Home » » மதுரை பெஞ்ச் மகோன்னதங்கள் !i

மதுரை பெஞ்ச் மகோன்னதங்கள் !i





2004 ஆம் ஆண்டுக்கு முன் தமிழ்நாட்டில் ஒரே ஒரு உயர்நீதிமன்றம்தான். அதுவும் சென்னையில்தான். தென்கோடி கன்யாகுமரியில் உள்ளவர்கள் கூட வழக்காட சென்னை உயர்நீதிமன்றத்துக்கே செல்ல வேண்டி
 யிருந்தது.

 24.7.2004 முதல் அந்த நிலை மாறியது. மதுரையில் தென் தமிழகத்தைச் சேர்ந்த மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்யாகுமரி, தேனி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, கரூர் ஆகிய 13 மாவட்டங்களை உள்ளடக்கி சென்னை உயர்நீதிமன்ற பெஞ்ச் தொடங்கப் பெற்றது.

 அன்று முதல் இம்மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுப்பதில் நேரமும், போக்குவரத்துச் செலவும் கணிசமாக மிச்சமாயின.


 இம்மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்களுக்கும் இது எளிதாய் அமைந்தது.
 மதுரையில் இயங்கிவரும் சென்னை உயர்நீதிமன்ற பெஞ்ச் வளாகம்தான் இந்தியாவிலேயே பெரிய உயர்


 நீதிமன்ற வளாகம் என்பது ஆச்சரியமான உண்மை. இதன் மொத்த பரப்பளவு 107 ஏக்கர்.


 வளாகத்தில் 76 வகை மரங்களும், 28 வகையான பறவைகளும், 15 வகை பூச்சிகளும், சில் வண்டுகளும் கண்டறியப்பட்டுள்ளன. இவை போன்ற பல தகவல்களைக் கொண்ட "பாரதத்தின் பசுமையான உயர்நீதிமன்ற பெஞ்ச்' என்ற 300 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை வழக்கறிஞர்கள் டி.லஜபதிராயும், ஜி.பாபுராஜதுரையும் கொண்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 தற்போது வளாகத்தில் தண்ணீர் தட்டுப்பாடுதான் தலையாயப் பிரச்னை. 25 ஆழ்துளைக் கிணறுகள் இருந்தும் தண்ணீர் இல்லை. முற்றிலுமாக வற்றிப் போய்விட்டன. மாநகராட்சியிடம் வழக்காடி தினமும் 8 டாங்க் நீரைப் பெற்றுள்ளது மதுரை பெஞ்ச்.


 ஆழ்வார்குறிச்சியருகில் உள்ள வாகைக் குளத்தைச் சுற்றியுள்ள கருவேல மரங்களை வெட்டத் தடை விதித்து, பறவைகள் கூடு கட்டி சரணாலயம் அமைத்து சுதந்திரமாக வாழ்ந்து வருவதைக் காப்பாற்றியது மதுரை பெஞ்ச்.


 பாதையை மாற்றியமைத்து கன்யாகுமரி பாசன ஏரியை பாதுகாக்கும்படி தேசிய நெடுஞ்சாலைத் துறைக்குக் கட்டளையிட்டதும், மதுரையில் உள்ள யானை மலை போன்றவற்றைச் சரித்திர - இயற்கைச் சின்னமாகப் பாதுகாக்கும்படி அரசுக்கு யோசனை சொன்னதும், மரங்களை வெட்டத் தடை விதித்ததும். மலைகளை உடைப்பதற்குத் தடைவிதித்ததும், தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளத் தடை விதித்ததும் மதுரை பெஞ்சின் புகழ் பெற்ற தீர்ப்புகளாகும். இயற்கைச் சூழலுக்கு முக்கியத்துவம் கொடுத்து அழிவிலிருந்து இயற்கையைக் காப்பாற்றும் மகோன்னதமான தீர்ப்புகளால் மதுரை பெஞ்ச் பாராட்டுக்குரியதாக விளங்குகிறது.


 மொபைல் போனை உயர்நீதி மன்ற வளாகத்தில் நீதிமன்றப் பணிகளுக்கு இடையூறு இல்லாமல் பயன்படுத்தலாம் என்ற அதிரடித் தீர்ப்பை வழங்கியதும் மதுரை பெஞ்ச்தான். தீர்ப்பு வழங்கியவர் அண்மையில் பணி ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு.                                                                                                                      

நன்றி :- நா.கிருஷ்ணமூர்த்தி, ஞாயிறு கொண்டாட்டம், தினமணி, 18 -08-2013


0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger