Home » » ஆங்கிலமின்றி ஆங்கில்லை வளர்ச்சி - பாறப்புறத் இராதாகிருஷ்ணன், சென்னை

ஆங்கிலமின்றி ஆங்கில்லை வளர்ச்சி - பாறப்புறத் இராதாகிருஷ்ணன், சென்னை

ஆண்டுக்கு 1.5 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில், வரும் கல்வியாண்டு முதல் தேவைப்படும் அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலவழிப் பிரிவுகள் தொடங்கப்படும், அயல்நாட்டு மொழிகளில் தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்க்கும் சிறந்த தமிழ் மொழிபெயர்பாளருக்கு "ஜி.யு.போப் விருது' வழங்கப்படும் என்ற தமிழக அரசின் இரு அறிவிப்புகளும் வரவேற்கத்தக்கன.

ஆங்கிலவழிக் கல்வி என்பது எட்டாக் கனியல்ல, ஏழை, எளிய நடுத்தர மாணவர்களும் ஆங்கிலவழிக் கல்வி பயிலலாம் என்று அனைவருக்கும் திறமையைத் திறந்துவிட்ட வாய்ப்பை இது நல்கும். இந்தக் கணினி யுகத்தில் ஆங்கில அறிவு என்பது அடிப்படை அறிவாகி விட்டது. உலகில் பலராலும் பேசக்கூடிய, புரிந்துகொள்ளக்கூடிய மொழியாக ஆங்கிலம் உள்ளது. ஆங்கில அறிவு இல்லாதவர்ளை அறிவற்றவர்களாகவும், கல்லாதவர்களாகவும் கருதும் நிலைதான் உருவாகி வருகிறது. ஆங்கிலம் அன்றாடம் நிகழும் தகவல்களை அறிந்து கொள்வதற்கும், புதிய விவரங்களைக் கற்பதற்கும், கிடைத்த தகவல்களை உடனுக்குடன் பரிமாறிக் கொள்வதற்கும் உதவுகிறது.

புற்றீசல்போல பெருகிவரும் தனியார் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியே இருக்கும்போது, அரசுப் பள்ளிகளை விடுத்து தனியார் பள்ளிகளிலேயே தங்கள் பிள்ளைகளைச் சேர்த்து அவர்கள் கல்வியில் சிறந்து விளங்க இக்கால இளம் பெற்றோர்கள் பெரிதும் நாட்டம் கொள்கின்றனர்.

தனியார் பள்ளிகள் ஆங்கிலவழிக் கல்வி என்ற ஒற்றை ஆயுதத்தைக் கையில் கொண்டு அனைத்துப் பிரிவு மக்களை தம் பால் ஈர்த்து கல்வியை வியாபாரச் சந்தையாக்கி, அதிக அளவில் நன்கொடைகளைப் பெற்று செழிக்கின்றன. அதே சமயத்தில் அரசுப் பள்ளிகள் எவ்வித ஆடம்பர மேல்பூச்சும் இல்லாமல் மாணவர்கள் சேர்க்கையின்றி தவிக்கின்றன. இந்த சூழ்நிலையில் தனியார் ஆங்கிலவழிப் பள்ளிகளை ஏக்கத்துடன் பார்க்கும் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு அரசுப் பள்ளிகளிலும் ஆங்கிலவழி போதனை என்ற அறிவிப்பு பெரும் வரப்பிரசாதமாக அமையும்.

பல தமிழறிஞர்கள் தமிழும் ஆங்கிலமும் நன்கு அறிந்தவர்களாக உள்ளனர். அவர்கள் பல படைப்புகளை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்து தமிழை உலகமெங்கும் பரவச் செய்துள்ளனர். அவர்கள் ஆங்கிலம் கற்கவில்லை என்றால் இது எவ்வாறு சாத்தியமாகும். ஒரே மொழி அறிவு ஒருவனுக்கு அடிமையாக இருக்க மட்டுமே உதவுவதோடு, எள்ளி நகையாடச் செய்யவும் உதவும். ஆனால், பல மொழிப் புலமை என்பது பலருக்கும் எஜமானனாக இருக்க ஏதுவாகிறது.

மத்திய அரசிலும் வங்கித்துறை, ரயில்வே, ராணுவம் போன்றவற்றிலும் தமிழ்நாட்டு மாணவர்கள் தகுதித் தேர்வெழுதி வெற்றி பெற்றாலும் நேர்காணலின்போது ஆங்கிலத்தில் புலமை இல்லாததால் வாய்ப்பை இழக்கும் சோகக் கதைகளுக்கு அளவே இல்லை.

(தமிழில்தான் படிக்கவேண்டும் என்று வலியுறுத்தும் அரசியல் தலைவர்கள் முதல் பேராசிரியர்கள் வரை பலரும் தங்கள் வீட்டுப் பிள்ளைகளை நல்ல தனியார் கான்வென்டுகளில் சேர்த்து படிக்கவைத்து பெரிய வேலையில் அமர்த்திவிட்டு, ஏழை வீட்டுப் பிள்ளைகள் மூலம் தமிழை வளர்க்க உரத்து குரல் கொடுப்பதில் தயக்கம் காட்டுவதே இல்லை. தமிழை வளர்க்க மற்றவர்கள் வீட்டுப் பிள்ளைகளாவது வேண்டும் என்ற நல்லெண்ணம்தான் இதற்குக் காரணம்!)

செழுமையான உலகில் "வளமான பாரதம்' உருவாகி அதில் தமிழ் மாணவர்களின் பங்களிப்பு அதிகமாக அங்கு தமிழின் பெருமையை பறைசாற்ற வேண்டுமானால், நம் மாணவர்களுக்கு ஆங்கில அறிவு வளர வேண்டியது காலத்தின் கட்டாயம்.

நன்றி - தினமணி, 20- 05 -2013

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger