Home » » கறுப்பா ? கருப்பா ? - தினமணி ஆசிரியரின் தமிழாசிரியர் சா.பன்னீர்ச்செல்வம் தரும் விளக்கம் !

கறுப்பா ? கருப்பா ? - தினமணி ஆசிரியரின் தமிழாசிரியர் சா.பன்னீர்ச்செல்வம் தரும் விளக்கம் !

"கருப்பு', "கறுப்பு' சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. "பொருத்து', "பொறுத்து' சர்ச்சை போல, இப்படிச் சொன்னால் அப்படி, அப்படிச் சொன்னால் இப்படி என்று வாதப் பிரதிவாதங்கள் வளர்ந்துகொண்டே போகின்றன.


போதும், முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என்று பார்த்தால், பட்டுக்கோட்டையிலிருந்து புலவர் சா. பன்னீர்செல்வம், "என்னுடைய கருத்தைப் பதிவு செய்துவிட்டு முற்றுப்புள்ளி வையுங்கள்' என்று கட்டளை பிறப்பித்துவிட்டார்.


நான் படித்த விக்கிரமசிங்கபுரம் பாபநாசம் தொழிலாளர் நலக் கழக உயர்நிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்தவராயிற்றே, அவரது ஆணையை மீறுவது மாணாக்கனாகிய எனக்கு அடுக்குமா?


""தமிழ்மணியில் கருப்புப் பணம் - எனும் சொல்லாட்சி பற்றிய குறிப்புரை கண்டேன்.  தமிழாசிரியர் பலரும் வழக்கமாகச் செய்கின்ற தவறுகளையே ஞானச்செல்வனும் செய்திருந்தார்.


கருப்புப் பணம் என்பது பணத்தின் நிறம் பற்றியதல்ல; பெறப்படும் முறைமை பற்றியது. மறைவாக நடந்த செயல் வெளிப்படையாகி விட்டது - என்பதை இருட்டில் நடந்தது வெளிச்சத்திற்கு வந்துவிட்டது என்று குறிப்பிடுகிறோம். இருளை, காரிருள், கரிய இருள், கருமையான இருள் என்றுதான் எழுதுகிறோம்.

காறிருள், கறிய இருள், கறுமையான இருள் எனவும், கறிய நிறம், கறிய மேனி, நிலக்கறி, அடுப்புக்கறி எனவும் எழுதுவாரில்லை.


கரி - என்பதன் பகுதி கருமையாவதன்றிக் கறுமையாகாது. கரிய இருளில் - மறைவில் சட்டத்திற்குப் புறம்பாகப் பெறப்படும் பணம் கருப்புப் பணமாகாது கறுப்புப் பணமாதல் எங்ஙனம்?


÷வெண்மை - வெளுப்பு, வெண்டாமரை; செம்மை - சிவப்பு, செந்தாமரை, கருமை - கருப்பு, கருவிழி. இவற்றிற்கிடையில் கறுப்பு எங்கிருந்து எப்படி வந்தது?


""கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள
நிறத்துரு உணர்த்துதற்கும் உரிய என்ப''
(தொல். 855, 856)


என்னும் தொல்காப்பிய நூற்பாக்களுக்கு உரையாளர் தரும் விளக்கங்களும், சான்றுகளும் நிறைவாகவில்லை. கறுப்பு - வெகுளிப் பொருளாதற்கு இலக்கியச் சான்றுகள் உண்டு. கறுப்பு - நிறப் பெயராதற்கு இலக்கியச் சான்று ஏதுமில்லை.''


புலவர் சா.பன்னீர்செல்வத்தின் கருத்தையும் வாசகர்கள் பார்வைக்கு வைத்துவிட்டேன். இத்துடன் இந்த விவாதம் இங்கே முற்றுப்பெறுகிறது.

ஆங்காங்கே உள்ள இலக்கிய அமைப்புகளும், பள்ளி, கல்லூரிகளும் இனி இந்த சர்ச்சையை மேலெடுத்துச் சென்று ஒரு முடிவான முடிவை எட்டுவதுதான் தமிழுக்கு நன்மை பயக்கும்!                                                                                                     

தமிழ்மணி, இந்தவாரம், தினமணி, 27 - 10- 2013

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger