Home » » தமிழா / டமிலா ? - டாக்டர் ந. ராம், எலும்பு நோய் மருத்துவம், இங்கிலாந்து

தமிழா / டமிலா ? - டாக்டர் ந. ராம், எலும்பு நோய் மருத்துவம், இங்கிலாந்து



இந்திராகாந்தி போன்ற பெரிய தலைவர்கள் தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் தங்கள் பேச்சைத் தொடங்கும் முன்னர் "வணக்கம்' என்று சொன்னவுடனேயே, லட்சக் கணக்கான மக்கள் பரவசப்பட்டுக் கைதட்டினார்கள். இன்று அதுமட்டும் போதாது போலிருக்கிறது. தமிழின் சிறப்பு "ழ'கரத்தையும் பிறமொழியினர் பிழையின்றி உச்சரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நம் மாநிலத்தின் பெயரை ஆங்கிலத்தில் THAMIZH NADU என்று எழுத வேண்டும் என்ற அவா சிலர் உள்ளத்தில் எழுந்திருப்பதில் வியப்பில்லை. இந்தக் கோரிக்கையின் வரலாற்றுப் பின்னணியை "இந்த வாரம்' பகுதியில் (11.4.2013) கலாரசிகன் தொட்டுக் காட்டி இருந்தார். அதுபற்றி மேலும் தகவல் அறிவதும், வேறு கோணங்களில் மொழியியல் நிபுணர்களின் கருத்தை அறிவதும் தெளிவான முடிவெடுக்க நமக்கு உதவும்.

ம.பொ.சி.

ம.பொ.சி.யின் சுயசரிதையாகிய "எனது போராட்டங்கள்' என்ற நூலில், இதுபற்றிக் குறிப்பிடும்போது, "நாட்' என்பதனை "நாடு ஆக்கினேன்' என்ற தலைப்பில் அவர் சில தகவல்கள் தருகிறார்(பக்.1008). அதை முழுமையாக அறிவது மிக முக்கியம்.

""மூதறிஞர் ராஜாஜி, ஆங்கிலத்தில் பஅஙஐக சஅஈ என்பதாக அமைய வேண்டுமென்று அரசுக்கு ஆலோசனை கூறி வெளிப்படையாக அறிக்கை விட்டார். அரசின் சார்பில் அந்த ஆலோசனையை ஏற்றுக்கொண்டு விட்டதாக அண்ணாவும் ராஜாஜிக்கு அமைச்சர் மாதவன் மூலம் அறிவித்துவிட்டார்.
சட்டப்பேரவையில் அண்ணா அவர்கள் முன்மொழிந்த தீர்மானத்திலே, ஆங்கில வாசகம் "டமில் நாட்' என்றுதான் அமைந்திருந்தது. அதற்கு, "தமிழ்நாடு' (THAMIZH NADU) என்று நான் திருத்தம் கொடுத்தேன். அண்ணா அவர்கள் என்னை அழைத்துப் பேசி, எனது திருத்தத்தைத் திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொண்டார். வடக்கேயுள்ளவர்களுக்கு "ழ'கரத்தைப் பிழையின்றி ஒலிக்க முடியாதாகையால், அரசின் தீர்மானத்திலுள்ள "டமில்' (Tamil) என்ற வாசகத்தை ஏற்குமாறு என்னைக் கேட்டுக்கொண்டார். "நாடு' (Nadu) என்பதனை ராஜாஜி ஏற்காததை எடுத்துக்காட்டி, பெரியவரின் அறிவுரைக்கு மதிப்புத் தருவதற்காக இதிலும் விட்டுக் கொடுக்குமாறு அண்ணா என்னை வற்புறுத்தினார். நான் "ழ'கர விஷயத்தில் அண்ணாவின் கருத்தை ஏற்றுக்கொண்டேன். ஆனால் "உ'கர-அதாவது, "NAD' என்றில்லாமல் NADU என்றிருக்க வேண்டும் என்பதில் பிடிவாதம் காட்டினேன். அண்ணா அவர்கள் ராஜாஜிக்குத் தந்த உறுதிமொழியைக் கைவிட்டு எனது திருத்தத்தை ஏற்றுக்கொண்டார்''.

இந்தப் பெயர் மாற்றப் பிரச்னையின் வரலாற்றைப் படிக்கும்போது, இந்த விஷயத்தை உணர்ச்சிவயப்பட்டு அணுகி இருப்பதாகவும், பிடிவாதமும் சமரசங்களும் நிறையவே இருந்தன என்றும் தெரியவருகிறது. தவிர, ராஜாஜி ஏன் TAMIL NADU என்று வைத்துக் கொள்ளுமாறு ஆலோசனை கூறினார் என்பதும், இதில் மொழியியல் வல்லுநர்களின் கருத்து என்ன என்பதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றும் தெரிகிறது.

ஒலிமாற்றம்

மொழிகளுக்கிடையே சொற்களை வாங்குவதும் கொடுப்பதும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நடைபெற்று வரும் வழக்கமே. அப்படிச் சொற்களும் பெயர்களும் ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்குப் பயணம் செய்யும்போது எத்தகைய மாற்றங்களைச் சந்திக்கின்றன என்பது மொழியியலின் சுவைமிக்க பகுதியாகும். இதற்கு COMPARATIVE PHONOLOGY  என்று பெயர். எந்தச் சொல்லும் மூல மொழியில் என்ன வடிவத்தில் இருந்ததோ அதே வடிவத்தில் நிலைத்து நிற்பதில்லை. அவை உருமாற்றம் அடைகின்றன. அந்த உருமாற்றம் எந்த அடிப்படையில் நடக்கிறது என்பதுதான் நாம் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம். இங்கே இரண்டு மொழிகள் தொடர்புப்படுத்தப் பட்டிருக்கின்றன. ஒன்று கடன் கொடுக்கும் மொழி; மற்றொன்று கடன் வாங்கும் மொழி. எந்த மொழி இந்தப் பெயர்களையும், சொற்களையும் இறக்குமதி செய்கிறதோ, அந்த மொழியின் ஒலி அமைப்பையும், இலக்கண விதிகளையும் பொறுத்துத்தான் ஒலிமாற்றம் நடக்கிறது. கடன் கொடுத்த மொழிக்கு இந்த விஷயத்தில் பெரும்பாலும் அதிகாரம் இல்லை.

ஒரு மொழிக்குள் பிறமொழிச் சொற்கள் நுழையும்போது, அந்தச் சொற்களைச் செப்பனிட்டு, சீர்திருத்தி, வித்தியாசமான ஒலி அமைப்புகளைத் தன் விதிகளுக்கு ஏற்ப மாற்றியமைத்து முடிவில் தன்னுடைய சொற்களைப் போன்றே உருமாற்றம் செய்துவிடுகிறது. இது எந்த நிபுணரும், நடுவரும் மேற்பார்வை பார்த்து நடத்தும் செயல் அல்ல. ஒரு மொழி பேசும் கோடானுகோடி மக்கள், தாங்களே புதிய சொற்களைத் தங்கள் மொழிக்கேற்ப உருமாற்றம் செய்துவிடுகிறார்கள். இதற்கு PHONOLOGICAL METAMORPHOSIS என்று பெயர். அப்படி மாற்றம் அடைந்தால்தான் அந்தச் சொல் அந்த மொழியோடு இரண்டறக் கலக்கும். இல்லையென்றால், ஆறாவது விரலைப் போல் இது நீட்டிக் கொண்டிருக்கும்; நாளடைவில் வழக்கொழிந்து போகும். இதற்கு எந்த மொழியும் விதிவிலக்கு அல்ல.

ஏன் இந்த ஒலிமாற்றம்?

மொழிக்கு மொழி ஒலி வேறுபடுவதற்குக் காரணம் அவற்றின் அடிப்படை அமைப்பாகிய PHONEME என்ற ஒலிக்கூறுகள் வேறுபட்டு ஒலிப்பதே ஆகும். ஒரு மொழியிலுள்ள ஒலி அமைப்பும், அதைக் குறிக்கும் எழுத்துகளும் வேறொரு மொழியில் அப்படியே இருப்பதில்லை. எனவே, தமிழ்ச் சொற்களின் ஒலியை அப்படியே வேறொருமொழியில் கேட்க முயன்றால் அது தோல்வியில் முடிவது மட்டுமல்ல, தமிழ்ச் சொற்கள் பிற மொழிக்குப் போவதையும் அது தடுத்துவிடும். மொழியியல் அறிஞரும், தமிழ் அகராதி ஆசிரியருமாகிய பாவானந்தம்பிள்ளை 1925-இல் சுட்டிக் காட்டியது போல FIDDLE, FUNNEL போன்ற சொற்களை நாம் ஆங்கிலத்தைப் போலவே உச்சரிக்க முயற்சி எடுத்தாலும் பொதுமக்கள் வசதியாக "பிடில்', "புனல்' என்றுதான் உச்சரிப்பார்கள்.

தமிழில் இறக்குமதி

பிறமொழிச் சொற்களைத் தமிழில் எப்படி எழுதுகிறோம் என்பதையும் சற்று எண்ணிப் பார்ப்போம். "ப்ரிட்டனின் முன்னாள் ப்ரதமர் மாக்ரெட் தேட்ச்சரின் இறுதிச் சடங்கு இங்லண்டில் டெம்ஸ் நதிக்கரையில் நடக்கிறது' என்றா எழுதுகிறோம்? BRITAIN - பிரிட்டன், ப்ரதான் மந்திரி - பிரதமர், MARGARET THATCHER - மார்கரெட் தாட்சர், ENGLAND  - இங்கிலாந்து, THAMES -  தேம்ஸ் என்றெல்லாம் உருமாற்றித்தானே எழுதுகிறோம்! அதுதானே முறை!
புனிதமானவை என்று கருதப்படும் மதம் சார்ந்த சொற்களிலும்கூட இத்தகைய ஒலி மாற்றம் நிகழ்ந்துள்ளது. KRISHNA -  கண்ணன், LAKSHMAN  -  இலக்குவன், SITA -  சீதை, JESUS CHRIST - ஏசு கிறிஸ்து, REHMAN - ரகுமான், HEBREW - எபிரேயம் என்று பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

திசைச் சொற்கள்

இன்றியமையாத அயல்மொழிச் சொற்களைத் தமிழில் ஏற்றுக்கொள்ள நம் முன்னோர்கள் "திசைச்சொல்' என்று ஒரு பாகுபாடு வகுத்து வைத்தார்கள். அச்சொற்களையும் கூட உருமாற்றம் அடைந்த பிறகே தமிழ் ஏற்றுக்கொண்டுள்ளது. தமிழறிஞர் வ.சுப.மாணிக்கம் சொன்னார்: ""வாய்க்குள் புகுந்த வேற்றுப் பொருள்களை நா வளைத்துத் துளைத்து எப்படியும் வெளியேற்றுவது போல, தமிழும் வேற்றொலிகளை ஒதுக்கிவிடும். வீரமாமுனிவர் தமிழ்த் தோற்றம் பெற்றதுபோல, பிறமொழிச் சொற்கள் தமிழுக்கு வரும்போது தம்முருவத்தை அகற்றித் தமிழுருவம் பெறும்; பெற வேண்டும்''.

அதே போன்று தமிழ்ச் சொற்கள் பிற மொழிக்குச் செல்லும் போதும் இந்த உருமாற்றம் நடக்கத்தான் செய்யும். இது ஒருவழிப்பாதை அல்லவே! Chinese  மக்களை "சீனர்கள்' என்று தமிழில் உருமாற்றி எழுதும்போது அவர்கள் புண்படமாட்டார்கள். தமிழ்நாடு என்பதை பஹம்ண்ப்ய்ஹக் என்று எழுதும்போது நாமும் அப்படியே எடுத்துக்கொள்வோம். "ழ'கரம் தமிழுக்குத்தான் சிறப்பு ஒலியே தவிர, ஆங்கிலத்துக்கோ ஜெர்மனி மொழிக்கோ அல்ல.

மொழிக்கு மொழி PHONEME  மாறுபடுவதால், இன்னொரு மொழிக்காரர்கள் அப்படியே சரியாக எழுதவோ உச்சரிக்கவோ மாட்டார்கள். சான்றாக, CASE, CAR, CAT என்ற மூன்று சொற்களை எடுத்துக்கொள்வோம். முதல் இரண்டு சொற்களையும் தமிழில் கேஸ், கார் என்று எழுதலாம். மூன்றாவது சொல்லை எப்படி எழுதுவீர்கள்? "கேட்' அல்லது "காட்' என்றுதான் எழுதவேண்டும். ஆனால் இரண்டுமே தவறு. அதனால்தான் தினமணி முதல் பக்கத்தில் "மாநில ரேங்க் இழந்த மாணவி' என்று போட்டிருந்தார்கள். காரணம், CAT, RANK என்பதற்குச் சரியான ஒலி தமிழில் கிடையாது. இது போல் எத்தனை எத்தனையோ ஒலிகளைப் பற்றி எழுதிக்கொண்டே போகலாம். "பள்ளிச் சாலை வழி' என்பதை எப்படி ஆங்கிலத்தில் எழுதுவீர்கள்? "ழ'கரம் மட்டும்தான் முக்கியமா? மற்ற "ல'கரம், "ள'கரம் என்ன ஆகும்? ர, ற, ன, ண இவை பற்றி என்ன செய்வது? இதில் மிகவும் பிடிவாதமாக இருந்தால் கடைசியில் இந்தத் தமிழ்ச் சொற்கள் ஆங்கிலத்தோடு கலவாமல் ஒதுங்கியே நிற்கும். இது தமிழுக்கு நன்மை செய்யுமா? அல்லது ஊறு செய்யுமா? என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.

எனவே, DINAMANI என்பதை DHINAMANI  என்றோ, TAMIL NADU என்பதை THAMIZH NADU என்றோ எழுதுவதற்கு முன்னால் ஆங்கிலமொழியின் ஒலியமைப்போடு இது ஒத்துப்போகுமா என்ற ஒன்றை ஆழமாகச் சிந்திக்க வேண்டும். தமிழில் "தமிழ்நாடு' ஆங்கிலத்தில் TAMIL NADU என்று சொல்பவர்களுக்கு மொழியியல் சான்றுகள் நிறைய உள.

நம் கடமை

தமிழர்களாகிய நம்முடைய கடமை உலகிலேயே மிக்க உயர்மொழிகளுள் ஒன்றாகிய தமிழ்மொழியைப் பிழையின்றி எழுதவும், பேசவும் வேண்டிய முயற்சிகளை எடுப்பதே ஆகும். தமிழும் உயர்ந்து, தமிழர்களும் உயர்ந்து விளங்கும் ஒளிமிக்க காலம் வரும்போது நம் தமிழ்ச் சொற்கள் எத்தனையோ மொழிகளில் பயணம் போகலாம். அவை எத்தனையோ வடிவங்களில் இருக்கலாம். அவை பற்றியெல்லாம் அந்தந்த மொழிக்காரர்கள் பார்த்துக் கொள்வார்கள். தமிழர்கள் கவலையுற வேண்டாம். நாம் நம் தோட்டத்தைப் பார்த்துக் கொள்வோம்!                                                                                                                  

நன்றி - தினமணி, 19-05-2013

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger