Home » » அசாமை 4 மாநிலங்களாகப் பிரிக்கக் கோரி போராட்டம் !

அசாமை 4 மாநிலங்களாகப் பிரிக்கக் கோரி போராட்டம் !

போடோலாந்தை தனிமாநிலமாகப் பிரிக்கக் கோரி 
கோக்ரஜார் ரயில் நிலையத்தை 
வெள்ளிக்கிழமை முற்றுகையிட்ட 
அனைத்து போடோ மாணவர் அமைப்பினர் 
மற்றும் பிற போடோ அமைப்புகளின் 
உறுப்பினர்கள்.

அசாமை 4 மாநிலங்களாகப் பிரிக்கக் கோரி பல்வேறு அமைப்புகள் வெள்ளிக்கிழமை நடத்திய போராட்டத்தில் அங்கு வன்முறை வெடித்தது. இதில் இருவர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.

ஆந்திரத்தைப் பிரித்து தெலங்கானா மாநிலம் அமைக்க மத்தியில் ஆளும் கூட்டணி ஒப்புக் கொண்டதை அடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் தனி மாநிலக் கோரிக்கை வலுத்துள்ளது.

அசாமில் போடோ, கர்பி, திமாசாஸ், கூச்-ராஜ்பாங்சிஸ் ஆகிய 4 பிரிவினர் தனி மாநிலம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போடோலாந்து தனி மாநிலம் கோரி அழைப்பு விடுக்கப்பட்ட 12 மணி நேர ரயில் மறியல் போராட்டத்தை அடுத்து அங்கு வெள்ளிக்கிழமை 9 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 12 ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன. 5 ரயில்களின் பயண தொலைவு குறைக்கப்பட்டுள்ளது. இதே போல பல்வேறு அமைப்பினரும் தொடர்ந்து முழு அடைப்புப் போராட்டத்துக்கும், சாலை மறியலுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் வெள்ளிக்கிழமை மாநிலத்தின் பல இடங்களில் வன்முறை வெடித்தது. தீவைப்பு, கல்வீச்சு போன்ற சம்பவங்கள் அரங்கேறின
.
காங்கிரஸ் எம்.பி. வீட்டுக்குத் தீவைப்பு:

திபு பகுதியில் காங்கிரஸ் எம்.பி. ஒருவர் வீட்டுக்கும், அவரது ரப்பர் எஸ்டேட்டுக்கும் தீவைக்கப்பட்டது. அங்கு ஏற்பட்ட வன்முறையை முறியடிக்க போலீஸôர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் காயமடைந்தனர்.

வன்முறை அதிகம் ஏற்பட்ட கர்பி அங்லாங் மாவட்டத்தில் இருவர் உயிரிழந்தனர். ராணுவம் கொடி அணி வகுப்பு நடத்தியது. மாநிலம் முழுவதும் பரவலாக நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களில் ஒருவர் உயிரிழந்தார். ஏராளமானோர் காயமடைந்தனர். 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு போராட்டக் குழுவினர் தொடர் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதால் அசாமில் வரும் நாள்களிலும் அங்கு கொந்தளிப்பான சூழ்நிலையே நிலவும் என்று தெரிகிறது.

ஆளும் காங்கிரஸ் கட்சி, பாஜக, அசாம் கண பரிஷத், அசாம் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்ணணி உள்ளிட்ட முக்கியக் கட்சிகள் மாநிலப் பிரிவினைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

தில்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் தருண் கோகோய், மாநிலத்தை பிரிக்க அனுமதிக்க மாட்டோம் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்                                                                                                                               

நன்றி : தினமணி, 03-08-2013

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger