Home » » இப்போதைய தேவை சிறிய பொறி மட்டுமே! - லஷ்மி நாராயணன் சிறப்புப் பேட்டி !

இப்போதைய தேவை சிறிய பொறி மட்டுமே! - லஷ்மி நாராயணன் சிறப்புப் பேட்டி !

என்.இலட்சுமிநாராயணன்

 30 வருடங்களுக்கு மேலாக மென்பொருள் துறையில் இருப்பவர், காக்னிசென்ட் நிறுவனத்தை வளர்த்ததில் முக்கிய பங்கு, நாஸ்காம் முன்னாள் தலைவர், டை (the indus entrepreneurs) அமைப்பின் தலைவர் என லஷ்மி நாராயணனுக்கு பல முகங்கள் இருக்கின்றன. இந்திய மென்பொருள் துறை மற்றும் தொழில்முனைவு குறித்து பல விஷயங்களைப் பேசினோம். அந்த விரிவான பேட்டியிலிருந்து...

உங்களைப் பற்றி?

பிறந்தது தமிழ்நாட்டில் என்றாலும், படித்தது எல்லாம் பெங்களூரில்தான். கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவுடன் 1974-ம் ஆண்டு டி.சி.எஸ். நிறுவனத் தில் வேலைக்குச் சேர்ந்தேன். அதன் பிறகு 1994-ம் ஆண்டு காக்னிசென்ட் நிறுவனத்தை ஆரம்பித்தோம்.

தொழில் தொடங்குவதை இப்போதே யாரும் விரும்பாத போது 1994ம் ஆண்டு எப்படி நிறுவனத்தை ஆரம்பித்தீர்கள்?

சரிதான். அப்போதைய நிலைமையில் பி.காம் படித்தால் வங்கி அல்லது அரசாங்க வேலையில் சேர நினைப்பார்கள். என்ஜீனியரிங் படித்திருக்கும் பட்சத்தில் பி.ஹெச்.இ.எல். அல்லது எல் அண்ட் டியில் வேலைக்குச் சேர வேண்டும் என்று நினைப்பார்கள். அப்போ தைக்கு தொழில்முனைவோர்கள் யார் என்று கேட்டால், ஐ.டி.ஐ. முடித்த எலெக்ட்ரீஷியன்கள் மற்றும் அது சம்பந்தமான டெக்னிக்கல் ஆட்கள்தான்.

டெக்னிக்கல் அறிவை நம்பி அவர்கள் ரிஸ்க் எடுக்கும்போது நாம் ஏன் ரிஸ்க் எடுக்கக் கூடாது என்று நினைத்து ஆரம்பித்ததுதான் காக்னிசென்ட். நான் டி.சி.எஸ். நிறுவனத்தில் இருந்து முழுமையாக விலகு வதற்குள், நண்பர்கள் காக்னிசென்ட் நிறுவனத்தை ஆரம்பித்துவிட்டார்கள். அதன்பிறகு காக்னிசென்ட் நிறுவனத்தில் 20வது ஆளாக போய் வேலைக்குச் சேர்ந்தேன்.

ஆரம்பகாலக் கட்டம் எப்படி இருந்தது?

வழக்கம் போல கடுமையாக இருந்தது. ஆனால் மிக நல்ல டீம் அமைந்தபிறகு எங்கள் வளர்ச்சி சாத்தியமானது. இந்த டெக்னாலஜி இவ்வளவு நன்றாக வளரும், இவ்வளவு பெரிய நிறுவனமாக வளரும் என்று கணித்தீர்களா என்று பலர் என்னிடம் கேட்பார்கள். இது எதையுமே நான் நினைக்கவில்லை.

மேலும், ஐந்து வருடத்துக்கு பிறகு வேறு ஒரு நிறுவனம் ஆரம்பிக்கலாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் இந்த நிறுவனம் வளர வளர பல முக்கிய நபர்களை உள்ளே கொண்டுவந்து கொண்டிருந்தோம். அவர்கள் என்னை நம்பி வந்திருப்பதால், அவர்களை விட்டுச் செல்லமுடியவில்லை. மேலும் கம்பெனி வளர வளர பொறுப்புகளும் அதிகரித்துக்கொண்டே இருந்தது.

மென்பொருள் நிறுவனங்கள் என்றாலே, வங்கி மற்றும் நிதி சார்ந்த பிரிவுகளில்தான் கவனம் செலுத்துகிறார்கள். ஏன் மற்ற துறைகளுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை?

ஒவ்வொரு மென்பொருள் நிறுவனத்திலும், வங்கி மற்றும் நிதி சார்ந்த சேவைகளின் பகுதி கணிசமாக இருந்தாலும், இப்போது அடுத்த கட்ட, புது துறைகளை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம். எங்களின் போர்ட்ஃபோலியோவை எடுத்துக்கொண்டால் ஹெல்த்கேர் துறை 28 சதவிகித பங்கு வகிக்கிறது.

ஐ.டி துறையில் நம்முடன் போட்டிபோட வியத்நாம் உள்ளிட்ட நாடுகள் வந்துவிட்டார்களே?
எல்லா நாடுகளுமே போட்டிதான். ஆனால் எந்த நாட்டிலும் இந்தியா போல படித்த, இளைஞர்கள் கிடை யாது. வியத்நாமில் எண்ணிக்கை கிடையாது. சீனாவில் எண்ணிக்கை இருக்கிறது. ஆனால் அங்கு இந்தியா போல இளைஞர்கள் இல்லை. காரணம் அவர்களுடைய ஒரு குழந்தை திட்டம். ஜப்பான் நிலைமை இதைவிட மோசம். என்னுடைய நண்பர் அங்கு சென்ற போது எங்குபார்த்தாலும் வயதானவர்க ளாகத் தெரிந்ததாக சொன்னார்.

மற்ற நிறுவனங்கள் எல்லாம் இரட்டை இலக்க வளர்ச்சி அடையவே சிரமப்படும்போது உங்களுக்கு மட்டும் எப்படி 20 சதவிகித வளர்ச்சி சாத்தியமாயிற்று?
நாங்கள் அதிகம் லாபம் எடுத்துக்கொள்வதில்லை. 20 சதவிகிதத்துக்கு மேலான லாபத்தை மீண்டும் நிறுவனத்திலே மறுமுதலீடு செய்கிறோம். இதை எங்களது முதலீட்டாளர்களிடம் தெளிவாகச் சொல்லிவிட்டோம். கம்பெனியிலே முதலீடு செய்யும் போது நிறுவனம் வளர்ந்துகொண்டே வருகிறது. இதனால் இங்கு வேலை செய்யும் பணியாளர்கள் அடுத்த கட்ட நிலைமைக்கு பதவி உயர்த்தப்படு கிறார்கள். காக்னிசென்ட் சென்றால் விரைவில் அடுத்த நிலைமைக்குச் செல்லலாம் என்ற பேச்சு சந்தையில் இருப்பதால் முக்கியமான நபர்கள் உள்ளே வருகிறார்கள். அதே சமயத்தில் முதலீடு அதிகரித்துக் கொண்டே இருக்கும் போது வளர்ந்து வருகிறோம். ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் வேகமாக வளர்கிறோம்.

நான்காவது இடத்தில் இருந்த உங்கள் நிறுவனம் இப்போது இரண்டாவது இடத்தில் இருக்கிறது. எப்போது முதல் இடம்?

இந்த ஆசை எங்களுக்கும் இருக்கிறது. இதற்காகக் கடுமையாக உழைக்க வேண்டும்.

காக்னிசென்ட் இப்போது inorganic growth (நிறுவனங்களை கையகப்படுத்துதல் மூலம் வளர்ச்சி அடைவது) கவனம் செலுத்துவது போலத் தெரிகிறதே?
பெரிய நிறுவனமாக காட்டிக்கொள்வதற்காக நிறுவனங்களை வாங்கவில்லை. நாங்கள் வாங்கியது சிறிய நிறுவனங்கள்தான். எங்களிடம் இல்லாத ஏதாவது ஒரு டெக்னாலஜி அவர் களிடத்தில் இருக்கும். அதற்காகத் தான் அந்த நிறுவனங்களை வாங்கு கிறோம். இதை நாங்களே உருவாக்கலாம்தான். ஆனால் அதற்கு சில ஆண்டுகள் வரை காலம் வீணாகும். அதனால்தான் நிறுவனங்களை கையகப்படுத்துகிறோமே தவிர, அளவுக்காக அல்ல.

பலமுறை உங்களிடம் கேட்கப்பட்ட கேள்விதான். இந்தியாவில் எப்போது உங்கள் நிறுவனத்தை பட்டியலிடப்போகிறீர்கள்?
பணம் தேவைப்பட்டால் பங்குச் சந்தையில் பட்டியல் இடலாம். எங்களுக்கு பணம் தேவை இல்லை. அதனால் இப்போதைக்கு அந்த எண்ணம் எங்களுக்கு இல்லை.

மீண்டும் நாம் தொழில்முனைவுக்கு வருவோம். படித்து எதாவது ஐ.டி. கம்பெனியில் வேலையில் சேர்ந்தால் போதும், ஐ.டி.துறை காரணமாகத்தான் இளைஞர்கள் ரிஸ்க் எடுக்க விரும்புவதில்லை, ஐ.டி. துறையால்தன் புதிய தொழில்முனைவோர்கள் உருவாவதில்லை? இதற்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

இது தவறான எண்ணம். ஐ.டி. துறைதான் பல தொழில்முனை வோர்களை உருவாக்கி இருக்கிறது. ஆரம்பத்தில் நாஸ்காமில் 120 நிறுவனங்கள் மட்டுமே இருந்தது. ஆனால் இப்போது 1,200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இருக்கின் றன. நாஸ்காமில் உறுப்பினராகச் சேர வேண்டும் என்றால் 10 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டும் நிறுவனமாக இருக்க வேண்டும். ஆனால் இதற்கும் கீழே வருமானம் ஈட்டும் 12,000 நிறுவனங்கள் சந்தையில் இருக்கத்தான் செய்கிறது.

12,000 நிறுவனங்கள் என்றால் 12,000 தொழில்முனைவோர்கள். மேலும் இப்போதைய நிலைமையில் புதிதாக வந்திருக்கும் தொழில்முனைவோர்க ளில் 80 சதவிகித தொழில்முனைவோர்கள் ஐ.டி. துறையைச் சேர்ந்தவர்கள்தான்.

முன்னணி ஐ.டி. நிறுவனங்கள் அவர்களே வென்ச்சர் கேபிட்டல் நிறுவனங்களை ஆரம்பித் திருக்கிறார்கள்? நீங்கள்?
எங்கள் நிறுவனத்தில் பணிபுரி பவர்கள் தரும் சிறந்த ஐடியாக்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம். அவர்க ளுக்கு முதலீடு செய்கிறோம். மேலும் அவர்களுக்கு வேலை உத்தர வாதமும் தருவதால் அவர்களுடைய புதிய முயற்சியில் கவனம் செலுத்த முடிகிறது.

உங்களுடைய நிறுவனத்திலே 'பாதுகாப்பாக' வைத்திருப்பதால், அவர்கள் அடுத்த நிலைமைக்குச் செல்ல முடியாமல் போகுமே?
வேலை உத்தரவாதம் என்பது அவர்கள் பதற்றப்படக் கூடாது என்பதற்காகதான். அவர்களது மாடல் தயாரான பிறகு அவர்கள் தனியாக ஆரம்பித்துவிடுவார்கள். இதுவரை 3 பேர் அப்படி சென்றிருக்கிறார்கள். 20 பேர் ஆரம்பநிலையில் இருக்கிறார்கள். இந்தியாவில்,

ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்கள் படித்து முடித்து வெளியே வருகிறார்கள்? இத்தனை வருடங்களாக ஐ.டி மற்றும் டெலிகாம் துறை நிறைய வேலைவாய்ப்பை கொடுத்தது? இனி?
மற்ற நாடுகளில் அல்லது இந்தியாவில் வளர்ந்த துறையை ஊக்குவிப்பதை விட, புதிதாக ஏற்றம் பெற்று வரும் துறையை ஊக்குவிக்கலாம். உதாரணத்துக்கு வளர்ந்து வரும் பயோடெக்னாலஜி மற்றும் மருத்துவத்துறையை ஊக்குவிப்பதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.

மேலும் டெலிகாம் துறையில் அலைக்கற்றை அளவை அதிகமாக்கும் போது, டெக்னாலஜி சார்ந்து பல புதிய முதல் தலைமுறை தொழில்முனைவோர்களை உருவாக்க முடியும். இப்போதே தகுதி வாய்ந்த பணியாளர்களுக்கு பற்றாக்குறை இருக்கிறது. இதை நேஷனல் ஸ்கிள் டெவலப்மென்ட் மூலம் தகுதி வாய்ந்த பணியாளர்களை உருவாக்க முடியும். எதிர்காலத்தில் இவர்களுக்கான தேவை அதிகமாக இருக்கும்.

தொழில்முனைவோர்களை உருவாக்குவதில் அரசாங்கத்தின் பங்கு என்னவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

புதிய தொழில்முனைவோர்கள் லாபம் ஈட்டும்பட்சத்தில் அவர்களுக்கு வரி விதிக்கலாம். அதில் எந்த சலுகையும் காட்ட வேண்டாம். ஆனால் அதே சமயம் தொழில்முனை வோர்களை ஊக்குவிப்பதற்காக விதிமுறைகளை கொஞ்சம் தளர்த்தலாம். அதற்காக சுற்றுச்சூழலை மாசுபடுத்தலாம் என்று சொல்ல வில்லை. மேலும் பிஸினஸ் செய்வதற்கான சூழ்நிலையை உருவாக்குவது அவசியம். குறிப்பாக, மின்சாரம். மின்சாரம் மூலம் சிறிய தொழில்முனைவோர்கள் பலர் பிஸினஸையே விட்டிருக்கிறார்கள். இவர்கள் பிஸினஸையே வேண்டாம் என்று பிரசாரம் செய்வார்கள். இது ஒட்டுமொத்த சூழ்நிலையே மோசமாக்கும். நம்பிக்கையை அரசு ஏற்படுத்த வேண்டும்.

“டை” என்ன செய்கிறது?
வெற்றிகரமான தொழில் அதிபர்கள் இந்த அமைப்பில் இருக்கிறார்கள். அதேபோல வளர்ந்துவரும் தொழில் முனைவோர்களும் இந்த அமைப்பில் இருக்கிறார்கள். இவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவது, ஏஞ்சல் முதலீட்டை பெற்று, எப்படி ரிஸ்க்கைக் குறைப் பது, பிஸினஸை அடுத்த கட்டத் துக்கு எடுத்துச் செல்வது உள்ளிட்ட வேலைகளை செய்கிறோம். மேலும் அவ்வப்போது கருத்தரங்கு கள் நடத்துகிறோம்.

இதன்மூலம் மாணவர்கள் தொழில்முனைவோர்களைச் சந்தித்து தொழில்முனைவின் அவசியத்தைப் பேசி வருகிறோம். இவர்களை ஊக்குவிக்க ஒரு சிறிய பொறி போதும். மற்றவற்றை அவர்களே பார்த்துக்கொள்வாரகள். நாங்கள் செய்வது ஒரு சிறிய பொறியை உருவாக்குவதுதான்.                                                                                                                       
பேட்டி கண்டவர் :- வாசு கார்த்தி
·   T  
தி இந்து - 20-10-2013                                                                                                                0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger