53 ஆண்டுகால சட்டமன்ற வரலாற்றில் கலைஞர் கருணாநிதி ஆற்றிய முதல் உரை
1957-ல்
முதல் முதலாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டகலைஞர் கருணாநிதி, சட்டமன்றத்தில் 4.05.1957-ல் முதல் முறையாக உரையாற்றினார். அவரது உரை 50 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு ஒலிக்கப் போகிறது என்று அப்போது யாரும் நினைத்துப் பார்க்கவில்லை. முதல்-அமைச்சர் கருணாநிதி ஆற்றிய முதல் உரை பின்வருமாறு:-
அவைத்தலைவர் அவர்களே, இன்று மேன்மை தங்கிய கவர்னருடைய உரையை பற்றி போற்றவும் வரவில்லை. தூற்றவும் வரவில்லை. என்னுடைய கருத்துரையை ஆற்றவே வந்திருக்கிறேன். கவர்னர் உரையைப்பற்றி இங்கு நண்பர்கள் அபிப்பிராயம் தெரிவித்த நேரத்தில், எதிர்கட்சியினரைப் பற்றி இங்கு பேசப்பட்ட நேரத்தில், குறை கூறுவதையே எதிர்கட்சியினர் தொழிலாக கொண்டு பேசுகிறார்கள் என்றெல்லாம் குற்றம் சாட்டப்பட்டது. குறைகளை எடுத்துச்சொல்லி நிறைவேற்றுவதற்காகதான் சட்டமன்றத்துக்கு வந்திருக்கிறோமே தவிர, செய்திருக்கிற காரியங்களை பன்னிப்பன்னி சொல்லி, அவைகளை பாராட்டுவதற்காக நாம் இங்கு வரவில்லை. அத்தகைய காரியங்களுக்காக நடத்தப்படுகின்ற பாராட்டு விழாக்கள் எல்லாம், வெளியிலே அந்த காரியங்களால் பயன்பெறுகிறவர்களால் நடத்தப்படுவது மிகப்பொருத்தமுடையது என்பதை நான் இங்கே குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. குறைகளை எடுத்து சொல்லி சரி செய்து கொள்வதற்காகவே சட்டமன்றத்துக்கு வந்திருக்கிறோம்.
அந்த  காலத்தில் மன்னர்கள், மக்களின் 
குறைகளை தெரிந்து அவர்களுக்கு நல்வாழ்வு  நல்குவதற்கு இரவு நேரங்களில் 
நகர்சோதனை என்ற பெயரால் மாறுவேடம் தாங்கி,  மக்களை சந்தித்து, அவர்களுடைய 
குறைகளை எல்லாம் தெரிந்து, கொலுமண்டபத்தில்  உட்கார்ந்து அந்த குறைகளை 
போக்கினார்கள் என்று பழைய கால  சரித்திரத்திலிருந்து படித்திருக்கிறோம். 
இது மன்னர்கள் ஆளும் காலம் அல்ல,  மக்கள் ஆளுகின்ற காலம். இந்த 
காலத்திலும், அதே போல் மந்திரிகள் மாறுவேடம்  தாங்கி மக்களின் குறைகளை 
கண்டு வர வேண்டுமென்று நான் கோரவில்லை. நாடகத்திலே  அனுபவம் பெற்ற நாங்கள் 
ஒருவேளை ஆளும் கட்சியினராக வந்தால் அந்த வேடங்களை  போட்டு, மக்களின் 
குறைகளை கண்டு பிடிக்க முடியும். அந்த அனுபவம் இல்லாத  மந்திரிகளை அதை 
செய்ய வேண்டுமென்று நான் கோர மாட்டேன் என்பதை இங்கே  குறிப்பிட 
விரும்புகிறேன்.
எதிர்கட்சி ஒன்று தேவையென்பது, 
எதை  எடுத்தாலும் எதிர்த்து பேசுவதற்காக அல்ல என்பதை இங்கு பேசிய பலர்  
சுட்டிக்காட்டினார்கள். ஆளுகின்றவர்கள் யாரைத் துணை கொள்ளல் வேண்டுமென்பதை 
 பற்றி வள்ளுவர் தன்னுடைய திருக்குறளில், பெரியாரைத்துணை கோடல் என்ற  
அதிகாரத்தில், ஆளுகின்றவர்கள் பெரியாரை தங்களுடைய துணைவராக கொள்ள  
வேண்டுமென்று கூறியிருக்கிறார். எந்த பெரியாரை துணை கொள்ள வேண்டுமென்று  
கூறினார் என்றால், எதையும் சரி, சரி என்று சொல்லி கண்டிக்காமல் இருக்கின்ற 
 பெரியாரை அல்ல.
"இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் 
கெடுப்பாரி லானும்  கெடும்'' என்று வள்ளுவர் குறள் வகுத்திருக்கிறார். 
சபையிலே ஆளுகின்ற தம்மை  இடித்து சொல்லுகின்ற பெரியாரை துணையாக கொள்ளாத 
மன்னன் பகைவர்கள்  இல்லையாயினும் தன்னை தானே கெடுத்து கொள்வான், 
கெட்டுவிடுவான் என்று  சொல்லியிருக்கிறார். அந்த முறையிலே இடித்து 
சொல்வதற்காகவே வந்திருக்கிற  பெரியார்களுடைய துணையை ஆளுகின்றவர்கள் பெற 
வேண்டுமென்று வள்ளுவர் அந்த  காலத்திலேயே உணர்ந்து சொன்னார் போலும். 
கவர்னருடைய உரையைப்பற்றி இங்கு  பேசிய பல நண்பர்கள் கன்னியாகுமரியை 
வரவேற்கிறோம் என்று கூறியிருக்கிறார்.
அந்த  கன்னியாகுமரியை நாம் 
தேவிக்குளக்கரையிலோ அல்லது பீர்மேட்டின் மீதோ நின்று  கொண்டு வரவேற்காமல், 
சிதைந்து போன செங்கோட்டையின் மேல் நின்று கொண்டு  வரவேற்கிறோம் என்று 
எண்ணும் போது, தேவிக்குளம் பீர்மேட்டை பெறுவதற்கு  வழிவகை காணப்படவில்லை. 
கவர்னர் உரையில் என்பதை சுட்டிக்காட்ட  விரும்புகிறேன்.
அடுத்து, நில சீர்திருத்த 
சட்டங்களின் பேரால்,  நியாய வார சட்டங்களின் பேரால் விவசாயிகள் 
திருப்தியடைந்து சுமூகமான  நிலையில் இருக்கிறார்கள் என்று கவர்னர் உரையில் 
குறிப்பிட்டு இருக்கிறார்.  என்னுடைய குளித்தலை தொகுதியை பொறுத்தவரையிலும் 
திருச்சி மாவட்டத்திலும்  இன்றைய தினம் இந்த நியாய வாரச்சட்டத்தின் 
காரணமாகவும் சீர்திருத்தச்  சட்டத்தின் காரணமாகவும் எழுந்த வழக்கு 
உயர்நீதிமன்றம் சென்று அங்கு  அளிக்கப்பட்ட தீர்ப்பின் காரணமாக மக்களுக்கு 
வேதனையை உண்டாக்க கூடிய நிலைமை  ஏற்பட்டுள்ளதை யாரும் மறந்து விடவில்லை. 
மறுத்து விடவும் முடியாது.  விவசாயிகள் வீடுகளில் தங்களுடைய மனைவி 
மக்களுடன் வேதனை அடைந்து புழுங்கி  கொண்டிருக்கிறார்கள். குமுறிக்கொண்டு 
இருக்கிறார்கள் என்பதை நான் இங்கு  எடுத்து சொல்ல ஆசைப்படுகிறேன்.
இந்த நியாய வாரச்சட்டம் காரணமாக  
குளித்தலை தொகுதி நங்கவரம் பகுதியிலும் திம்மாச்சிபுரம் பகுதியிலும்  
விவசாயிகள் எந்த அளவுக்கு கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பதை தினம்  
தினம் பத்திரிக்கைகளில் வரும் செய்திகளை கண்டும் விவசாயிகள் பகுதியில்  
எழுப்பப்படும் கூக்குரலை கண்டும் எந்த முறையில் அங்கு நிலைமை இருக்கிறது  
என்பதை அறிந்து கொள்ளலாம்.
திருச்சி மாவட்டத்தை 
பொருத்தவரையில்  அங்கு கையேரு வாரம் என்றும் மாட்டு வாரம் என்றும் இரண்டு 
வித வாரம்  இருக்கின்றன. இப்படி இரண்டு விதமான வாரம் இருப்பதன் காரணமாக 
அவர்களுக்கு  இந்த நியாய வாரச்சட்டம் பயன்படக்கூடாது என்று கருதி அதை 
விவசாயிகள் பயன்  அடையாத முறையில் உயர் நீதிமன்றத்துக்கு சென்று அங்கு 
தீர்ப்பு வாங்கி  வந்திருக்கிறார்கள். அந்த தீர்ப்பின் காரணமாக விவசாயிகள் 
நியாய  வாரச்சட்டத்தின் பயனை அடைய முடியாமலும், வெளியேற்றத் தடுப்பு 
சட்டத்தின்  பயனை அடைய முடியாமலும் இருக்கிறார்கள். இன்றைய தினம் உயர் 
நீதிமன்றத்தின்  தீர்ப்பு அந்த ரீதியில் வழங்கி இருக்கிறது. அதன் காரணமாக 
மாட்டுவார  ஏருக்காரர்கள் என்றால் யார், கையேருக்காரர்கள் என்றால் யார் 
என்ற பிரச்சினை  எழும்பி அதைப்பற்றி விளக்கத்தை கவனிக்கும்போது தான் நிலைமை
 தெரியவருகிறது.  மாடும் தந்து அவர்களுடைய சொந்த உழைப்பை சிந்தி நிலம் 
உடையவர்களிடத்தில்  விதை, உரம், ஏரு இவைகளை பெற்று அப்படி பெறுகிற அந்த 
பொருள்களுக்காக  விளைச்சலில் அவர்கள் தனியாக தானியமாகவோ அல்லது பொருளாகவோ 
எடுத்துக்கொண்ட  பிறகு 60:40 என்று பெற வேண்டும் என்று சொல்லப்பட்டாலும் 
இன்றைய தினம்  மாட்டு ஏருக்காரர்கள் விவசாயிகள் அல்ல என்று உயர் நீதிமன்றம்
 தீர்ப்பு  வழங்கியிருக்கிறது.
அதைப்போலவே கையேருக்காரர்கள் யார்
 என்றால்  அவர்கள் பெரும்பாலும் ஆதி திராவிட வர்க்கத்தை சேர்ந்தவர்கள், 
பழங்குடி  மக்கள் என்கின்ற பிற்பட்ட மக்கள் பாட்டாளி மக்கள் அப்படிப்பட்ட  
வர்க்கத்தினருக்கானத்தான் இந்த நியாய வாரச்சட்டம் செய்யப்பட்டது. அந்த  
அடிப்படையில் அவர்களுக்கென்று இந்த நியாய வாரச்சட்டத்தையும் நில வெளியேற்ற 
 தடுப்பு சட்டத்தையும் கொண்டு வந்தாலும் அவர்கள் அவைகளின் பயனை அடைய  
முடியாமல் நீதிமன்றம் தீர்ப்பு அளித்து விட்டது. அந்த அடிப்படையிலாவது எந்த
  அளவிலாவது இந்த நியாய வாரச்சட்டம் அவர்களுக்கு நன்மை வழங்கியிருக்கிறதா  
என்று பார்த்தால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இப்படிப்பட்ட மாட்டு  
ஏருக்காரர்களும் கையேருக்காரர்களும் சாகுபடியாளர்கள் அல்ல என்கின்ற  
தீர்ப்புக்கு இன்று ஆளாகி இருக்கிறார்கள். அதன் மேல் அப்பீல் செய்யப்பட்டு 
 மீண்டும் வழக்கு வரும் ஜுலை மாதம் மூன்றாவது வாரத்தில் எடுத்துக்கொள்ள  
போவதாக இருக்கிறது. அதற்குள் விவசாயிகளுடைய நிலைமை என்னவென்றால் முத்து  
முத்தாக வியர்வை சிந்தி மணி மணியாக நெற்குவியலை தந்தவர்கள் களத்துமேட்டிலே 
 காவலர் புடை சூழ அதைக்கொட்டி விட்டு வீட்டிலே வறுமைத்தேள் கொட்டிட  
வாடிக்கிடக்கிறார்கள். குளித்தலை தொகுதியில் இப்போது நிலவி வருகிற,  
இப்படிப்பட்ட நிலைமையைப்பற்றி கவர்னர் தன்னுடைய உரையில் குறிப்பிட மறந்தது 
 வருந்தத்தக்க ஒன்று.
நெருக்கடிக்கு ஆளாகி இருக்க கூடிய
 விவசாயிகளுக்கு என்ன செய்யப்பட வேண்டும்  என்பதை நான் இங்கே குறிப்பிட 
விரும்புகிறேன். உயர் நீதிமன்றம் ஜுலை மாதம்  3-வது வாரத்தில் வழக்கை 
விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு முன்னதாக புதிய  ஒரு திருத்த சட்டத்தை 
கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். அதையும் துரிதமாக  கொண்டு வர வேண்டும். 
ஏழைத்தொழிலாளர்களுடைய, ஏழை விவசாயிகளுடைய அவல நிலைமையை  நீக்குவதற்கு இந்த 
அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துக்கொள்ள போகிறது  என்பதை பற்றி கவர்னர் 
உரையில் ஒன்றுமே இல்லை என்பதை மிகவும் கவலை கொண்டு  
தெரிவித்துக்கொள்கிறேன்.
அடுத்து உணவு பற்றாக்குறையை 
நிலையை  பற்றியது. கவர்னர் உரையில் உணவு விலை குறையவில்லை என்று 
குறிப்பிட்டாலும்  உணவு விலை அதிகமாகி கொண்டிருக்கிறது என்பதை மறுக்க 
இயலாது. எங்கு  பார்த்தாலும் உணவு விலை விஷம் போல் தினம் தினம் ஏறிக்கொண்டு
 இருக்கிறது.  இதற்கு காரணம் என்ன என்பதை கவனிக்க வேண்டும். ஆந்திராவிலுள்ள
 பெருவாரியான  உபரி அரிசி தமிழகத்திற்கு பயன்படாமல் வட நாட்டில் 
சோளப்பஞ்சம்  ஏற்பட்டிருக்கின்ற காரணத்தால் அங்கு எடுத்து செல்லப்படுகிறது.
 அங்குள்ள  கோதுமையை கொண்டு வடக்கே சரிக்கட்டுவதற்கு பதிலாக ஆந்திராவிலுள்ள
 உபரியான  அரிசியை தமிழ்நாட்டிற்கு பயன்படாத முறையில் எடுத்துச்சென்றதானது 
இங்கு  விலைவாசி உயர்வுக்கு காரணமாக இருக்கிறது. இதைப்பற்றி கவர்னர் 
உரையில் எந்த  விதமான குறிப்பும் காணப்படவில்லை. இப்படி விலைவாசி உயர்வை 
தடுக்க  எப்படிப்பட்ட வழிவகை செய்யப்படும் என்பதும் சொல்லப்படவில்லை.
உணவு  நிலைமையை சமாளிப்பதற்கு 
சர்க்கார் உணவு பெருக்கத்துக்கு திட்டங்கள் செய்ய  வேண்டும். இந்த 
சர்க்கார் கையில்லாத ஊமையின் நிலைமையில் தான்  இருக்கிறார்கள். தங்களுடைய 
நிலைமை என்ன என்று சொல்ல முடியாமல் ஊமையாக  இருந்து சுட்டிக்காட்டுவதற்கும்
 கையற்ற முறையில் இருந்து கொண்டிருந்தால்  உணவுநிலை பற்றாக்குறை இது போன்றே
 எப்போதும் நீடித்துக்கொண்டே இருக்கும்.  இத்தகைய நிலைமைகளிலிருந்து 
திராவிடம் விடுபட்டு திராவிடம் தனித்து,  செழித்து நின்று, வளம்பெற, வாழ, 
நல்ல முறையில் திட்டங்களை தீட்ட வேண்டும்.  அதற்கு குறிப்பாக 
உதாரணத்திற்காக ஒன்றை மட்டும் சொல்கிறேன். குடகனார்  திட்டம் தேவை என்ற 
முயற்சி ஒன்று குளித்தலை தொகுதியில் 1952-ம் ஆண்டு  முதற்கொண்டே இருந்து 
வருகிறது. அதைப்பற்றி அடிக்கடி எடுத்து சொல்லப்பட்டு  வருகிறது. கனம் 
முதல்-அமைச்சரிடமும், ரெவினிï அமைச்சரிடமும், மராமத்து  அமைச்சரிமும், நிதி
 அமைச்சரிமும் பல தடவை பல மனுக்கள் மூலமாக  குறிப்பிடப்பட்டிருக்கிறது. 
அங்குள்ள பி.டபிள்ï.டி. சூப்பர்வைசர் இந்த  திட்டத்தை எடுத்து துரிதமாக 
நிறைவேற்ற வேண்டும் என்பதை ஆய்ந்து  சொல்லியிருக்கிறார்.
அழகாபுரி என்கிற இடத்தில் அணை 
கட்டினால்  அதன்மூலமாக சுமார் 10 ஆயிரம் ஏக்கர் புஞ்சை நிலத்தை நஞ்சையாக 
மாற்றக்கூடிய  வசதி இருக்கிறது. அதற்கு 12 லட்சம் ரூபாய் செலவாகும் என்றும்
  சொல்லப்பட்டிருக்கிறது. இது கவனிப்பார் அற்றுக்கிடக்கிறது. இப்படிப்பட்ட 
 நல்ல திட்டங்கள் அலட்சியப்படுத்தப்படுவதை பற்றியெல்லாம் கவர்னர் தன்னுடைய 
 உரையில் சிறிதும் குறிப்பிடவில்லை என்பதை வருத்தத்துடன் 
தெரிவித்துக்கொண்டு  என்னுடைய உரையை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு  முதல்-அமைச்சர் கருணாநிதி பேசினார்.
kulasaisulthan.wordpress.com
tamilislam.webs.com


 
0 comments:
Post a Comment