Home » » வேட்பாளர்களை நிராகரிக்க வாக்காளர்களுக்கு உரிமை உண்டு' -உச்ச நீதிமன்றம்

வேட்பாளர்களை நிராகரிக்க வாக்காளர்களுக்கு உரிமை உண்டு' -உச்ச நீதிமன்றம்

தேர்தலில் அனைத்து வேட்பாளர்களையும் நிராகரிக்க வாக்காளர்களுக்கு உரிமை உண்டு' என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும், "தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவரைக் கூட வாக்காளருக்குப் பிடிக்காவிட்டால் அவர்கள் அனைவரையும் நிராகரிக்க வகை செய்யும் வசதியை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திலோ, வாக்குச்சீட்டிலோ இடம்பெறச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2004-இல் வழக்கு: இது தொடர்பாக பீப்பிள்ஸ் யூனியன் ஃபார் சிவில் லிபர்டீஸ் (பியூசிஎல்) என்ற பொதுநல அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் 2004-ஆம் ஆண்டில் வழக்குத் தொடர்ந்திருந்தது. அதை விசாரித்த தலைமை நீதிபதி பி. சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சனா பிரகாஷ் தேசாய், ரஞ்சன் கோகோய் அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை வழங்கிய 51 பக்க தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

அரசியல் கட்சிகளால் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் மீது அதிருப்தி இருக்குமானால், அதை வெளிப்படுத்தும் உரிமையை வாக்காளருக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு ஒட்டுமொத்த வேட்பாளர்களை வாக்காளர்கள் நிராகரிக்கும் சூழ்நிலை உருவானால், சமூக நோக்குடைய, நேர்மையான வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் நிறுத்த வேண்டிய நிலைமை ஏற்படும்.

நாடாளுமன்ற வாக்குரிமையே முன்மாதிரி: நாடாளுமன்றத்தில் நடைபெறும் வாக்கெடுப்பின்போது "ஆம்', "இல்லை', "விருப்பமில்லை' ஆகிய மூன்று வாய்ப்புகள் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதே முன்மாதிரியை தேர்தல் வாக்குப்பதிவின் போதும் "மேற்கண்டவர்கள் எவருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை' ("சஞபஅ'-சஞசஉ ஞஊ பஏஉ அஆஞயஉ) என்ற வசதியை அறிமுகப்படுத்த வேண்டும் என்று மனுதாரர் விடுக்கும் கோரிக்கையில் நியாயம் உள்ளது.

போட்டியிடும் வேட்பாளரில் எவருக்கும் உரிய தகுதி இல்லை என்பதை உணர்ந்தால், அதை வெளிப்படுத்தும் வாய்ப்பு வாக்காளருக்கு வழங்கப்பட வேண்டும்.

அந்த வகையில், வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமை, வலிமையான ஜனநாயகத்தின் அடிப்படையாகவும், அவசியமானதாகவும் உள்ளது.

உலக நாடுகளில் நடைமுறை: உலக அளவில் ஃபிரான்ஸ், பெல்ஜியம், பிரேசில், கிரீஸ், உக்ரைன், சிலி, வங்கதேசம், அமெரிக்கா, ஃபின்லாந்து, ஸ்வீடன், கொலம்பியா, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமை அமலில் உள்ளது.

இந்த வழக்கு விசாரணையின்போது, ஒரு தொகுதியில் 64-க்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டால் அத் தொகுதியில் வாக்குரிமை செலுத்த வாக்குச்சீட்டு முறையைப் பயன்படுத்த வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளது.

மேலும், மனுதாரரின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றால், வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்கள் பெயர்கள் இடம்பெறும் பட்டியலில் கடைசிப் பகுதியை "என்ஓடிஏ' வாய்ப்புக்காக சேர்க்கும் வசதியை அமைக்க முடியும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

ஆணையத்துக்கு உத்தரவு: எனவே, தேர்தலின்போது வாக்குரிமை செலுத்தப் பயன்படுத்தப்படும் வாக்குச்சீட்டு அல்லது வாக்குப்பதிவு இயந்திரங்களில் "என்ஓடிஏ' வாய்ப்பை வாக்காளர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யும்படி தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிடுகிறது.

மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தேர்தல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுவரும் வேளையில், உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இத் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.                                                                                                                

தினமணி - 28 - 09 - 2013

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger