Home » » சுவாரச்யமான வயசாளிகள் -கி. ராஜநாராயணன்

சுவாரச்யமான வயசாளிகள் -கி. ராஜநாராயணன்

சின்னப் பையனாக நான் இருந்தபோது எங்கள் ஊரில் இருந்த வயசாளிகளிடம், தாத்தா, உங்கள் வயசென்ன? என்று கேட்டால் சிரிப்பார்கள்.

சுத்தக் கோட்டிக்காரனா இருப்பாம் போலிருக்கே என்பது போல இருக்கும் அந்தச் சிரிப்பு.

முதலில், அவர்கள் வயசு பற்றி அவர்களுக்கே தெரியாது. அல்லது கவனமில்லை.
என்ன வயசா இருந்தா இவனுக்கு என்னெ, நமக்குப் பொண்ணு தரப் போறானா, என்றும் கேட்பார்கள்.
கேக்கிறவன் சின்னப் பையனா இருந்தாலும் பாக்குறதுக்கு அந்தஸ்தாகத் தெரிந்தால், சில சமயம் பதில் சொல்வார்கள்.
முதலில் அவர்களுக்கு, விசாரிக்கிறவன் யார் என்று தெரியணும்.
சில சமயம், யார் என்றும் தெரிய வேண்டியதில்லை; பேச்சிக்கால் கிடைத்தால் சரி என்று தொடங்கி விடுகிறதும் உண்டு.
வயசா… ஹா ஹா ஹ என்று சிரித்துவிட்டு, இதெயெல்லாம் யாரு நினைவுல வச்சிக்கிக்கிறாஹெ. வள்ளுவனெக் கூப்ட்டு, குறிப்பைத் தந்தா கூட்டிக் கழிச்சி, இத்தனை வருசம் மாசம் எல்லாத்தையும் சொல்லிப் போடுவாம் என்று சொல்லி திரும்பவும் அதேபடிக்கு ஒரு சிரிப்பும் வரும்.
ரொம்பவும் நெருக்கிப் பிடித்தால் ஒங்க பாட்டனார் நாணப்ப நாயக்கரைவிட நானு ரெண்டு வயசு மூத்தவம் என்பார். அவருடைய தோரணை, நான் எதுலெயும் குறைந்தவன் இல்லை என்பது போலிருக்கும்.
நாம் பொடிப் போடுகிறவனாக இருந்தால், அந்தப் பட்டையை இப்படித் தள்ளு என்பார்கள். கையை விரித்தால், சிம்ட்டாப் பொடிகூட இல்லாதவனோட என்ன பேச்சி வேண்டிக் கிடக்கு? என்று பேச்சும் கிடைக்கும் நமக்கு. (சிம்ட்டா: சிட்டிகை).
வயசைக் கேட்பவர்களுக்கு, பரீட்சையும் வைப்பார்கள். என்ன வயசிருக்கும் சொல்லு?
அறுபது வயசைக் குறைத்து, அம்பது இருக்குமா என்றால் மகிந்து போவார்கள். அவர்களே தங்கள் வயசைக் கூட்டிச் சொல்லி அசர வைக்கும் தாத்தாக்களும் உண்டு.
எங்கள் வட்டகையில் ஒரு தாத்தா இருந்தார். அசலூர் தாத்தாக்கள் வந்தால், கொஞ்சம் பேச்சுக் கொடுத்த பிறகு இப்பொ என்ன வயசு உனக்கு என்று கேட்பார். பதிலைக் கேட்டதும் ஹொ! நீ என்னெவிட ரெண்டு வயசு சின்னப் பையந்தானா என்று சொல்லி மகிழ்வார்!
இந்தக் கிரித்திரியப் பேச்சைக் கேட்கும் எங்கள் பக்கத்துக்காரர்கள் ஓரு கோணல் சிரிப்புச் சிரித்துக் கொள்வார்கள்.
பற்கள் உதிர்ந்து போன வயசான வசதியுள்ள தாத்தாக்கள் வெற்றிலையை இடித்துப்போட என்று கையடக்க இரும்பு உரல், அதுக்குத் தக்கன உளி உலக்கை வைத்துக் கொண்டிருப்பார்கள். ராத்திரியில் வேளைகெட்ட வேளைகளிலெல்லாம் பாக்கு வெற்றிலை இடிக்கும் ஓசை கேட்கும் (இப்பொ அந்தச் சத்தம் அனேகமாய்க் குறைந்தே போய்விட்டது).
மங்கலப் பொருள்களில் தலையாய ஒன்றான வெற்றிலையின் பயன்பாடு குறைந்தாலும் அதன் மகிமை அப்படியேதான் இருக்கிறது. வரும் விருந்தினருக்கு வெற்றிலை தந்து உபசரிக்கிறது, சண்டைக்காரர்களைச் சமாதானப் படுத்தும்போது வெற்றிலை மாற்றிக் கொள்ளச் சொல்லுதல் (நாள்ப்பட்ட ஒரு சண்டையை இல்லாமல் செய்து வெற்றி கொள்ளும் ஒரு இலையை வெற்றிலை என்று சொல்லாமல் வேற எப்படிச் சொல்றது?), திருமண நிச்சயதார்த்தம், வெற்றிலைத்தட்டு மாற்றிக் கொள்கிறது, பிரியமானவர்கள் தந்து வெற்றிலை போட்டால் மிகச் சிகப்பாகப் பிடிக்கும். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
அந்தக் காலத்தில் தளிர் வெற்றிலையையே தின்னும் ஒரு நிலச்சுவானுக்கு அழுகிய வெற்றிலை திங்கும் அய்யா என்று ஒரு பட்டப்பெயர் எப்படி வந்தது என்று இந்தச் சந்தர்ப்பத்தில் சொல்லாமல் விட்டால் எப்படி?
தினோமும் சின்ன கவுளிக்கு ஒரு கவுளி தளிர் வெற்றிலை தின்னும் அவருக்கு (இப்போது நம்ம வீடுகளில் கொண்டு வந்து தினத்தாள்- & நியூஸ் பேப்பர் – போடுகிற மாதிரி) கொடிக்காலிலிருந்து ஒரு ஆள் வந்து அந்த வெற்றிலைக் கட்டை அவருடைய வீட்டுத் தலைவாசல் மாடாக்குழியில் வைத்துவிட்டுப் போய்விடுவான்.
இந்தத் தளிர் வெற்றிலை கருப்பு வெற்றிலையைப் போல் கிடை பொறுக்காது. சீக்கிரமாய் அழுகிவிடும். வெற்றிலைச் செல்லத்திலிருந்து பதனமாக- & புதூ ரூபாய் நோட்டுகளில் ஒன்றை எடுப்பது போல- எடுத்து தொடை வேட்டியில் ஈரத்தைத் துடைக்கும் போதுதான் இலையின் சேதாரம் – அழுகல்- தெரியும். அந்தப் பகுதியைப் பிய்த்துவிட்டு வேட்டியில் ஒற்றி எடுத்துவிட்டுத்தான் சுண்ணாம்பு தடவ வேணும்.
வெற்றிலைக் கட்டு வந்தவுடன், கை பார்த்து அழுகல் இலைகளை நீக்கி வைத்துவிட்டால், வேளை தவறாமல் அழுகல் இல்லாத அருமையான வெற்றிலை போடலாம்தான். ஒரு சிறிய மனச் சோம்பலினால் வாழ்நாள் பூராவும் அழுகிய வெற்றிலையையே போட வேண்டியது ஏற்பட்டுவிட்டது. பாவம்தான் இந்தச் சுவான் (நிலச்சுவான்).
இன்னொரு வெற்றிலைத் தாத்தா உண்டு. அவர் கருப்பு வெத்திலைப் பிரியர். இந்தப் புகையிலை போடுகிறவர்கள் பெரும்பாலும் கருப்பு வெற்றிலைதான் வேணும் என்பார்கள். காரணம், போடுகிற புகையிலைக்கு ஆசுவாக நிக்கணுமாம். வெள்ளை வெற்றிலை என்றால் தண்ணீராய்க் கரைந்து விடுமே என்பார்கள்.
சாப்பிட்டவுடன் ஒரு வெற்றிலை மெல்லுவது என்பதுதான் ஏற்பட்டது. அதுவும் திண்ணமான சாப்பாட்டை முடித்ததும் நாக்கே-  வெட்கத்தை விட்டு – கேட்டுவிடும்; ஒரு வெத்திலை இருந்தாத் தேவலையே என்று.
வெறும் வாயை மெல்லுகிற தாத்தாவே கேட்பார்: வாயி நம நமங்கு, ஒரு வெத்திலை போட்டா நல்லா இருக்கும்.
இந்தக் கரும் வெத்திலைத் தாத்தா களிப்பாக்கைத் தூள் பண்ணி ஒரு சிறிய டப்பா நிறைய வைத்துக் கொள்வார். அவருக்கு இந்த லொட்டு லொட்டு என்று வெத்திலை உரல் சத்தம் பிடிக்காது. டப்பாவைத் திறந்து உள்ளங்கையில் அளவாகத் தட்டி வாயில் இட்டுக் கொண்டு, நாலு வெற்றிலைகளை எடுத்து அவற்றின் முதுகில் சுண்ணாம்பு தடவி, நீட்டு வசத்தில் மடக்கி, கோழிக்குஞ்சின் கழுத்தைப் பிடித்துத் திருகுவது போலத் திருகி வாயில் அதக்கிக் கொண்டு தொடர்பு விட்டுப் போகாமல் வெள்ளைப் புகையிலையையும் அதேபடிக்கு முறுக்கி ஒடித்து வாயில் இட்டு முத்தாய்ப்புக் கொடுத்து முடித்துவிட்டு, கித்தாய்ப்பாக ஒரு பார்வை பார்ப்பார் இந்த உலகத்தை.
இந்தத் தாத்தாக்களின் அரசாங்கம் இப்போதெல்லாம் அரசியலில்தான் ஓங்கிப் பறந்து கொண்டிருக்கிறது; கிராமப்புறங்களில் ஒடுங்கிவிட்டது என்றுதான் சொல்ல வேணும். உள்க் கிராமங்களில் தள்ளிப் போனால் இப்பவும் உடல் ஒடுங்கிப் போன, படிப்பாளி அல்லாத சுயம்பான தாத்தாக்களிடம் பேசி அளவளாவுவது என்பது ஒரு ஆனந்தமே.
அவர்கள் ஒரு நிகழ்ச்சியை ஞாபகப்படுத்த, நினைவுக்குக் கொண்டுவர சொல்லும் விசயங்கள், நமக்கு அப்படியா! என்று இருக்கும்.
அப்பொதான் முதல் முதலா இந்த ரூபா நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தது,
அப்பொதான் ரயில் முதல் முதலா வந்திருந்தது, அது சிவகாசிக் கொள்ளை நடந்த நேரம், தீவட்டிக் கொள்ளை, விட்டில்ப் பஞ்சம், தாது வருசப் பஞ்சம் என்று ஞாபகப்படுத்திச் சொல்லுவார்கள்.
ஒரு சமயம் ஒரு வங்கிழவனாரைப் பார்த்துப் பேச நேர்ந்தது. அவர் சொன்னார் :
அது சாத்தூர்ல வெள்ளம் வந்த நேரம்பா. வெள்ளம் வடிஞ்சி முடிஞ்ச பிறகு, வெள்ளத்துல நனைஞ்சி போன ரங்கூன் அரிசி மூடைக, கிட்டங்கிகளிலெயிருந்து, ஒரு மூடை ரங்கோன் அரிசி ஒத்த ரூபா ஒத்த ரூபான்னு கூவிக்கூவி வித்தாங்க!
அந்த ரங்கோன் அரிசியின் மணம் உடனே என் மூக்குக்கு வந்தது. சுயம்பான அந்த அரிசியின் மணமும், ருசியும் இனி எக்காலமும் கிடைக்காத ஒன்று. அதோடு அந்தத் தேக்கு மரங்களின் மணத்தையும் சேர்த்துக்கொள்ள வேணும்.
இந்த முதுமக்கள் அத்தனை பேர்களுமே பல்வேறு வகையில் தகவல்க் களஞ்சியங்கள்தாம். எனக்கு அந்தச் சமயத்தில் இதெல்லாம் தெரியாமல் போய்விட்டது. அவர்களை நான் அண்டியதெல்லாம் சுவாரச்யமான கதைகளுக்காகவும், ரசமான சம்பவங்களுக்காகவும்தான்.
ஊர் தவறாமல் பொது மடங்கள், சாவடிகள் என்று உண்டு. வீட்டில் கஞ்சி குடிக்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களிலெல்லாம் இவர்களை இங்கேதான் பார்க்கலாம். ஊரை ஒட்டி உள்ள கம்மாய்க் கரைகளில் இவர்களுடைய முன்னோர்கள் நட்டி வளர்த்த ஓங்கு தாங்கான ஆல், அரசு, அத்தி, இத்தி, வேம்பு முதலிய நிழல்தரும் மரங்கள் நம்மைக் கண்டவுடன் வாங்க வாங்க என்று கூப்பிட்டு உட்கார வைத்துவிடும்.
அந்த ஆண்டுகளில் கோடை மழைகள் உண்டு என்றால் தண்ணீர் கெத்துக் கெத்தென்று அலைமோதி நிற்கும். குளுமையை நோக்கி வரும் காற்று அந்த நீரையும் தடவி நம்மையும் தடவிவிட்டுப் போய்க் கொண்டே இருக்கும். குளுமையின் சுகத்தை மேலும் அனுபவிக்க, மேல்த்துண்டை விரிக்காமல் வெறும் தரையில் அப்படியே படுத்துக் கொள்வார்கள்.
இப்படிச் சமயங்களில்தான் அவர்களுக்குள்ளிருந்து பாட்டு புறப்பட்டு வரும்; காவடிச் சிந்து போன்ற பாட்டுக்கள்.
இப்போதும் ஒரு கிழவனார் கம்பை ஊன்றிக் கொண்டு நம்மைக் கடந்து போகிறார் என்றால், ஒரு தகவல்க் களஞ்சியம் –  புத்தகம் –  போகிறது என்று நினைப்பேன். அவருடைய நடுங்கும் தலை ஆட்டலில், நம்மை நோக்கிய ஒரு எள்ளலும், ஏளனமும் தெரியும்.


0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger