Home » » பிளாக்கர் Blogger Follower widget இப்பொழுது தமிழிலும்!

பிளாக்கர் Blogger Follower widget இப்பொழுது தமிழிலும்!

பிளாக்கர் Blogger Follower widget இப்பொழுது தமிழிலும்!


நான் பார்த்த வரையில், தொண்ணூறு விழுக்காட்டுக்கும் மேற்பட்ட பிளாகர் வலைப்பூக்கள் ஆங்கிலத்தில்தான் இயங்குகின்றன. அதாவது, தளத்தில் எல்லாமே தமிழிலேயே இருந்தாலும் தளத்தின் மொழி அமைப்பு மட்டும் ‘ஆங்கிலம்’ என வைக்கப்பட்டிருக்கும். பதிவு எழுதப்பட்ட நாள், கருத்துகளின் எண்ணிக்கை ஆகியவை ஆங்கிலத்தில் இருப்பதை வைத்து இதைக் கண்டுபிடிக்கலாம்.
தமிழில் எழுத வேண்டும் என விரும்பி முன்வந்திருக்கும் நம் பதிவுலகத் தோழர்கள் தங்கள் வலைப்பூ மொழியை மட்டும் ஆங்கிலத்தில் வைத்திருக்க முதற்பெரும் காரணம் பிளாகரின் ‘பின்பற்றுபவர்கள்’ செயலி (Blogger Follower widget).

சமூக வலைத்தளங்கள் வழியாகவும், திரட்டிகள் வாயிலாகவும் எத்தனை பேர் நம் வலைப்பூவைப் பின்தொடர்ந்தாலும் வலைப்பூவைப் பின்தொடர்வதற்கெனவே பிளாகர் வழங்கும் இந்தச் செயலி மூலம் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கைதான் ஒரு வலைப்பூவின் அதிகாரப்பூர்வமான நேயர் எண்ணிக்கையாகக் கருதப்படுகிறது இன்றளவும்.
இதனால் இது பிளாகர் வலைப்பூக்களின் ஒரு மதிப்புக்குரிய அடையாளமாகிவிட்டது. மேலும், குறிப்பிட்ட வலைப்பூவை நண்பர்களுக்குப் பரிந்துரைத்தல், தான் தொடர்ந்து படிக்கும் மற்ற வலைப்பூக்களைப் பட்டியலிட்டுக் காட்ட இயலுதல் என மற்ற பின்தொடர்ச் செயலிகளில் இல்லாத சில வசதிகளும் இதில் இருக்கின்றன. இப்படிப் பல வகைகளிலும் முதன்மை பெறுகிற, பிளாகர் வலைப்பூக்களின் அதிகாரப்பூர்வப் பின்தொடர்ச் செயலியான இதை நம் வலைப்பூவின் மொழி அமைப்பை ஆங்கிலத்தில் வைத்திருந்தால்தான் வலைப்பூவில் இணைக்க முடியும் என்ற நிலை இருந்ததால் தான் மிகப் பெரும்பான்மையானோர் தங்கள் வலைப்பூ மொழியை ஆங்கிலத்தில் வைத்திருக்கக் காரணம்.

கூகுள் நிறுவனம்  பதிவர்களுக்காக கூகுள்+ Followers Gadget கொண்டு வந்ததால் ஏற்கனவே இருந்த Blogger Follower widget-ஐ நீக்கிவிட்டது. நீங்கள் ஏற்கனவே ப்ளாக்கில் வைத்திருந்தால் அது செயல்படும். ஆனால் அதை நீக்கிவிட்டால் மீண்டும் வைக்க முடியாது. அதேபோல புது தளங்களிலும் அந்த widget-ஐ வைக்க முடியாது.

ஆனால் இதற்கு மாற்றாக கூகுள் தரும் Google Friend Connect widget தமிழிலும் கிடைக்கிறது! அண்மையில், ஓரிரு பிளாகர் வலைப்பூக்களில் இந்தச் செயலி தமிழில் காட்சியளித்ததைக் கண்டு வியந்தேன். பிளாகருக்குள் தேடிப் பார்த்தேன். பெருவியப்புக்குரிய வகையில் கிடைத்தே விட்டது! 
இதோ இனி, எப்படி நம் வலைப்பூவில் இந்தச் செயலியைத் தமிழில் நிறுவலாம் எனப் பார்க்கலாம். [பெரும்பாலானோர், பிளாகரை ஆங்கிலத்தில்தான் பயன்படுத்துகிறார்கள் . ஆனால் அதற்காக, அனைவருமே பிளாகர் உதவிக் குறிப்புகளில் பொத்தான்களின் பெயர்களை ஆங்கிலத்தில் மட்டுமே குறிப்பிடுவது, பிளாகரைத் தமிழில் பயன்படுத்தும் சிலரையும் ஊக்கமிழக்கச் செய்யும் என்பதால், கீழே வரும் வழிமுறைகள் பிளாகரைத் தமிழில் பயன்படுத்துவோருக்கு ஏற்ற வகையில் முழுக்கத் தமிழில் எழுதப்பட்டுள்ளன. 
அதே நேரம், பிளாகர் பயனர்கள் அனைவரின் வசதிக்காக அடைப்புக்குறிக்குள் ஆங்கிலப் பதங்களும் தரப்பட்டுள்ளன]. 
௧] முதலில், உங்கள் பிளாகர் கணக்குக்குள் நுழைந்து உங்கள் வலைப்பூவின் மொழியைத் ‘தமிழ்’ என மாற்றிக்கொள்ளுங்கள். (எப்படி எனத் தெரியாவிட்டால் சொடுக்குங்கள் இங்கே). 
௨] பிளாகரின் ‘தளவமைப்பு’ (Layout) பிரிவுக்குள் செல்லுங்கள்.

௩] வலைப்பூவின் எந்தப் பகுதியில் ‘பின்பற்றுபவர்கள்’ செயலியை வைக்க விரும்புகிறீர்களோ அந்தப் பகுதியில் இருக்கும் ‘கேஜெட்டைச் சேர்’ (Add Gadget) பொத்தானை அழுத்துங்கள். 
௪] இப்பொழுது திறந்திருக்கும் சாளரத்துக்குள் ‘மேலும் கேஜெட்கள்’ (More Gadgets) எனும் பிரிவைத் திறவுங்கள். 
௫] இப்பொழுது, அந்தப் பக்கத்தின் மேற்புறத்தில் ஒரு தேடல் பெட்டி வந்திருக்கிறதா? அதில் google friend connect எனத் தட்டெழுதித் தேடுங்கள். 
௬] இப்பொழுது மூன்று செயலிகள் உங்களுக்குக் காட்டப்படும். அவற்றுள் ‘உறுப்பினர்கள்’ (Members) எனும் செயலியைச் சொடுக்குங்கள். 
௭] இப்பொழுது செயலியின் தோற்ற விவரங்கள் காட்டப்படும். உயரத்தையோ, செயலியின் பெயரையோ மாற்ற விரும்பினால் மாற்றிக் கொண்டு ‘சேமி’ (Save) பொத்தானை அழுத்துங்கள். 
அவ்வளவுதான். இப்பொழுது உங்கள் வலைப்பூவுக்குச் சென்று பாருங்கள்! உங்கள் பிளாகர் ‘பின்பற்றுபவர்கள்’ செயலி தாய்மொழியாம் செந்தமிழில் அழகாக மிளிரும்! 
தமிழில் மட்டுமில்லை, நீங்கள் உங்கள் வலைப்பூவை எந்த மொழியில் வைத்தாலும் அந்த மொழியில் இனி உங்கள் ‘பின்பற்றுபவர்கள்’ செயலி காட்சி தரும். இது மொத்தம் 47 மொழிகளில் மாறக்கூடியது என்று பதிவர் மயூரேசன் அவர்கள் எப்பொழுதோ எழுதி வைத்திருக்கிறார். 
நம் வலைப்பூக்கள் இனி முழுக்க முழுக்க நம் தாய்மொழியிலேயே மலரட்டும்!

எச்சரிக்கை! கூகுள் ஆட்சென்சு மூலமோ இன்ன பிற விளம்பரச் சேவைகள் மூலமோ நீங்கள் உங்கள் வலைப்பூவில் விளம்பரம் வெளியிடுகிறீர்கள் எனில், வலைப்பூவின் மொழியை ஆங்கிலத்திலிருந்து வேறு மொழிக்கு மாற்றுவது சிக்கலை ஏற்படுத்தலாம்!

*********************************************************************************

படைப்பு: இ.பு.ஞானப்பிரகாசன்

மின்னஞ்சல் முகவரி: e.bhu.gnaanapragaasan@gmail.com

வலைப்பூ: http://agasivapputhamizh.blogspot.com.


ஒரு சிறு அறிமுகம்: இ.பு.ஞானப்பிரகாசன் - பதிவுலகுக்குப் புதியவன். ‘எழுத்து எனும் போர்க்கருவி ஏந்திய ஒரு தமிழ்க்குருவி’ எனும் முழக்கத்தோடு இணைய உலகில் புகுந்திருக்கும் தீவிரத் தமிழ்ப் பற்றாளன்! அகச் சிவப்புத் தமிழ் – கடந்த ஏப்பிரல் முதல் இயங்கி வரும் வலைப்பூ. ‘அகத்தின் சிவப்பு இங்கே தமிழில் தெரியும்!’ எனும் முழக்கத்துடன் அரசியல், இலக்கியம், சமூகம் பற்றிய தனியொருவரின் எழுத்துக்களுக்காகத் தொடங்கப்பட்டுள்ள இத்தளத்தில் அவ்வப்பொழுது தொழில்நுட்பப் பதிவுகளும் பார்க்கலாம்.

*********************************************************************************

உங்கள் தொழில்நுட்ப பதிவுகள் ப்ளாக்கர் நண்பன் தளத்தில் இடம்பெற basith27@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.
என் யூட்யூப் சேனலில் Subscribe செய்துக் கொள்ள:




 

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger