Home » » 1949 -ல் மறைமலையடிகள் ஆற்றிய உரை 32 பக்கங்களில்" தமிழின் சிறப்பு "-நூலாகியுள்ளது !

1949 -ல் மறைமலையடிகள் ஆற்றிய உரை 32 பக்கங்களில்" தமிழின் சிறப்பு "-நூலாகியுள்ளது !
குறுகத்தரித்த குறள்; மலையைப் பிளக்கும் சிற்றுளி; கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது - அஃதேபோல, பக்கங்கள் 32 தான் என்றாலும், முனைவர் பட்ட ஆய்வுக்கு ஒப்பானது "தமிழின் சிறப்பு' என்கிற மறைமலை அடிகளாரின் சொற்பொழிவுப் புத்தகம்.

சென்னை சைதாப்பேட்டை திருவள்ளுவர் செந்தமிழ்ச் சிவநெறிக் கழகத்தின் சார்பில் 1949-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ஆம் நாள், பல்லாவரம் சுவாமி வேதாசலம் என்னும் மறைமலை அடிகளார், சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் "தமிழின் தனிச்சிறப்புகளும், தமிழர் கடமைகளும்' என்கிற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.

இப்படியெல்லாம் சொற்பொழிவுகளும், தமிழாய்வுகளும் நடந்த இடம்தான் சென்னை மாநகரம். அப்போது, இன்றைக்கு இருப்பதுபோல போக்குவரத்து வசதிகள் கிடையாது. ஆனால், தமிழுணர்வு இருந்தது. நல்லதைக் கேட்க வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தது. குடும்ப அமைப்புகளைச் சிதைக்கும், பண்பாட்டைக் குலைக்கும் தொலைக்காட்சிகளின் மீதான மோகம் இல்லாதிருந்த பொற்காலம் அது.

மறைமலை அடிகளாரின் சொற்பொழிவை கி.ஆ.பெ.விசுவநாதம் அவர் நடந்திவந்த "தமிழர் நாடு' என்கிற இதழில் வெளியிட்டார். அதுவே இப்போது நூல் வடிவம் பெற்றிருக்கிறது.

பிரணவம் என்று சொல்லப்படும் "ஓம்' என்கிற ஓசையிலிருந்துதான் உலகம் பிறந்தது என்பது நம்பிக்கை. "ஓம்' என்கிற ஓசையை முதன் முதலில் கண்டுபிடித்தவர்கள் தமிழர்கள் என்பது மறைமலை அடிகளாரின் கருத்து.

""ஓம் தமிழுக்காகவே எழுதப்பட்டது. "ஓம்' என்ற சொல் ஓங்கார வடிவிலே எழுதப்படுகிறது. ஆரிய மொழியிலுங்கூட, தமிழ் வடிவிலேயே "ஓம்' என்ற சொல் எழுதப்படுகிறது. "ஓம்' என்ற ஓசை முதல் முதலில் ஏற்பட்டதற்கும், ஓங்கார வடிவில் "ஓம்' அமைந்திருப்பதற்கும் என்ன காரணமென்று மக்களில் பலரிடம் உசாவியிருக்கிறேன்.

நாளாக நாளாக எனக்கு ஒரு கருத்துப் புலனாயிற்று. அதாவது, நம்முடைய காதின் வடிவத்தைப் பார்த்தால் ஓங்கார வடிவாகவே இருக்கும். பொருத்தமாயிருந்தால் என் கருத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

÷கூட்டொலி என்றும், பிரிவொலி என்றும் தமிழில் இருவகை உண்டு. இதனைச் "சமஷ்டி' என்றும், "வியஷ்டி' என்றும் வடமொழியில் சொல்வதுண்டு. கூட்டொலி - "ஓம்'; பிரிவொலி - அ, உ, ம்'' என்று கூறுகிறார் மறைமலை அடிகளார்.

÷தனது உரையின் முடிவில், பூண்டி அரங்கநாத முதலியார், மாணிக்கவாசகரின் பாடல் ஒன்றை ஒரு சம்ஸ்கிருதப் புலவரிடம் எப்படி எடுத்துக்காட்டி, தமிழ்மொழி ஆரிய மொழியிலிருந்து வந்ததல்ல என்பதை விவரிக்கிறார்.

""விழியாற் பிணையாம், விளங்கி
   யலான் மயிலா, மிழற்று
மொழியார் கிளியாம், முதுவா
  னவர்தம்   முடித் தொகைகள்
கழியாக் கழற்றில்லைக் கூத்தன்
   கயிலை முத்தம் மலைத்தேன்
கொழியாத் திகழும் பொழிற்
   கெழிலாமெங் குலதெய்வமே''

திருச்சிற்றம்பலக் கோவையில் வரும் இந்த "ழ'கர, "ள'கர ஓசையுடைய பாடல் தமிழின் சிறப்புக்கு ஓர் எடுத்துக்காட்டு. அப்படிப்பட்ட தமிழைத் தாய்மொழியாகக்கொண்ட நாம் தமிழில் பேசுவதையே கேவலமாகக் கருதுகிறோம்.

 அப்படியே பேசுபவர்களில் பலரும், தமிழைத் "தமில்' என்றும், "டமில்' என்றும், "தமிள்' என்றும் பேசித் திரிகிறோம். இத்தனை எதற்கு? இன்னும் நாம் தமிழ்நாட்டைத் "தமில்நாடு' என்றுதானே அழைத்துக் கொண்டிருக்கிறோம்....

நல்லவேளை, மறைமலை அடிகள் இன்று நம்மிடையே இல்லை. இருந்திருந்தால்...                                                                                                                          

தமிழ்மணி-இந்தவாரம்-கலாரசிகன்-தினமணி - 27 - 10 - 2013

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger