"சுயம்பு சூறாவளி " நாகை செல்வம்
கை, கால் நன்றாக இருந்தாலும் நோவு வந்துவிட்டால் தண்ணி கொடுக்க ஒரு ஆள்.. 
தடவிக்கொடுக்க ஒரு ஆள் தேடும் வாழைப்பழச் சோம்பேறிகளுக்கு செயலால் சவுக்கடி
 தருகிறார் செல்வம். பிறப்பிலேயே இரண்டு கால்களும் சூம்பிப் பிறந்த இவரை, 
‘சுயம்பு சூறாவளி’ என்கிறார்கள் நாகை ஏரியாவில்!
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள ஆச்சாள்புரத்தில் சொந்தமாகத் 
தச்சுப்பட்டறை வைத்திருக்கிறார் 36 வயதான செல்வம். உடன் பிறப்புகள் 
நால்வரோடு ஐந்தாவதாகப் பிறந்த நிஜ செல்வம் இந்தச் செல்வம். செல்லமாய் 
பிறந்த மகனுக்கு கால்கள் இப்படிப் போச்சே என பெற்றோர் 
பேதலித்துக்கொண்டிருந்த நேரத்தில், ஐந்து வயதிலேயே தன் தேவைகளைத் தானே 
கவனித்துக்கொண்டு அவர்களை நிம்மதிப் பெருமூச்சு விடவைத்தார் செல்வம். 
பள்ளிக்கூடம் போன நேரம் போக எஞ்சிய பொழுதில் அப்பாவின் தச்சுப் பட்டறைக்கு 
ஓடினார் செல்வம். ஆனால், பிள்ளைக்கு கை, காலில் காயம் பட்டுவிடுமோ என்ற 
பயத்தில் செல்வத்தை எதையும் தொட விடமாட்டார் அப்பா. அதனால், பெரியப்பாவின் 
கொல்லுப் பட்டறைக்குப் போய் தொழில் படிக்க ஆரம்பித்தார் செல்வம். 
’’பெரியப்பா பட்டறையில துருத்தி ஊதுவேன், மண்வெட்டி, அரிவாளுக்கு பூண் 
போடுவேன்.. இதை முழுசா கத்துக்கும்போது எட்டாம் வகுப்பு முடிச்சிட்டேன். 
அதுக்கு மேல படிப்புல நாட்டம் இல்லை.. முழு நேரமா பட்டறைக்குள்ள 
புகுந்துட்டேன். அந்த நேரத்துல அப்பாவும் இறந்துட்டதால, அவரு 
பாத்துட்டுருந்த வேலைகளை பார்க்க ஆரம்பிச்சிட்டேன்.
ஆரம்பத்துல சின்னச் 
சின்ன வேலைகள்தான் வந்துச்சு. பெரிய வேலைகளை எடுத்துச் செஞ்சு பேரு 
வாங்கணும்னு ஆசைப்பட்டேன். அப்பத்தான், மரவேலைக்காக நண்பர்கள் சிலபேரு 
கேரளாவுக்கு கிளம்புனாங்க. நானும் அவங்களோட தொத்திக்கிட்டேன். அங்க 
நண்பர்கள் எல்லாம் வேலை தெரியாம திணறிக்கிட்டு இருந்தப்ப, நான் புகுந்து 
வெளையாடினேன். என் வேலைத் திறமையைப் பார்த்து கேரளாக்காரங்க அசந்துட்டாங்க. 
கேரளா வேலையை முடிச்சுக்கிட்டு ஊர் திரும்புன நேரத்துல, எனக்கு ஒரே துணையா 
இருந்த அம்மாவையும் ஆண்டவரு கூட்டிக்கிட்டாரு. அண்ணன், அக்கா எல்லாரும் 
கல்யாணம் பண்ணிக்கிட்டு தனித்தனியா போயிட்டதால நான் மட்டும் தனிமரமா 
நின்னேன். தனியாவே தங்கிக்கிட்டு, கடைகள்ல சாப்பிட்டுக்கிட்டு முழுநேரமா 
கார்பென்டர் வேலையை கவனிக்க ஆரம்பிச்சேன். என் தொழில் சுத்தத்தையும் 
நேர்மையையும் பாத்துட்டு பலபேரு என்னைய தேடி வந்து வேலை குடுத்தாங்க. 
யாராலயும் செய்ய முடியாத வேலையைக்கூட நான் முடிச்சுடுவேன்னு கொள்ளிடம் 
பகுதியில இருக்கிற ஆசாரிகளே சொல்லுவாங்க. கண்ணு பார்க்க கை வேலை செய்யும். 
மத்தபடி நான் யாருக்கிட்டயும் போயி தொழில் கத்துக்கல’’ சோகமும் சுமைகளும் 
நிறைந்த தனது கடந்த காலத்தை கடகடவென சொல்லி முடித்தார் செல்வம். 
மரம் வாங்க, மரம் அறுக்க, வேலை செய்ய என எதுவாக இருந்தாலும் தனக்குக் கீழே 
வேலை செய்யும் ஆசாரிகளின் சைக்கிள் கேரியரில் தொத்திக் கொண்டு போய் 
வந்தவருக்கு மனதுக்குள் ஒரு ஆதங்கம். ‘எல்லா வேலையும் செய்றோம்.. ஒரு 
இடத்துக்கு போக வர மட்டும் இன்னொரு ஆளை தேட வேண்டி இருக்கே..’ என்று 
சங்கடப்பட்டவரின் சஞ்சலத்தைப் போக்கினார் வெளிநாட்டில் இருக்கும் அண்ணன். 
அவர் கொஞ்சம் பணம் அனுப்ப, கையில் இருந்ததையும் சேர்த்துப் போட்டு ஒரு 
டூவீலர் வாங்கி அதை தனக்கேற்ப மாற்றி வடிவமைத்துக் கொண்டிருக்கிறார். 
இப்போது போக்குவரத்திலும் செல்வம் சுதந்திரப் பறவை.
கட்டிடங்களுக்குப் போய் கதவு, ஜன்னல் செய்து கொடுத்தவர் இப்போது சொந்தப் 
பட்டறையில் இரண்டு பேருக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு முன்னேறி 
இருக்கிறார். கதவு, ஜன்னல் மட்டுமின்றி கட்டில், பீரோ தயாரிப்பதிலும் 
இந்தப் பகுதியில் இப்போது பிசியான ஆசாரி செல்வம்தான்! 
‘என்ன செய்ய.. நான் வாங்கி வந்த வரம் அப்படி..’ என இயலாமையில் இழுவையை 
போடுகிறவர்கள், செல்வத்தின் தச்சுப் பட்டறைப் பக்கம் ஒருமுறை போய்விட்டு 
வந்தால் இன்னொருமுறை அப்படி இழுக்க மாட்டார்கள்.                                                                                                                                     
தி இந்து - 19-10-2013

 
0 comments:
Post a Comment