Home » » உலகை மாற்றிய புத்தகத்துக்கு 50 வயசு !

உலகை மாற்றிய புத்தகத்துக்கு 50 வயசு !கடந்த நூற்றாண்டில் மிகப் பெரிய தாக்கம் செலுத்திய 100 முக்கிய புத்தகங்களில், ஒரு சுற்றுச்சூழல் புத்தகத்துக்கும் இடம் உண்டு:

ரேச்சல் கார்சன் எழுதிய ‘மௌன வசந்தம்’ (Silent Spring). இந்தப் புத்தகம் வெளியானபோது, ‘அர்த்தமற்ற புத்தகம்’என்று விமர்சித்திருந்தது 
‘டைம்’பத்திரிகை. ஆனால், அந்த ‘டைம்’பத்திரிகையே பின்னாளில், ‘20-ம் நூற்றாண்டில் தாக்கம் செலுத்திய 100 முக்கிய ஆளுமைகள்’என்று வெளியிட்ட பட்டியலில் ரேச்சல் கார்சனுக்கு இடம் அளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது வரலாறு.

சுற்றுச்சூழல் ஆராய்ச்சிபற்றிப் பேசும்போது, ரேச்சல் கார்சனைப் பற்றி பேசுவதைத் தவிர்க்க முடியாது. அறிவியல் முறைப்படி சுற்றுச்சூழல் பிரச்சினைகளை எப்படிப் பகுப்பாய்வது என்பதைக் கற்றுத்தந்தவர் ரேச்சல் கார்சன்தான்.

சுற்றுச்சூழலுக்கு எதிரான அமைப்புகள் அதிகம் வெறுக்கும் புத்தகங்களில் ஒன்று ‘மௌன வசந்தம்’. அது வெளியான நாள் செப்டம்பர் 27, 1962. வெளியாகி ஒன்றரை ஆண்டுகளுக்குள் 10 லட்சம் பிரதிகள் விற்றன. புகழ்பெற்ற பிறகு, ‘நியூயார்க்கர்’வார இதழில் தொடராகவும் வெளியானது.

ரேச்சல் கார்சனின் தோழி ஓல்கா ஓவன்ஸ் ஹக்கின்ஸ், 1958-ல் ரேச்சலுக்கு எழுதியிருந்த கடிதத்தில் ‘எனது ஊரில் வசந்தம் மௌனித்து, நிலம் வாழ்விழந்துபோனது’குறித்து வருத்தத்துடன் தெரிவித்திருந்தார். இந்தப் பிரச்சினை தொடர்பாக நீண்ட காலமாகவே அக்கறை கொண்டிருந்த கார்சனின் கவனத்தை அது கூர்மையாக்கியது. 1952-ல் அரசுப் பணியில் இருந்து வெளியேறி, அடுத்த 10 ஆண்டு ஆராய்ச்சிக்குப் பிறகு ‘மௌன வசந்தம்’ நூலை அவர் வெளியிட்டார்.

இந்தப் புத்தகம்தான் ‘சூழலியல் தொகுதி’ (ecosystem) என்ற சொல்லை, அதாவது உலகிலுள்ள உயிரினங்கள் அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்றன என்பதை முதன்முதலில் எடுத்துச் சொன்ன புத்தகம். இப்படி ஒன்றையொன்று சார்ந்து வாழும் நமது உயிர்க்கோளத்தில் வேதிப்பொருள்கள் எப்படி நிலம், நீர், காற்று போன்றவற்றை மாசுபடுத்தி, பின்விளைவுகளை உருவாக்குகின்றன என்று ‘மௌன வசந்தம்’ ஆதாரங்களுடன் விளக்கியிருந்தது.

பூச்சிக்கொல்லிகள் மீதான வழக்கமான பரிசோதனைகள் கீழ்க்காணும் முக்கிய விஷயங்களைக் கவனத்தில் கொள்ளாததை அவர் சுட்டிக்காட்டி இருந்தார். ஒரு ஏரியில் 0.02 பி.பி.எம். (கன அளவில் 10 லட்சத்தில் ஒரு பங்கு) வேதி மாசுப்பொருள் கலந்தாலும், அது உணவுச் சங்கிலியின் ஒரு நிலைக்கு மேல் உள்ள ஒரு பறவையிடம் வந்து சேரும்போது, அதன் ரத்தத்தில் 1,600 பி.பி.எம். என்ற பூதாகர அளவுக்கு, அதாவது அப்பறவையைக் கொல்லும் அளவுக்குப் போய்விடுகிறது என்பதை ரேச்சல் விளக்கினார்.

 அவரது இந்தக் கண்டுபிடிப்புக்குப் பின்னர்தான் உயிர் உருப்பெருக்கம் (Biomagnification) என்ற வார்த்தையும் மனித உடல்நலனில் அது ஏற்படுத்தும் பெரும் ஆபத்தும் உணரப்பட்டன. இன்றைக்குப் பல்வேறு நச்சுப்பொருள்கள் இந்த வகையில்தான் நம்மைப் பாதிக்கின்றன என்றும் அவற்றால் புற்றுநோய் போன்ற நோய்கள் தாக்குகின்றன என்றும் தெரியவந்திருக்கிறது.

வேளாண்மைக்குப் பயன்படுத்தப்படும் பல்வேறு நச்சு வேதிப்பொருள்கள் ஒன்றுசேரும்போது, அவை தனித்தனியாக ஏற்படுத்தும் பாதிப்புகளைவிட, கூட்டாக ஏற்படுத்தும் பாதிப்பு பல மடங்கு அதிகம். அவை நீண்ட காலத்தில் செல்களைப் பாதித்து மரபணுப் பண்புகளைச் சிதைப்பதாகவோ புற்றுநோயை உருவாக்கக்கூடியதாகவோ அமையும்.


 அமெரிக்காவின் தேசியப் பறவையான மொட்டைக் கழுகுகள் இனப்பெருக்கம் செய்ய முடியாமல் அழிவதற்கான காரணம், வேளாண் பூச்சிக்கொல்லிகளே என்று அவர் விளக்கினார். மொட்டைக் கழுகுகளின் உடலில் சேர்ந்த நச்சால், அவற்றின் முட்டை ஓடு வலுவிழந்து, முட்டை உடைந்துபோவதே இதற்குக் காரணம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், பூச்சிக்கொல்லிகளைத் தெளிப்பதால் வேளாண் விளைச்சல் கூடுவதில்லை. மனிதர்களைப் போன்ற பெரிய உயிரினங்கள் தகவமைத்துக்கொள்வதற்கு லட்சக்கணக்கான ஆண்டுகளை எடுத்துக்கொள்ளும்போது, பூச்சிகளின் வாழ்க்கைச் சுழற்சி மிகக் குறுகியது. 


எனவே, பூச்சிகள் மிகக் குறைந்த காலத்திலேயே இந்த பூச்சிக்கொல்லிகளுக்கு ஏற்பத் தங்களைத் தகவமைத்துக்கொண்டு எதிர்ப்புச் சக்தியைப் பெற்று பெருகிவிடுகின்றன என்கிறார் கார்சன். மட்டுமில்லாமல், சம்பந்தப்பட்ட பூச்சியின் இயற்கை எதிரியையும் பூச்சிக்கொல்லி கொன்றுவிடுவதால், அந்தப் பூச்சி அடுத்த தலைமுறையில் மிக மோசமாக உருவெடுக்க வழிவகுக்கிறது. 


‘டி.டி.ட்டி.’ போன்ற பூச்சிக்கொல்லிகளுக்கு எதிராக அவர் அறிவியல் ஆதாரங்களுடன் முன்வைத்த வாதம், வேதிப்பொருள் தொழிலுக்கு எதிரானதாகக் கருதப்பட்டது. இதன் காரணமாக அந்தத் தொழிலைச் சார்ந்தவர்கள் ரேச்சலை கம்யூனிஸ்ட் என்றும், “பைத்தியக்காரத்தனமான வாதங்களை முன்வைக்கிறார் என்றும் தூற்றினார்கள்.

ஆனால், அடுத்த 10 ஆண்டுகளில், அதாவது 1972-ல், ‘டி.டி.ட்டி.’ பூச்சிக்கொல்லி அமெரிக்க அரசால் தடைசெய்யப்பட்டது. கார்சனின் புத்தகத்துக்குப் பின்னரே அமெரிக்கச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை (US EPA) தொழிற்சாலைகள், விவசாயத்துக்கு ஆதரவாகச் செயல்படாத வகையில் தனிப்பொறுப்பு கொண்ட அமைப்பாக உருவாக்கப்பட்டது. மிகத் தாமதமாக என்றாலும், 2004 ஸ்டாக்ஹோம் சாசனத்தின்படி, ஒட்டுமொத்த உலகிலும் வேளாண் பயன்பாட்டுக்கு ‘டி.டி.ட்டி.’ உள்பட பல்வேறு வேதிப்பொருள்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது. ஒரு பெண், ஒரு புத்தகம், எப்பேர்ப்பட்ட தலைகீழ் மாற்றம்!

இந்த இடத்தில், வரலாற்று நிகழ்வுகளின் தொடர்ச்சியையும் தொழில் நிறுவனங்கள் எப்படிக் காய்நகர்த்தித் தங்கள் லாபத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்கின்றன என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். கார்சனின் புத்தகம் அமெரிக்காவில் ஏகபோக வரவேற்பைப் பெற்ற அதே காலத்தில்தான், ‘பசுமைப் புரட்சியின் தந்தை’நார்மன் போர்லாக், இந்தியாவில் பசுமைப் புரட்சியை அறிமுகப்படுத்தினார்.

அதாவது, ‘நமது பாரம்பரிய விவசாய முறைகள் தேறாது’என்று முத்திரை குத்தி, வேதிப் பூச்சிக்கொல்லிகள் வலுக்கட்டாயமாக அறிமுகப்படுத்தப்பட்டன. நார்மன் போர்லாக்குக்கு 1970-ல் நோபல் அமைதிப் பரிசும் வழங்கப்பட்டது.

ரேச்சலின் ஆய்வுகள் மற்றொரு விஷயத்தை யும் நமக்கு வலியுறுத்துகின்றன. அவரது ஆராய்ச்சிகள் கண்மூடித்தனமாக அறிவியல் முன்னேற்றங்களையோ லாபத்தைப் பெருக்கு வதையோ மையமாகக் கொண்டிராமல், வளம்குன்றாத வளர்ச்சியை (Sustainable development) வலியுறுத்தின.

இயல்பிலேயே பெண் அனைத்தையும் மறுஉற்பத்தி செய்பவள். தனக்காக மட்டுமின்றி எதிர்காலத் தலைமுறைகளுக்காகச் சிந்தித்து, இயற்கையைச் சிதைக்காமல் வளம்குன்றாத வளர்ச்சியை வலியுறுத்துபவள்.

பாரம்பரியமாகப் பெண்ணிடம் இருந்துவரும் இந்தப் பண்புகளின் நீட்சியைத்தான் ரேச்சலின் ஆய்வுகளில் பார்க்க முடிகிறது.   
                               
தி இந்து-03-10-2013

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger