Home » » பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள்

பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள்

சென்னையில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்கள் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் ஆபத்தான நிலையில் பணிபுரிந்து வருகின்றனர்.

சென்னை மாநகராட்சியில் சேரும் குப்பை மற்றும் கழிவுகளை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் அகற்றி வருகிறார்கள். சென்னையில் நாள்தோறும் சேரும் சுமார் 5,500 டன் குப்பைகளை அகற்ற 16,000 துப்புரவு பணியாளர்கள் உள்ளனர். இவர்களில் 9,000 பேர் மட்டுமே மாநகராட்சி நிரந்தர பணியாளர்கள். மற்றவர்கள் அனைவரும் தனியார் நிறுவனங்கள் மூலமும் ஒப்பந்த அடிப்படையிலும் பணிபுரிந்து வருகின்றனர்.

இப்போது குப்பைகளைப் பிரித்தெடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு குறைவாக உள்ளதால், இந்தப் பணியாளர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். நாள்தோறும் குப்பைகளை வெறும் கைகளால் அப்புறப்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள இவர்கள், பல்வேறு தோல் தொடர்பான நோய்களுக்கும், தொண்டை சம்பந்தமான நோய்களுக்கும் இலக்காகும் சூழல் நிலவி வருகிறது.

நோய்க் கிருமிகள் தாக்கும் ஆபத்தான நிலையில் பணிபுரிந்து வரும் இவர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் பல ஆண்டுகளாக முகமூடி, கையுறை, காலணிகள் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை வழங்கவில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அளிக்கப்பட்ட காலணிகளும் தரமானதாக இல்லை என்ற புகார் எழுகிறது.

இது குறித்து மாநகராட்சி துப்புரவுப் பணியாளர் சுந்தரம் என்பவர் கூறியது: துப்புரவுப் பணியாளர்களான எங்களுக்கு எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் பொதுநலன் வழக்கு ஒன்றில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினையடுத்து, சில ஆண்டுகளுக்கு முன்பு முகமூடி, கையுறை ஆகியவற்றை வழங்கினார்கள்.

ஆனால் தரமான ஷூக்கள் வழங்கவில்லை. தரக்குறைவான பொருள்களை வழங்கினார்கள். அவை சீக்கிரமாகவே கிழிந்து விட்டன. அதன்பிறகு கடந்த 5 ஆண்டுகளாக முகமூடி, கையுறை ஆகியவற்றை கொடுக்கவில்லை.

வெல்டிங் வைப்பவர்கள் பயன்படுத்தும் கையுறையை துப்புரவுப் பணியாளர்களுக்கு வழங்குகிறார்கள். அவற்றை அணிந்துக் கொண்டு பணி செய்ய முடியவில்லை. சோப்பு, தேங்காய் எண்ணெய் ஆகியவை ஒவ்வொரு மாதமும் துப்புரவுப் பணியாளர்களுக்கு வழங்கவேண்டும். அதுவும் சரிவர கிடைப்பதில்லை.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட மழைக் கோட்டுகள் ஒரே நாளில் கிழிந்து விட்டன. இப்போது கொடுக்கப்பட்ட கோட்டுகள் பரவாயில்லை.

மேலும் துப்புரவுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மருத்துவ காப்பீட்டு அட்டைகளை அறுவை சிகிச்சைக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். சிறிய நோய்கள் தாக்கினால் இலவசமாகச் சிகிச்சை பெற வசதியாக மாற்று ஏற்பாடு செய்துத் தரவேண்டும்.

பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள்
இப்போது மருத்துவக் கழிவுகளை வெறும் கைகளால் அகற்றும்போது, பயன்படுத்தப்பட்ட ஊசி குத்துவதற்கான வாய்ப்புள்ளது. இதனால் பலர் நோய் பாதிப்புக்குள்ளாகின்றனர். மேலும் பலர் தோல் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தவிர்க்க பாதுகாப்பு உபகரணங்களை அதிகாரிகளிடம் கேட்டால், உபகரணங்கள் கொடுத்தாலும் அதை யாரும் பயன்படுத்துவதில்லை என்று கூறுகிறார்கள். துப்புரவுப் பணியாளர்கள் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் உபகரணங்கள் அளித்தால், கட்டாயம் அவற்றை பயன்படுத்துவோம். அதே வேளையில் அவை தரமானதாகவும் இருக்க வேண்டும் என்றார் அவர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியது: துப்புரவுப் பணியாளர்களுக்கு இதற்கு முன்னர் 4.5 லட்சம் முகமூடிகள் வழங்கப்பட்டன. ஆனால் அவற்றை யாரும் சரிவர பயன்படுத்தவில்லை. இந்த நிலையில் மேலும் 1 லட்சம் முகமூடிகள் கொள்முதல் செய்து பணியாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.

துப்புரவுப் பணிகளுக்கு வருபவர்கள் பலர் கல்வியறிவு இல்லாதவர்கள் என்பதால், பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு அவர்களிடம் இல்லை. அவர்களுக்கு இதுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என்பதே பெரும்பாலானோர் கோரிக்கையாக உள்ளது.                                                   

தினமணி - 21 - 10- 2013

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger