Home » » தண்ணீரில் இயங்கும் பைக், சோலார் சைக்கிள் !

தண்ணீரில் இயங்கும் பைக், சோலார் சைக்கிள் !



     தண்ணீரில் ஓடும் மோட்டார் சைக்கிள். - சோலார் சைக்கிள்

கோவை கொடிசியா கண்காட்சி வளாகத்தில் வெள்ளிக்கிழமை துவங்கிய புதிய கண்டுபிடிப்புகளுக்கான கண்காட்சியில், தண்ணீரில் ஓடும் மோட்டார் சைக்கிளும், சோலார் சைக்கிளும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.

கோவை கொடிசியா வளாகத்தில் பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் சார்பில், புதிய கண்டுபிடிப்புகளுக்கான கண்காட்சி வெள்ளிக்கிழமை துவங்கியது.

இதில், சுமார் 500 பேர் தங்களின் பல்வேறு கண்டுபிடிப்புகளைக் காட்சிக்கு வைத்திருந்தனர். வேளாண் பல்கலைக் கழகம், பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி, பண்ணாரி அம்மன், ஈஸ்வர் உள்ளிட்ட தொழில்நுட்பக் கல்லூரிகள், பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவை தங்கள் மாணவ, மாணவியரின் கண்டுபிடிப்புகளைக் காட்சிக்கு வைத்திருந்தன.

இதில், தண்ணீரில் ஓடும் மோட்டார் சைக்கிளை மேட்டூர் மெட்ரிக் பள்ளி மாணவர் கே.ஜி. அரவிந்த் வைத்திருந்தார். மோட்டார் சைக்கிளில் சில மாறுதல்களைச் செய்து தண்ணீரை ஒரு குறிப்பிட்ட வேதிப் பொருளுடன் சேர்த்து மோட்டார் சைக்கிள் இயக்கப்பட்டது. ஒரு கிலோ வேதிப் பொருள் ரூ.40. தண்ணீரை வேதிப்பொருளுடன் கரைத்து இயக்கும்போது குறைந்தபட்சம் 60 கி.மீ. வரை கிடைக்கிறது. ஒவ்வொரு மோட்டார் சைக்கிளின் மோட்டார் திறனுக்கேற்ப வாகனத்தின் ஓடும் தூரம் மாறுபடுகிறது என மாணவர் அரவிந்த் கூறினார்.

சோலார் சைக்கிள்: கர்நாடகத்தின் பி.வி.பி. பொறியியல் கல்லூரி மாணவர் விகாஷின் கண்டுபிடிப்பான 3 சக்கர சோலார் சைக்கிள், மாற்றுத் திறனாளிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். 200 கிலோ எடை வரை எளிதில் கொண்டு செல்லும் வகையில் அமைக்கப்பட்ட இந்த சோலார் சைக்கிள், கர்நாடக மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குழுவால் 2013-14ஆம் ஆண்டுக்கான சிறந்த கண்டுபிடிப்பாகத் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த வாகனத்துக்கு காப்புரிமை பெற விண்ணப்பிக்கப்பட உள்ளது.
தினமணி - 28 - 09 - 2013

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger