Home » » குழந்தைகள் பயமின்றி வளர .......எஸ்.சுவாமிநாதன்

குழந்தைகள் பயமின்றி வளர .......எஸ்.சுவாமிநாதன்

எனது பேத்திக்கு வயது 10 ஆகிறது. நான்காம் வகுப்பு படிக்கிறாள். பள்ளிப் பாடங்கள் தெரிந்தும் டீச்சர் கேட்கும்போது, பயத்தின் காரணமாக எதுவும் சொல்லாமல் மவுனமாக இருப்பதால், அடி வாங்குகிறாள். பயம் நீங்கி, நல்ல மாணவியாக உருவாவதற்கு என்ன செய்வது?
 
எஸ்.செல்லத்துரை, கீரனூர்.

 அன்பு ஒன்றையே எதிர்பார்க்கும் குழந்தைகளுக்கு, பள்ளியில் டீச்சரிடமிருந்தும், சக தோழிகளிடமிருந்தும், வீட்டில் உறவினர்களிடம் இருந்தும் அது கிடைக்காமற் போனால், மனம் வெதும்பி, மலர்களைப் போல் விரிந்து அழுகுறாமல்,சுருண்டுவிடுவர். கலகலவென்று ஓடி மகிழ்ச்சியாகப் பிறருடன் பழகி, விளையாடும் பிள்ளைகளுக்கு, பயமின்றி பதில்கூறும் தன்மை தானாகவே அமையும். அதுபோன்றதொரு சூழ்நிலையைப் பள்ளிகளும் வீடும் அமைத்துக் கொடுத்தால், குழந்தைகள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஊட்டத்தை அடைவார்கள். தான் அடிவாங்கிய விவரத்தை குழந்தை வீட்டில் கூறியவுடன், பெற்றோர் கோபம் கொண்டு, குழந்தையுடன் பள்ளிக்குச் சென்று டீச்சரிடம் ஆவேசமாகப் பேசினால், டீச்சர் அடுத்து என்ன செய்வாரோ என்று குழந்தையின் மனம் மேலும் அச்சமுறும். அதற்கு மாறாக, குழந்தையின் கன்னத்தை வருடி, முத்தமிட்டு அடி வாங்கியதற்கான காரணத்தைத் தாயார் அறிந்து, பயமின்றி பதிலளிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதே சிறந்ததெனக் கூறலாம்.
 
 பள்ளியில் நடந்த சம்பவங்களை இரவில் சுமார் 15 - 20 நிமிடங்கள் குழந்தையினருகே, பெற்றோர் அமர்ந்து நிதானமாகக் கேட்டறிவது, குழந்தைக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தரும். அவளுடைய சக தோழிகள் அதிக மதிப்பெண்களைப் பெறுபவர்களாக இருந்தாலும், அதைச் சுட்டிக்காட்டி, குழந்தையை மட்டம் தட்டக் கூடாது. அப்படிச் செய்தால் மனம் குறுகிவிடும். நற்பண்புகளை எந்நேரமும் குழந்தைகளுக்குச் சொல்லித் தந்து, ஊக்கமளிக்க வேண்டும் என்று ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது. அவற்றில் சில:
 
  பூர்வாபிபாஷி - பிறர் தம்முடன் பேசுவதை எதிர்பாராமல் தானே முதலில் பேச்சைத் தொடங்குவாய்.
 
 சுமுக: காலே ஹிதமித மதுரார்த்தவாதீ - இனிய முகத்துடன் உரிய நேரத்தில் இதமாயும் அளவுடனும் இனியதாகவும் பேசுவாய்.
 
  வஷ்யாத்மா - மனமும் பொறிகளும் உனக்கு அடங்கிச் செயலாற்றட்டும்.
 
 ஹேதொ ஈர்ஷ்யூ: பலே நேர்ஷ்யூ:- பிறரது வளர்ச்சிக்குக் காரணமான சாதனங்களைப் பெறுவதில் போட்டியிடு. பிறரது வளர்ச்சியைக் கண்டு பொருமாதே.
 
  சாமப்ராதன:- சாந்தத்தை முக்கியமாக்கிக் கொள்
 
  பரபருஷவசனசஹிஷ்ணு:- பிறரது கொடுஞ்சொல்லைப் பொறுத்துக் கொள்.
 அமர்ஷக்ன:- பொறுமையின்மையைத் தவிர்த்துவிடு.
 
 மேற்கூறியவற்றை அடிக்கடி குழந்தைகளுக்கு புரியும் விதத்தில் எளிமையாக எடுத்துக் கூறுவதால், அவர்கள் மனதளவில் நல்ல பரிணாம வளர்ச்சியை அடைந்து, பயமகன்று உள்ளத்தில் தைரியத்தைப் பெற்று, டீச்சர் கேட்கும் கேள்விகளுக்குத் தயக்கமின்றிப் பதிலளிப்பார்கள்
.
 மனதின் ரஜ - தமோ தோஷ குணங்களின் ஆதிக்கத்தாலும், உடலில் கப - வாத தோஷங்களின் ஆதிக்கத்தாலும் பயம் ஏற்படுவதாக ஆயுர்வேதம் கருதுகிறது. மனதின் ஸத்வ குணம் ஓங்கியிருக்கவிடாதபடி, ரஜ - தமோ தோஷங்கள் சூழ்ந்து கொண்டால், பயத்துக்குக் காரணமாக அவையே அமைகின்றன.

 காலை உணவாக, குழந்தைகளுக்குப் பசு நெய்விட்டுப் பிசைந்த பருப்பு சாதத்தில் நெய்யில் தாளிதம் செய்த கடுகு சீரகத்தைக் கொண்ட தக்காளி ரசத்தின் தெளிவைச் சேர்த்து சாதமாகச் சாப்பிட்டால், மூளையின் எல்லையற்ற சக்தி பெருகி, அதுவே ஸத்வகுண வளர்ச்சிக்குக் காரணமாகும். 

மதியம் நல்ல கெட்டியான தயிர்ச்சாதமும், இரவில் பால் சாதம் என்றவிதத்தில் அமைத்தால், அநேகமாக குழந்தை பயமின்றி மனத் தெளிவுடன் வளர்வாள்.
 
கல்யாணககிருதம், சாரஸ்வதாரிஷ்டம், பிரம்மீ தைலம், அரவிந்தாஸவம் போன்ற தரமான மருந்துகளை, ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி கொடுத்து வர, அவள் படிப்பில் முதல் மாணவியாகவும், தேசத்துக்கு நல்லதொரு பிரஜையாகவும் இருப்பாள். மனதிலுள்ள பயத்தை நீக்கும் திறன் கொண்ட மருந்துகள் இவை.
 
எஸ்.சுவாமிநாதன், ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி அய்யுர்வேதக் கல்லூரி,
நசர பேட்டை - 600 123 ( பூந்தமல்லி அருகே ) செல் :- 94444 41771

நன்றி :- தினமணி கதிர், 19- 05 - 2013

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger