Home » » 6 மாதங்களாக ஊதியமின்றித் தவிக்கும் காவல் சிறார் மன்ற ஆசிரியர்கள்-கே.வாசுதேவன்

6 மாதங்களாக ஊதியமின்றித் தவிக்கும் காவல் சிறார் மன்ற ஆசிரியர்கள்-கே.வாசுதேவன்


சென்னைப் பெருநகர காவல்துறையின் கீழ் உள்ள காவல் சிறார் மன்றங்களின் (பாய்ஸ் கிளப்) ஆசிரியர் மற்றும் உதவியாளர்களுக்கு கடந்த 6 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

குற்றத் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே சென்னையில் காவல் சிறார் மன்றங்கள் காவல்துறையால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 

இந்த மன்றத்தின் மூலம் தவறான வழியில் செல்லும் சிறுவர்களை நல்வழிப்படுத்துதல், சிறுவர்களுக்கு கல்வி, பொது அறிவு உள்ளிட்ட அறிவை வளர்க்கக் கூடிய பயிற்சிகள் அளித்தல் உள்ளிட்ட பல பணிகள் செய்யப்படுகின்றன. கல்வி, விளையாட்டுகளில் சிறுவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பல்வேறு போட்டிகளும் நடத்தப்படுகின்றன.

சென்னையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை 81 காவலர் சிறார் மன்றங்கள் இருந்தன. ஒவ்வொரு சிறுவர் மன்றங்களிலும் 70 முதல் 100 பேர் வரை உறுப்பினர்களாக இருக்கின்றனர். இந்நிலையில் குற்றச் சம்பவங்களில்
சிறுவர்களின் பங்களிப்பு அதிகரிப்பதால், ஏழ்மையில் சிக்கி திசை மாறும் சிறுவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு புதிதாக 54 சிறார் மன்றங்கள் தொடங்கப்பட்டன. இந்த சிறார் மன்றங்கள் சென்னையில் உள்ள 900 குடிசைப் பகுதிகளிலும் 50 மீனவர் குடியிருப்புப் பகுதிகளிலும் தொடங்கப்பட்டுள்ளன.

சிறார் மன்றங்களை காவல்துறை, அரசின் பிற துறைகளோடும் தொண்டு நிறுவனங்களோடும் இணைந்து செயல்படுத்தி வருகிறது. சென்னையில் இரண்டு ஆண்டுகளாக முடங்கிய நிலையில் இருந்த சிறார் மன்றங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்த காவல்துறை அதிகாரிகள், அவற்றுக்கு மீண்டும் புத்துயிர் அளித்தனர். 

மேலும் புதிதாக 54 சிறார் மன்றங்கள் குடிசைப் பகுதிகளில் தொடங்கப்பட்டன. இதில் 29 சிறார் மன்றங்கள் மட்டுமே தொண்டு நிறுவனங்களின் ஆதரவோடு செயல்படுகின்றன. மீதி உள்ள 106 சிறார் மன்றங்களும் முழுமையாக காவல்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன.

6 மாதம் ஊதியம் இல்லை: இந்நிலையில் இப்போது காவல் சிறார் மன்றங்கள் போதிய ஆதரவு இல்லாமல் மீண்டும் செயல்படாத நிலையில் உள்ளன. சிறார் மன்றத்தை நடத்தும் சாரண ஆசிரியருக்கு ரூ.2,500 ஊதியமும், உதவியாளருக்கு ரூ.1,500 ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவர்களுக்கு சரியாக ஊதியமும் வழங்கப்படுவதில்லை என புகார் கூறப்படுகிறது.

குறிப்பாக வட சென்னையில் இயங்கும் 25 சிறார் மன்றங்களின் சாரண ஆசிரியர்களுக்கு கடந்த 6 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.
இது குறித்து அவர்கள், காவல்துறை உயர் அதிகாரிகளிடம் பல முறை புகார் செய்தும் எந்த பலனும் இல்லை. மாறாக பெருநகர காவல்துறையில் நிதிப் பற்றாக்குறை இருப்பதால், சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக விளக்கம் தரப்படுகிறதாம்.

ஏற்கெனவே சில மாதங்களுக்கு முன்பு பெருநகரம் முழுவதும் உள்ள அனைத்து சிறார் மன்றங்களுக்கும் ஊதியம் வழங்கப்படாமல் இருந்தது.
பின்னர் சாரண ஆசிரியர்களின் வலியுறுத்தலைத் தொடர்ந்து ஊதியம் வழங்கப்பட்டது. இந்நிலையில், வட சென்னை பகுதியில் உள்ள சாரண ஆசிரியர்கள், உதவியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் இருப்பது சாரண ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், அந்தப் பகுதியில் சிறார் மன்றங்களின் செயல்பாடுகள் சிறிது சிறிதாக குறையத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது. சிறார் மன்றங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதன் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என சமூகநல ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

இல்லையெனில் குற்றத் தடுப்பு நடவடிக்கையில் பெரும் பின்னடைவு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் சிறுவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவது கணிசமாக உயருவதற்கான வாய்ப்புகளும் இருப்பதாகவும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.
 
தினமணி, 28 - 09 -2013

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger