Home » » மருத்துவம் என்பது தொழிலல்ல, சேவை ! மருத்துவத்துறையில் முன்மாதிரி இழப்பீடு!

மருத்துவம் என்பது தொழிலல்ல, சேவை ! மருத்துவத்துறையில் முன்மாதிரி இழப்பீடு!

தலையங்கம் , 28 - 10 -2013

1998-இல் அமெரிக்க வாழ் இந்தியரான மருத்துவர் குனால் சாஹா தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் அவருக்கு இழப்பீடாக ரூ.5.96 கோடி அளிக்கத் தீர்ப்பளித்திருக்கிறது. இதுவரை மருத்துவத்துறை தொடர்பான வழக்கில் அளிக்கப்பட்டிருக்கும் மிக அதிகமான இழப்பீடு இதுதான் என்பது மட்டுமல்ல, இந்தத் தீர்ப்பின் பயனாய் வருங்காலத்தில் பாதிக்கப்பட்ட பல நோயாளிகள் ஓரளவுக்கு நியாயம் பெற ஏதுவாகியிருக்கிறது என்பதும் இந்தத் தீர்ப்பின் சிறப்பு.

அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தைச் சேர்ந்த இந்தியரான மருத்துவர் குனால் சாஹா தனது மனைவி அனுராதாவை சளி, இருமல், காய்ச்சலுக்காக கொல்கத்தாவிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தார். சாதாரண காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அனுராதா, முறையாக மருத்துவம் அளிக்கப்படாததாலும், மருத்துவமனை சரியாக  பராமரிக்கப்படாததாலும் டாக்சிக் எபிடெர்மல் நெக்ரோலிசிசால் பாதிக்கப்பட்டு, நிலைமை விபரீதமானதால் மும்பையில் இன்னொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கே மரணமடைந்தார்.

முழுக்க முழுக்க  கவனக் குறைவால் மட்டுமே ஏற்பட்ட இந்த விபரீதத்தை, நம்மைப் போன்றவர்கள் தலைவிதி என்று ஏற்றுக் கொண்டிருப்போம். பல தனியார் மருத்துவமனைகள் விவரம் தெரிவிக்காமலேயே ஒரு வாரம் 10 நாள்கள் என்று அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளியை வைத்திருந்து, சில லட்சம் ரூபாய்கள் கட்டணமாக வசூலித்த பிறகு சடலத்தை ஒப்படைப்பார்கள்.
சாதாரண காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அனுராதாவுக்குத் தவறான பரிசோதனையாலும், சிகிச்சையாலும், அளவுக்கு அதிகமாக ஸ்டெராய்ட் கொடுக்கப்பட்டதாலும்தான் நிலைமை விபரீதமாகியது என்பதை மருத்துவப் பரிசோதனைகள் நிரூபித்தன. மருத்துவரின் கவனக் குறைவு என்பது மன்னிக்க முடியாத குற்றம் என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் குனால் சாஹா. கடந்த 15  ஆண்டுகளாக அவர் நடத்திய போராட்டத்திற்கு உச்சநீதிமன்றம் நல்லதொரு தீர்ப்பை வழங்கி இருக்கிறது.

அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் தவறான மருந்து தரப்பட்டால் கூட நீதிமன்றத்திற்குப் போய்விடுவார்கள். அமெரிக்காவில் ஒவ்வொரு 43 நிமிடங்களுக்கும் ஒரு கவனக் குறைவு இழப்பீடு அளிக்கப்படுகிறது. தவறான மருத்துவம் மட்டுமல்ல, தவறான மருத்துவ முறைகளும் அனுமதிக்கப்படுவதில்லை. ஏதாவது ஒரு மருந்து நிறுவனத்தை தனது சொந்த ஆதாயத்திற்காக ஒரு மருத்துவர் ஆதரிப்பதும், அந்த நிறுவனத்தின் "டானிக்' அல்லது வைட்டமின் மாத்திரைகளைத் தேவைப்படாமலே நோயாளிகளுக்குப் பரிந்துரைப்பதும்கூட  தவறான மருத்துவ முறையாகக் கருதப்பட்டு, கண்டனத்திற்கும், தண்டனைக்கும் உள்ளாவார். நமது நாட்டில்தான் எந்தவித கண்காணிப்போ, கேள்விகேட்போ, இழப்பீடு கோருவதோ இல்லாத நிலைமை.

பஞ்சாப் மாநிலத்திற்கு எதிரான ஜாக்சன் மாத்யூஸின் வழக்கிலும் உச்சநீதிமன்றம் குனால் சாஹா வழக்கைப் போலவே மருத்துவர்களின் கவனக் குறைவை வன்மையாகக் கண்டித்துத் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

1986 ஆம் ஆண்டில் இயற்றபட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்திற்குப் பிறகு ஒரு சில வழக்குகளில் நோயாளிகளுக்கு சாதகமான தீர்ப்புகள் இந்தியாவில் வழங்கப்பட்டாலும்கூட, பொதுவாக நீதிமன்றங்கள் மருத்துவர்கள், மருத்துவமனைகள் மீது தொடரப்பட்ட வழக்குகளில் கடுமையான தண்டனையோ, இழப்பீடுகளையோ வழங்கத் தயங்குகின்றன.


குனால் சாஹா வழக்கில் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம், அவருக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டின்  பெரும்பகுதியை, மருத்துவமனை  நிர்வாகத்திடம் இருந்து பெறவேண்டும் என்று  உத்தரவிட்டிருப்பதுதான். நல்ல தேர்ச்சியும் கடமையுணர்வும் மிக்க மருத்துவர்களைத் தேர்வு செய்து பணியில் அமர்த்த வேண்டிய கடமையும், பொறுப்பும் மருத்துவமனைக்கு உண்டு என்பதை உச்சநீதிமன்றம் இதன் மூலம் வலியுறுத்தி இருக்கிறது.

காளான்களாய் முளைத்துவரும் தனியார் மருத்துவக் கல்லூரிகளால் மருத்துவர்களின் தரம் குறைந்து வரும் வேளையில், மருத்துவமனைகள் திறமைசாலிகளைத் தேர்ந்தெடுத்து நியமிக்க இந்தத் தீர்ப்பு காரணமாக அமையும்.


. சாமானியனுக்கு  தரமான மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதிப்படுத்துவது அரசின் கடமை. தனியார் மருத்துவமனையோ, அரசு மருத்துவமனையோ, முறையான சிகிச்சை தராவிட்டால் சட்டத்திற்கு முன் நிறுத்தப்படுவோம் என்ற அச்சம் மருத்துவர்களுக்கும், மருத்துவமனை ஊழியர்களுக்கும் ஏற்பட்டாக வேண்டும். அதற்கு உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புஉதவும்.

தினமணி - 28 - 10 - 2013 .                                   

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger