயற்றி ஏரிப்பாசன விவசாயிகள் அனைவரும் இப்புதிய சட்டப்படிதான் செயல்பட வேண்டும் என வலியுறுத்துவது "சட்டியில் இல்லாமல் சாப்பாட்டுக்கு அமர்ந்தது' போன்ற நிலைக்கு ஒத்ததாக உள்ளது.

இதனால் ஒவ்வொரு விவசாயியும், இச்சட்டம் பற்றிக் கூறினால் குமுறி வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் அரசு தாமாக முன்வந்து பிரச்னைகளின் தீவிரம் அறிந்து ஒவ்வொரு ஏரியிலும் அதன் வருவாய் ஆதாரங்களிலிருந்து கிடைக்கும் வருவாயில் குறைந்தபட்சம் 50 சதவிகிதத்தையாவது உடனடியாக அந்தந்த ஏரிப்பாசன சங்கங்களுக்கு அளிக்க முன் வந்தால் அதனைப் பராமரிப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தி ஏரிப்பாசனம் தழைக்க வழியுண்டு. ஏரிப்பாசன விவசாயிகளும் முழுமையாக ஊக்கம்பெற்று முனைப்புடன் செயல்படுவர். இதன் மூலம் விளைபொருள் உற்பத்தியும் பெருகும்.

நன்றி :- தினமணி, 26-07-2013


0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger