Home » » வலைத்தளமா? வக்கிர தளமா? - எஸ்.பால்ராஜ், பாளையங்கோட்டை.

வலைத்தளமா? வக்கிர தளமா? - எஸ்.பால்ராஜ், பாளையங்கோட்டை.




சமூக வலைத்தளங்களில் அதிகமாக உள்ள இந்தக் காலத்தில் இளைஞர்கிடையே மிகவும்  பிரசித்தி பெற்றது இந்த ஃபேஸ் புக் வலைதளம். பிரபலமானவர்கள் மக்களுக்கு தன்னுடைய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதுதான் இந்த வலைத்தளங்களின் நோக்கம் என்று முதலில் சொல்லப்பட்டது. அது ஓரளவு உண்மைதான். விஸ்வநாதன் ஆனந்தோ, செரினா வில்லியம்úஸா, அப்துல் கலாமோ இப்படி புகழ் பெற்றவர்கள் தங்கள் எண்ணங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதற்கு இது சரியான ஊடகமாக இருந்தது.

சமீப காலங்களில் இந்த வலைத்தளத்தில் ஒரு இளைஞனோ, பெண்ணோ இணைந்து விட்டால் அவர்களுக்கு அதோகதி என்று சொல்லும் அளவிற்கு நிலைமை மோசமாகி வருகிறது. இந்த வலைத்தளங்களில் பதிவு செய்து கொள்பவர்களில் பாதிக்குமேல் பொய்யான விலாசத்துடன், மாறுப்பட்ட புகைப்படங்களுடன் பதிவு செய்பவர்கள் என இந்த வலைத்தளங்களை நிர்வகிப்பவர்களே ஒப்புக் கொண்டுள்ளனர். உண்மையான பெயரையும் விலாசத்தையும் மறைப்பதற்கு என்ன காரணம் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனுக்கும் உள்ள வக்கிர எண்ணங்களுக்கு வடிகாலாக இந்த வலைத்தளங்கள் மாறுகின்றன.  அதில் எழுதும் நபர் யார் என்று தெரியாததால், எதையும் எழுதலாம் என்ற துணிச்சல் வந்துவிடுகிறது.  இங்கே தான் விபரீத விளையாட்டுகள் ஆரம்பமாகின்றன. தன்னுடைய புகைப்படத்தையே கொடுத்துவிட்டு, விவரங்கள் அனைத்தையும் மாற்றிக் கொடுத்துவிட்டு. "நான் அவனில்லை' என்று சொல்லலாம். இதனை மாற்றியும் செய்யலாம்.

கல்லூரியிலிருந்து சுற்றுலா செல்லும்போது எடுக்கும் புகைப்படங்களை வைத்து, ஒரு மாணவனும், மாணவியும் நெருக்கமாக இருப்பது போன்று காட்ட முடியும். இந்தப் புகைப்படங்களை வலைத்தளங்களில் ஏற்றுபவருக்கு  விளையாட்டாகவும், புகைப்படத்தில் இருப்பவர்களுக்கு வினையாகவும் முடியும். இதில் கொடுமை என்னவென்றால் அந்தப் புகைப்படத்தில் இருப்பவர், அதனை அந்த வலைத்தளத்திலிருந்து அகற்ற முடியாது. சட்டத்தின் உதவியைத்தான் நாடவேண்டும்.

இந்த வலைத்தளங்களில் நல்லதே நடக்கவில்லையா என்று கேள்வி எழலாம். நல்லது நடக்கிறது, நிறையவே நடக்கிறது. ஆனால், இதனைப் பயன்படுத்தும் அனைவரும் நல்ல நோக்கத்துடன் தான் பயன்படுத்துகிறார்களா என்பதுதான் தற்போதைய கேள்வி. ஒரு பாவமும் அறியாத சிலர் ஃபேஸ்புக்கால் அலைக்கழிக்கப்படுவது என்ன நியாயம்?

இதில் பெயரைப் பதிவு செய்து கொள்பவரிடம், ஏன் இந்த வலைத்தளத்தில் இணைகிறாய் என்று கேட்டால், அனைவரும் சொல்லும் ஒரே பதில், நிறைய பேரிடம் மனம்விட்டுப் பேசலாம் என்பது. இது ஏற்றுக் கொள்ள முடியாத பதில். முதலில் நாம் நம்மைச் சுற்றி உள்ளவர்களிடம் நன்றாகப் பேசுகிறோமா என்று நினைத்துப் பார்க்க வேண்டும். மற்றொன்று, நெருங்கிய நண்பர்களிடமும், உறவினர்களிடமும் மட்டும் தான் மனம்விட்டுப் பேச வேண்டும். முகம் தெரியாத ஒருவரிடம் மனம்விட்டுப் பேசக்கூடாது. பேசினால் வரப்போகும் விளைவுகள் நமக்குத் தெரியாது. பேசிவிட்டாலே பிரச்னை ஆரம்பித்து விடும்.

சமீபத்தில் 13 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இந்த வலைத்தளங்களைப் பார்க்க வேண்டும் என்று ஒரு நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. அதற்கு எதிர்த்தரப்பில் வாதாடியவர், தங்கள் கணினி மையத்தில் "13 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்த வலைத்தளங்களைப் பார்க்கக் கூடாது' என பெரிய அறிவிப்பு வைக்கப்பட்டிருப்பதாக வாதாடினார். இதுதான் தீர்வா? சமீபத்தில் சைனாவில் அந்த நாட்டின் வரைப்படத்தைத் தவறாகக் காட்டியதற்காகச் சில வலைத்தளங்கள் அந்த நாடு முழுவதும் தடை செய்யப்பட்டன. ஆக, அறிவியல் பூர்வமாக நினைத்தால் நாடு முழுவதும் சில தேவைப்படாத விஷயங்களைத் தடை செய்யலாம். ஆட்சியாளர்கள் நினைத்தால் தான் முடியும்.

வருங்காலத்தில் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட இருக்கும் நிலையில் பொதுவாக வலைத்தளத்தைப் பயன்படுத்தவே, அதனைப் பயன்படுத்தபோகும் பயனாளி தன்னை யார் என்று நிரூபித்தால் மட்டுமே குறிப்பிட்ட வலைத்தளங்களைப் பயன்படுத்த முடியும் என விதிமுறை கொண்டு வர முயற்சி செய்யலாம்.

பார்க்காமலே காதல் என்பது திரைப்படம் எடுப்பதற்கு நல்ல கருத்துதான். ஆனால் நிஜ வாழ்க்கையில் அது சாத்தியமுமில்லை. அப்படி அது சாத்தியமானால் அதில் ஒருவர் ஏமாற்றப்படுவது நிச்சயம். வலைத்தளம் வழியாகப் பேசுவது, பழகுவது, அழுவது, சிரிப்பது என்பதெல்லாம் ஒரு மாய உலகம். ஒரு ஆணும், பெண்ணும் வலைத்தளம் வழியாக தன்னுடைய எண்ணங்கள்  என, பாதி உண்மையும், பாதி பொய்யும் கலந்து உரையாடுகிறார்கள். இதில் இளம் வயதினருக்கு நிறைய ஆர்வம் இருக்கும். இந்த மாய வலையில் விழும் இளைஞர்களை மீட்டெடுப்பது அவ்வளவு சுலபம் கிடையாது. அரசே முன்வந்து இதற்கான சட்ட திட்டங்களை வடிவமைப்பது, தற்போதைய அவசரத் தேவையாகும்.                                                   
தினமணி - 28-10-2013                                         




0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger