Home » » தெலங்கானா -- எழப்போகும் வேறு சில பிரச்சினைகளும் போராட்டங்களும் ??

தெலங்கானா -- எழப்போகும் வேறு சில பிரச்சினைகளும் போராட்டங்களும் ??

 ஆபத்துக்குக் கால்கோள் விழா ! - தினமணி. தலையங்க்கம்- 02-09-2013


இந்தியாவின் 29-ஆவது மாநிலமாக தெலங்கானா உருவாக்கப்படுவது ஆளும் மத்திய கூட்டணி அரசால் உறுதி செய்யப்பட்டு விட்டது. 2009 மக்களவைத் தேர்தலின்போது தெலங்கானா மக்களுக்கு அளித்த வாக்குறுதியை, அடுத்த மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் நிறைவேற்ற முற்பட்டிருக்கிறது காங்கிரஸ் தலைமை.

 இந்த முடிவு சரியா, தவறா என்பதை வருங்காலம்தான் தீர்மானிக்கும்

என்றாலும்கூட, இந்த முடிவின் பின்னால் இருக்கும் அரசியலும், இந்த முடிவினால் தேசிய அளவில் ஏற்பட இருக்கும் பின்விளைவுகளும் தவறுகளிலெல்லாம் பெரிய தவறு என்பதை வருங்காலம் உணர்த்த இருக்கிறது.

இந்தியா சுதந்திரம் பெற்ற ஆறாவது ஆண்டிலேயே "தெலங்கானா' என்கிற தனி மாநிலக் கோரிக்கை எழுப்பப்பட்டது. சென்னை ராஜதானியிலிருந்து "தனி ஆந்திரம்' என்கிற கோரிக்கையும் தெலங்கானா கோரிக்கையும்தான், அன்றைய மத்திய அரசை "மாநில சீரமைப்பு ஆணையம்' அமைக்கத் தூண்டியது. அப்போது, மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படும் என்கிற முடிவை எடுத்தபோது, தெலுங்கு பேசும் தெலங்கானா, கடற்கரையோர ஆந்திரம், ராயலசீமா பகுதிகளை உள்ளடக்கிய ஆந்திரப் பிரதேசம் என்கிற மாநிலத்திற்கு வடிவம் தரப்பட்டது.

1956-இல் ஆந்திரப் பிரதேசம் உருவானபோது, தெலங்கானா பகுதிக்கு பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. அவற்றில் எதுவுமே நிறைவேற்றப்படாத நிலையில்தான் 1969-லும், 1972-லும் தனித் தெலங்கானா கோரிக்கையுடன் மிகப்பெரிய போராட்டங்கள் நடைபெற்றன. தெலங்கானா பகுதி மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பின்தள்ளப்படுகிறார்கள் என்பதும், தொடர்ந்து பொருளாதார வளர்ச்சியில் தெலங்கானா பகுதிகள் பிற்பட்டவையாகவே தொடர்வதும்தான் தெலங்கானா மாநிலக் கோரிக்கைக்குக் காரணங்கள். தெலங்கானா பகுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் எழுச்சிக்கும் இவைதான் காரணமாக அமைந்தன.

மத்திய அரசின் இப்போதைய முடிவின்படி, அடுத்த பத்தாண்டுகளுக்கு இரு மாநிலங்களின் பொதுத் தலைநகராக ஹைதராபாத் இருக்கும். சீமாந்திரா மாநிலத்திற்கு என்று அந்த மாநில அரசு புதிய தலைநகரை உருவாக்கிக் கொள்ள மத்திய அரசு நிதி உதவி அளிக்கும். அதேபோல, "போலாவரம்' நீர்ப்பாசனத் திட்டத்தை மத்திய அரசு ஏற்றுக் கொள்வதன் மூலம் இரண்டு மாநிலங்களின் நலனும் பேணப்படும். ( ??? )

பிரச்னைக்குரிய விஷயம், புதிய தெலங்கானா மாநிலம் 10 மாவட்டங்களை மட்டும் உள்ளடக்கியதாக இருக்கப் போகிறதா அல்லது கர்நூல், அனந்தப்பூர் ஆகிய இரண்டு மாவட்டங்களையும் இணைத்து 12 மாவட்டங்களுடனான மாநிலமாக இருக்கப் போகிறதா என்பதுதான்.

 ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் செல்வாக்குக் கேந்திரங்களான அந்த இரண்டு மாவட்டங்களையும் தெலங்கானாவில் இணைப்பதன் மூலம் அவரை சீமாந்திராவிலோ தெலங்கானாவிலோ பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க முடியாத நிலைமைக்குத் தள்ளிவிடலாம் என்பது காங்கிரஸின் எதிர்பார்ப்பு.

இதுவேகூட இன்னொரு போராட்டத்துக்கு வழிகோலக்கூடும்.


மத்திய அமைச்சரவை தீர்மானித்துவிட்டதாலேயே "தெலங்கானா' மாநிலம் உருவாகிவிட முடியாது. மத்திய சட்ட அமைச்சகம், மாதிரி வரைவு மசோதா ஒன்றைத் தயாரித்து ஆந்திர மாநில அரசுக்கு அனுப்பி, அந்த மசோதா அம்மாநிலச் சட்டப் பேரவையால் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும். பின்னர் குடியரசுத் தலைவரின் அனுமதியுடன் அந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டு முறையான அறிவிப்பும் வந்த பிறகுதான் தெலங்கானா என்கிற மாநிலம் உருவாகும். அடுத்த பத்து மாதங்களுக்குள் இது சாத்தியப்படுமா என்பது தெரியவில்லை. பாஜகவின் ஆதரவு இருப்பதால் சாத்தியப்படலாம் என்றாலும்கூட, சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேறுவதில் சிக்கல் ஏற்படக்கூடும்.

கவலையளிக்கும் வேறு பல சிக்கல்களையும் உள்ளடக்கி இருக்கிறது மத்திய அரசின் முடிவு. பிரிவினைக்கு எதிரான போராட்டம் தெலங்கானா அல்லாத சீமாந்திரா பகுதிகளில் வலுத்தால், ஏற்கெனவே நக்சல் தீவிரவாதிகளுடன் போராடிக் கொண்டிருக்கும் துணை ராணுவத்தாலோ, பாதுகாப்புப் படைகளாலோ அதை எதிர்கொள்ள முடியுமா?

அது போகட்டும். அசாமில் போடோலாந்து, மேற்கு வங்காளத்தில் கோர்க்காலாந்து, உத்தரப் பிரதேசத்தில் ஹரித் பிரதேஷ், பஸ்சிம் பிரதேஷ், புண்டல்கண்ட், மகாராஷ்டிரத்தில் விதர்பா, குஜராத்தில் சௌராஷ்டிரா, கர்நாடகத்தில் "கூர்க்', ஒடிசாவில் கோஷலாஞ்சல், பிகாரில் மிதிலாஞ்சல் என்று பல கோரிக்கைகள் காத்துக் கிடக்கின்றனவே, இங்கே எல்லாம் கிளர்ச்சிகளும் போராட்டங்களும் எழுந்தால் மத்திய அரசு அதை எப்படி எதிர்கொள்ளப் போகிறது?

உத்தரப் பிரதேச சட்டப் பேரவையில் அந்த மாநிலத்தை பூர்வாஞ்சல், புண்டல்கண்ட், அவத் பிரதேஷ், பஸ்சிம் பிரதேஷ் என்று நான்காகப் பிரிக்கக் கோரி ஒரு தீர்மானம் 2001-லேயே நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசால் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

அப்படி இருக்கும்போது இப்போது ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையில் தீர்மானம் இல்லாமலேயே, அரசியல் ஆதாயம் தேடும் ஆசையுடன் மத்திய அரசு தெலங்கானா மாநிலம் உருவாக்கும் முயற்சியில் இறங்கி இருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

எலியைக் கொல்வதற்குக் கோட்டைக்கே தீ வைத்த கதையாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் செல்வாக்கை ஒழிப்பதற்காக தேவை இல்லாமல் தேசிய அளவில் பிரிவினைக் கோரிக்கைகள் எழும்புவதற்கு வழிகோலி இருக்கிறது காங்கிரஸ் தலைமை. உண்மையிலேயே, சிறிய மாநிலங்கள் மூலம் நிர்வாகத்தை மேம்படுத்துவதுதான் நோக்கம் என்றால் "மாநில மறு சீரமைப்பு ஆணையம்' அமைத்து முறையாக புதிய மாநிலங்களை உருவாக்குவதுதானே புத்திசாலித்தனம்?

போராட்டங்களுக்கும், கிளர்ச்சிகளுக்கும், வன்முறைகளுக்கும் தூபமிட்டு, பொருளாதாரச் சிக்கல் என்கிற புதைகுழியில் விழுந்து கிடக்கும் மத்திய அரசு தனது கையாலாகாத்தனத்திலிருந்து மக்கள் கவனத்தைத் திசை திருப்ப முற்படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அப்படி இருக்குமானால், இன்றைய ஆட்சியாளர்களை சரித்திரம் மன்னிக்காது!        

நன்றி :- தினமணி, 02-08-2013

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger