Home » » தண்ணீர் அல்ல.... ரத்தம் - பேரா.ஜெ.ஹாஜாகனி, சென்னை

தண்ணீர் அல்ல.... ரத்தம் - பேரா.ஜெ.ஹாஜாகனி, சென்னை

பணத்தைத் தண்ணீராய் செலவழித்து... என்ற சொலவடை ஒன்றே போதும் தண்ணீர்ப் பயன்பாடு பற்றிய நமது பண்பாட்டை பறைசாற்ற...
மூன்றாவது உலகப் போருக்குத் தண்ணீர்தான் காரணமாய் இருக்கும் என்ற கூற்று உண்மையோ, பொய்யோ - தேசத்தின் மூலைமுடுக்கு, முச்சந்திகளில் நடக்கும் குழாயடிப் போர்களுக்குத் தண்ணீர்தான் காரணமாக இருக்கிறது.

கொழுந்துவிடாத குறையாகக் கொதித்து எரிந்து கொண்டிருக்கிறது கோடைக்காலம். தண்ணீர்ப் பற்றாக்குறைத் தமிழகத்தை மிரட்டுகிறது. நாட்டுப் பிரச்னையாக இருந்தது இப்போது வீட்டுப் பிரச்னையாக வீரிய உருவெடுத்துள்ளது.

குடம் நீர் கிடைக்க, கடலளவு பாடுபட வேண்டிய கடுங்காலத்தைக் கடந்துகொண்டிருக்கிறோம். ஏழை, எளிய, நடுத்தர வர்க்கங்கள் தண்ணீருக்காகக் கண்ணீரோடு தடுமாறும் வேளையில், தண்ணீரை விரயமாக்கும் தனிநபர்களின் பொறுப்பற்ற போக்கை நோக்கும் போது பொங்கி எழுகிறது கோபம்.

விரைந்து நகரும் அருவிபோல, வீதியெல்லாம் பொழிந்து கொண்டு போகிறது ஒரு குடி தண்ணீர் லாரி. பின்னால் சென்ற நான், லாரியின் பின்னால் எழுதியிருந்த வாசகத்தைப் படித்தேன், சிரிப்பதா அழுவதா தெரியவில்லை
.
தண்ணீர் சிக்கனம்... தேவை இக்கனம்...!
எரிபொருள் நிரம்பிய லாரிகள், இப்படி ஊரெல்லாம் ஊற்றிக்கொண்டு போவதில்லை. தண்ணீர் என்றால் அப்படி ஓர் இளக்காரம்.

"தாயைப் பழித்தாலும், தண்ணீரைப் பழிக்காதே' என்பது தமிழ்நாட்டுப் பழமொழி. தண்ணீரை மதிக்கிறோமா? - அவமதிக்கிறோம்...

சாராயத்தைத் "தண்ணி' என்று அழைத்து இழிவு செய்வது தமிழினம் தானே? தகுமா இது?

 ( தாயைப் பிழைத்தாலும் தண்ணீரைப் பிழையாதே என்பதுதான் சரியான பழமொழி.  இதைச் சொல்பவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை )
 
உயர்கல்வி தொடர்பான ஒரு கலந்துரையாடல்... அந்த அறைக்கு உரிய உயர் பதவியாளர், செய்திகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறார். நான் அதை கவனிக்காமல், செவியால் வேறு திசையை நோக்குவதை கவனித்து விட்டார். "நீங்க கவனிக்கவில்லை' என்றார். "மன்னியுங்கள்...' என்று கூறிவிட்டு, அவர் அனுமதியோடு, ஓய்வறைக்குள் (கழிப்பறை) சென்றேன். குழாயில் கொட்டிக் கொண்டிருந்த நீரை நிறுத்தினேன். பிறகு, கவனிக்கத் தொடங்கினேன்.

அவருக்கோ, தண்ணீர் விரயமானது பற்றிய கவலையோ, அதை நிறுத்தியது குறித்த மகிழ்ச்சியோ இல்லை. "இனிமேலாவது ஒழுங்காகக் கவனியுங்கள்' என்ற தோரணையில் தொடர்ந்தார்.

தண்ணீரை விரயமாக்கும் மனிதர்கள் குறித்து ஆங்காங்கே நாம் அங்கலாய்த்தால், சக தோழர்கள் கூறும் தகவல்கள் நமது அதிர்வலைகளை "சுனாமி'யாக்குகின்றன.

அரசு தந்த வீட்டில் வசிக்கும் ஒருவர், குழாயை மூடாமல், வீட்டைப் பூட்டிவிட்டு, வெளியூர் சுற்றுப் பயணங்களை முடித்து வந்தார் என்று ஒருவர் சொன்ன சேதி பீதியூட்டியது.

அவர் திறந்து பார்த்தபோது வீட்டுக் குழாய்களில் தண்ணீர் வரவில்லை. காரணம் வீட்டு நீர்த் தொட்டியில் நீரில்லை. கணவனும், மனைவியும், கிறிச்சிடும் குழந்தையைக் "கிரீச்சில்' விட்டுவிட்டு வேலைக்குப் போய்விட்டார்கள். வீட்டுக் குழாய்களை மூடவில்லை. நீர்த்தொட்டியில் விழுகிற நீரெல்லாம், பூட்டிய வீட்டிற்குள், திறந்திருக்கும் குழாய்கள் வழியே வழிந்தோடி விரயமாகிறது. இதனால் அந்த அடுக்ககத்தின் மற்ற வீட்டுக்காரர்களுக்கோ பெரும் துன்பம்
.
தண்ணீர் வராவிட்டால், குழாயை மறுபடி மூடிவிட வேண்டும் என்ற அக்கறையின்மை. தண்ணீர்தானே என்ற அலட்சியம். வீட்டைப் பத்திரமாக பூட்டி வைப்பதில் காட்டும் அக்கறையை நாம், தண்ணீர்க் குழாயை மூடிவைப்பதில் காட்டுகிறோமா?

கைகழுவும் பீங்கான்களில் (வாஷ் பேசின்) குழாயைப் பாதி மூடியும், மூடாமலும் பலரும் விட்டு வருவதைப் பார்த்துள்ளேன். தண்ணீர் ஒழுகிக் கொண்டே இருக்கும். அது, "நீரை மதிக்காத நிலைகெட்ட மனிதர்களை நினைத்து', அந்தக் குழாய் அழுவது போலத் தோன்றும்.

இயற்கையோடு இணைந்த வாழ்வில் தண்ணீரும், காற்றும் மனிதர்க்குச் சுத்தமாகவும், இலவசமாகவும் இருந்தன. தண்ணீரை விற்கின்ற போக்கு தொடங்கியபோதே, தரித்திரம் தொடங்கி விட்டது. இப்போது குடிக்கும் தண்ணீரிலும் ஜாதி வந்துவிட்டது. புழங்கும் தண்ணீரும் பொருளாதாரத் தகுதிக்கு ஏற்றபடி ஆகிவிட்டது.

மேலோர் குடிப்பதற்கு மினரல் வாட்டர், கீழோர் குடிப்பதற்கு அழுக்குத் தண்ணீர்.

நீர் நிலைகளை எல்லாம் பொருள் வேட்கை மிகுந்ததால் படுகொலை செய்தோம். மரங்களை வெட்டிச் சாய்த்து, வீடுகள் கட்டினோம். பள பள சாலைகள் போட்டு பயணித்தோம். பசுமை மரங்களை வெட்டிச் சாய்த்து போடப்பட்டச் சாலைகளில் "மரம் வளர்ப்போம்' என்று பச்சை வண்ணப் பலகை வைத்தோம்.

பாதகச் செயல்களை நாம் பதறாமல் செய்ததால், பயந்துபோன நிலத்தடி நீர், பாதாளத்தில் சென்று பதுங்கிக் கொண்டது. நன்றி கொன்ற மனிதர்களை நான் சந்திக்க மாட்டேன் என அடம்பிடிக்கிறது.

கரை புரண்டோடும், ஆற்றுக்கு அருகே நீங்கள் வசித்தாலும், தண்ணீரை வீணாக்க அனுமதியில்லை என்றார்கள் நபிகள் நாயகம். தொழுகைக்காக முகம், கை, கால் கழுவும் போதுகூட மூன்று முறைக்கு மேல் கழுவுவது இஸ்லாம் மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாகவும் உள்ளது. ஆனால், தண்ணீர்க் குழாயைத் திறந்து விட்டுவிட்டு, நீர் விரயம் குறித்த கவலையில்லாமல் பேசிக் கொண்டிருப்பவர்களைப் பல பள்ளிவாசல்களில் நான் பார்த்துக் கொதித்துள்ளேன்.

""கோவில், குளம்'' என்று சேர்த்துச் சொல்வதே பேச்சு வழக்கு. நீர்நிலைகளைப் பெருக்குவது அரசுகளுக்கு மட்டுமே என்று நினைத்து, மக்கள் முற்றிலும் ஒதுங்கிவிடக் கூடாது.

ஒரு குவளைத் தண்ணீரை வீணாக்காமல் மிச்சப்படுத்தினாலும், நீங்கள் மனித குலத்துக்கு நன்மை செய்தவராவீர்கள்.

மனித குலத்துக்கு இறைவன் தந்த அருட்கொடையான தண்ணீரை விரயமாக்காமல், பாதுகாத்து, தேவையான அளவுக்கு மட்டுமே பயன்படுத்தும் குணம், நம் ஒவ்வொருவருக்கும் வரவேண்டும்
.
நமக்கு வெட்டுப்பட்டு ரத்தம் பெருகியோடினால் எப்படிப் பதறுவோம்... குழாய்களில் தண்ணீர் வீணாக ஓடுவதைப் பார்க்கும்போதெல்லாம் அப்படிப் பதற வேண்டும்.                                                                                                                              

நன்றி :-தினமணி,  20- 05- 2013

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger