Home » » எமது பூமியின் சுதந்திரக் காற்றை சுவாசிக்க தயாராகுங்கள்; வட மாகாண அமைச்சர் த.குருகுலராஜா !

எமது பூமியின் சுதந்திரக் காற்றை சுவாசிக்க தயாராகுங்கள்; வட மாகாண அமைச்சர் த.குருகுலராஜா ! தகவல் :-ராஜாத்தி சிந்து

"செய் அல்லது செத்துமடி'' என்ற வாசகத்தை உங்கள் மனக் கண் முன் வையுங்கள். எமது பூமியின் சுதந்திரக் காற்றை சுவாசிக்க நீங்கள் தயாராகுங்கள்" என இலங்கை தமிழ் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார் இலங்கை வட மாகாண கல்வி, கலாசார அலுவல்கள் விளையாட்டு, இளைஞர் விவகார அமைச்சர் த.குருகுலராஜா.

யாழ்ப்பாணம் செம்மணி வீதியிலுள்ள அமைச்சகத்தின் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை தமது கடமைகளை  பதவியேற்றுக் கொண்டார். தனது பதவியேற்புரையின் போதே மேற்கண்டவாறு கூறினார். அப்போது அவர் ஆற்றிய உரையின் முழு வடிவம் இங்கே

"ஈழத்தமிழர் வரலாற்றில் தடம் பதித்துள்ள 2013 இல் நாம் இன்று கூடியிருக்கின்றோம். நாடோடிகளாகத் திரிந்து பின் கூடி வாழ்ந்து, எமக்கென்று தனி அடையாளத்துடன் ஈழத் தமிழர் என்ற பெயரைப் பெற பல நூற்றாண்டுகள் நாம் எமது மண்ணிலே வாழ்ந்து, கடல் கடந்த நாடுகளுடன் தொடர்பை ஏற்படுத்தி எமது கல்வி, கலை, பண்பாடு, வாழ்வியல் கோலங்களை மற்றையவர்கள் அறியும் படி வெளிப்படுத்தி இந்தப் பூவுலகில் தமிழர்களாக வாழ்ந்து காட்டியுள்ளோம்.

மேற்கத்தி ஆங்கிலேயர்கள் எமது நாட்டைக் கைப்பற்றி ஆண்ட வேளையில் நாம் அவர்களை எதிர்த்தோம். அதே வேளையில் அவர்களின் கல்விக் கொள்கைகளை அனுமதித்து அதன் பால் எமது இனம் மேலோங்க வேண்டும் என்பதை எமது மூதாதையர் உணர்ந்து கொண்டதனால் தமிழ்க் குழந்தைகளை கல்வியின் மேல் மோகம் கொள்ள வைத்தோம். இதனால் மொழி, சுய பண்பாட்டறிவு, தனித்துவ வாழ்வியல் பழக்க வழக்கங்கள் கொண்ட குடிகளையும் சிந்தனையாளர்களையும் நாம் எம் மண்ணில் உருவாக்கினோம். எமது மொழி, சமயம், பண்பாடு ஆகியவை வலுவிழந்து விடாதபடி எமது முன்னோர்கள் கட்டிக் காத்துள்ளனர்.

தெற்காசியாவிலேயே இடை நிலைக் கல்வி எமது மண்ணிலே ஓங்கி வளர்ந்திருந்ததை 50 ஆண்டுகளுக்கு முன்னதாகவே உலகறியச் செய்தவர்கள் எமது முன்னோடி ஈழத்தினர். இன்று இலங்கை சுதந்திரம் அடைந்து 65 ஆண்டு 8 மாதங்களுக்கும் பின்னதாகப் புகழ் பூத்த யாழ். கல்வி மண்ணிலே குறைந்த அதிகாரப் பரவல் உள்ள ஒரு சிற்றரசின் கல்வி அமைச்சராக இன்றைய புனித நாளிலே நான் கடமை ஏற்றுள்ளேன்.

பள்ளிக் கல்வியிலே மகுட நிலையில் இருந்த எமது மாநிலம் இன்று எல்லோர் உதட்டிலும் உதாசீனமாகப் பேசப்படும் பொருளாக மாறியுள்ளது. பாடசாலைகளின் அலங்கார அபிவிருத்தி, மாணவர்களின் பண்பாட்டு நிலையறியாப் போக்கு, பெற்றோர்களின் போட்டி மனப்பாங்கு, எமது சமூகத்தின் விழிப்பற்றகண்ணோட்டம், நண்பர்களின் அட்டகாசம், கல்வியியலாளர்களின் குறுகிய வெளிப்படையற்ற நோக்கம், ஆசிரியர்களின் தனியாள் அபிவிருத்தி மோகம், அதிபர்களின் மேலாண்மை, அரசியல் வாதிகளின் அதிரடி ஆதிக்கம் இவையாவும் ஒன்று சேர்ந்து சுழன்று எமது கல்விப் புலத்தின் வளர்ச்சிக் குறைவுக்கு உரமூட்டியுள்ளன. இந்தக் கல்வி வளர்ச்சிக் குறைபாட்டின் காரணகர்த்தாக்களினுள் நானும் ஒருவன்.

தற்போது எனது கடமை ஏற்றலின் பின்னர் இந்தக் குறை பாட்டின் பிரதம காரணியாளனான என்னைத் தங்கள் மதிப்பான வாக்குகளால் தேர்ந்தெடுத்த மக்கள் முன்னுரி மைப்படுத்தக் கூடும். இப்படியான சூழ்நிலையிலேயே இன்று நான் கடமை ஏற்றுள்ளேன்.

கல்வியின் உச்சம் வட கிழக்கின் சுபிட்சம் என்றும் கல்வியின் தாக்கம் வடகிழக்கின் மீட்சியின் சின்னமாக மாறவேண்டும் என்பதே எனது விருப்பு. சின்ன ஆசைகள் எல்லோர் மனதிலும் உண்டு. ஆசையின் உச்சம் எம்மை அழிக்கக்கூடியது. ஆசைவார்த்தைகள்காட்டி எம் பள்ளி முதல்வர்களை தன் மானம் இழந்த தமிழர்களாக உருவாக்க முனைகின்றனர்.

தன்மானத்தை இழந்தவர் தமிழ் மானிடனாக இருக்க முடியுமா? தன்மானத்தை இழந்த தமிழனும் தமிழச்சியும் தமிழர் வரலாற்றில் தன்மானம் இழந்தவனாகவோ அல்லது தன்மானத்தினை இழந்தவளாகவோ கணிக்கப்படுவார். இங்கு குழுமியிருக்கும் எம்மவருள் எத்தனை பேர் தமிழ் அன்னையை தமது மனதில் பூசித்து, தமிழே தமது வாழ்வு என்று மனதார எண்ணியுள்ளோம்? எனது மொழி, எனது இருப்பிடம், நான் பிறந்த மண், எனது உரிமை, பூமிப்பந்தில் ஈழத்தினர் தனித்துவமானவர்கள் என்று எத்தனை பேர் எண்ணியுள்ளோம்.

வாழ் நாளில் எமது பணிகளையும் செயல்களையும் இதற்காக எத்தனை பேர் ஆற்றியுள்ளோம். இதனைப் பாடசாலைகளிலே வெளிப்படுத்துபவர்கள் யாராக இருக்க முடியும் என்பதைஇங்குள்ளவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.இந்தச் சிந்தனையை எனக்குள்ளே புதைத்தவர்கள் குடிசையில் வாழ்ந்துஅடுத்த வேளை உணவு எங்கே என்று எங்கித் தவிக்கும் மக்கள். போரின் வடுக்களை நிதம் சந்தித்து சகித்துக் கொள்ளும் மக்கள் எல்லாம் இழந்த பெண் குலம், தாய் தந்தைப் பாசமற்ற குழந்தைகள், வாழ்க்கை இனி எங்கே என்று ஏங்கும் நெஞ்சங்கள், பல காரணங்களுக்காக வாழ்வின் விளிம்பில் ஊசலாடும் மக்கள், மனதை உருக்கும் இந்த மண்டபத்தில் இருப்பவர்களும் உங்கள் உரிமை வாக்கை தமிழ் அன்னைக்கு சமர்ப்பணம் ஆக்கியிருப்பீர்கள் என்பது எனது உறுதியான நம்பிக்கை.சூழ்ச்சிகளும், வெட்டிப் பேச்சுக்களும், வெட்டியாளும் தன்மையும் கொண்ட காலகட்டத்தில் தமிழ் இறைமை மக்கள் மத்தியிலே உள்ளது என்பதனை நாம்மறந்திடலாகாது. எதற்குமோர் அளவுண்டு. எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும் என்பதனை எம்மினிய மொழியை தம் தாய்மொழியாகக் கொண்டவர்களில் சிலர் பல வேளைகளிலே மறந்து போகின்றார்கள்.

எந்தத் தராசில் நிறையுண்டோ அந்தப் பக்கம் சாய்கின்றார்கள். அவர்களால் முழு இறைமையும் கொண்ட எம்மக்கள் ஊசலாடுகின்றனர். இதற்கெல்லாம் தகுந்த பதிலை இறையாண்மை மிக்கவுள்ள எம் மக்கள் 2013 வடபுல மாகாண சபைத் தேர்தவின் மூலம் அதிரடியாக வழங்கி எமது சிந்தனைகளை உலுப்பியுள்ளார்கள். இம்மக்களின் ஒவ்வொரு வாக்கும் இறையாண்மையை மறந்தோர் மீது வேட்டுகளாகச் செலுத்தப்பட்ட வாக்குகளாகவே நான் உணர்கின்றேன் என்றார்.

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger