Home » » இந்தவாரம் தினமணி நினைவூட்டும் ஒன்பது கவிராயர்கள் !

இந்தவாரம் தினமணி நினைவூட்டும் ஒன்பது கவிராயர்கள் !

க. அருணாசலக் கவிராயர்
 
இவர் சேற்றூர் கந்தசாமிக் கவிராயரின் மகன். நவராத்திரி மஞ்சரி, வேங்கடாசலபதி பிராத்தனை, மானுப்பட்டி தையல் அண்ணக் கவுண்டர் ஒருதுறைக்கோவை முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.

பரசுராமக் கவிராயர்

இவர் புரசைவாக்கத்தில் பிறந்தவர். சிறுத்தொண்டர் விலாசம் என்ற (சிற்றிலக்கிய) நூலை இயற்றியுள்ளார்.

அட்டாவதானம் இராமசாமிக் கவிராயர்

பாண்டிநாட்டிலுள்ள புளியங்குளம் என்ற ஊரைச் சேர்ந்த இவர், அருணாசலக் கவிராயரின் மகன். இராமநாதபுரம் அரசவைப் புலவர் சரவணப்பெருமாள் கவிராயரின் பெயரன். பெ.மா.மதுரைப் பிள்ளை மீது மதுரை மார்கண்ட மாலை, ஒருதுறைக்கோவை, மதுரைத் தோப்பு சிங்காரபதம், மதுரைக் காதல் முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.

சி. இராமசாமிக் கவிராயர்
இவர் தென்குளத்தாபுரியில் வாழ்ந்தவர். மகாபாரதக் கும்மியை இயற்றியுள்ளார்.

அ. கந்தசாமிக் கவிராயர்
இவர் விருதுநகர் அண்ணாமலைப் பிள்ளையின் மகன். சாலிச்சந்தை கருணானந்த சுவாமி மீது "கருணானந்த மாலை' என்ற நூலை இயற்றியுள்ளார்.

சே. இராமசாமிக் கவிராயர்
இவர் "சேதனப்பட்டு' என்ற ஊரில் வாழ்ந்தவர். திருப்போரூர் முருகன் மீது பத்து பாடல்களைக் கொண்ட "இரண்டை ஆசிரிய விருத்தம்' என்ற நூலை இயற்றியுள்ளார்.

கே. சிதம்பரக் கவிராயர்

இவர் "அடைக்கலாபுரம்' என்ற ஊரைச் சேர்ந்தவர். "முருக கருணாகர வித்துவரத்தினம்' என்ற விருது பெற்றவர். "சூரியலிங்கப் பெருமான் சரித்திரம்' எனும் நூலை இயற்றியுள்ளார். இது ஓர் இசை நூலாகும்.

கூறைநாடு சாமிநாதக் கவிராயர்
இவர் மாயூரம் அருகில் உள்ள கூறைநாட்டைச் சேர்ந்தவர். மிகச்சிறந்த சொற்பொழிவாளராகவும் விளங்கிய இவர், "பரங்கிப்பேட்டை அங்காளியம்மன் பதிகம்' ஒன்றை இயற்றியுள்ளார்.

கல்லிடைக்குறிச்சி சாமிநாதக் கவிராயர்

கல்லிடைக்குறிச்சியில் வாழ்ந்த இவர், கல்லிடைக்குறிச்சி சிவசுப்பிரமணிய கவிராயரின் தந்தையாவார். "பொதிகை நிகண்டு' என்ற நிகண்டு நூல் ஒன்றை இயற்றியுள்ளார்.

நன்றி :- தமிழ்மணி, தினமணி, 11-08-2013

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger