இந்தியாவிலேயே சுதந்திர வேள்வியில் ஈடுபட்டதற்காக இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற ஒரே தலைவர், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை ஆவார். இவர் அரசியல் வித்தகர் மட்டுமல்ல; சிறந்த இலக்கியவாதியுமாவார்..
வ.உ.சி. முதலில் ஆங்கிலத்திலிருந்து ஜேம்ஸ் ஆலனின் நூல்களை 1909-இல் மொழி பெயர்த்து வெளியிட்டார். பின்னால் கவிஞராகத் தாம் தீட்டிய “பாடல் திரட்டு” நூலை 1915-இல் வெளியிட்டார். அதே காலக் கட்டத்தில் கண்ணனூர்ச் சிறையில் இருந்தபோது எழுதிய “மெய்யறம்”, “மெய்யறிவு” ஆகிய நூல்களையும் அச்சிட்டார்.
1920 முதல், பகுதி பகுதியாகத் தொல்காப்பிய எழுத்ததிகாரத்தையும், இளம்பூரணார் உரையுடன் கூடிய புதிய பதிப்பினையும் கொண்டு வந்தார்.அவர் காலம் வரை வெளிவராதிருந்த மணக்குடவருரையைக் கண்டெடுத்துச் செம்மைப்படுத்தி அரியதொரு நூலாகப் பதிப்பித்தார்.
1935-இல் தாம் திருக்குறள் அறப்பாலுக்கு எழுதிய அகல உரையையும் வெளியிட்டார். இறுதியாகச் சிவஞானபோத உரையையும் அச்சில் கொண்டு வந்தார். 1936-இல் அவர் மறைந்ததால் திருக்குறள் பொருட்பாலுக்கும், இன்பத்துப் பாலுக்கும் அகலவுரை எழுதியிருந்தும் அவர் உயிருடன் இருந்த காலத்தில் அவை வெளிவராமற் போயின.
திருக்குறள் முழு உரையையும் திருச்செந்தூர்த் திருமுருகப் பெருமான் சந்நிதியில் அரங்கேற்றியதை , திருக்குறள் உரைப்பாயிரத்தில் அவரே குறிப்பிட்டுள்ளார்.
வ.உ.சி. எழுதிய திருக்குறள் கையெழுத்துப் பிரதிகள் குறித்த தகவல்கள், முனைவர் பட்டத்திற்காக வ.உ.சி. பற்றிய ஆய்வினை மேற்கொண்ட மா.ரா.அரசு அவர்கள் எழுதிய “வ.உ.சிதம்பரனார்” என்னும் நூலில்
( பக்கம் 64 -82 ) அடங்கியுள்ளன...
தமிழ்ப் பதிப்புலகில் தன்னிகரற்று விளங்கிய பெருந்தகையாளர் பதிப்பக வேந்தர் பாரி செல்லப்பனார் ஆவார். அவரிடம் வ.உ.சி.-யின் மகன் சுப்பிரமணியம் அவர்கள் வ.உ.சி. எழுதிய திருக்குறள் அகல உரையின் கையெழுத்துப் பிரதிகளை அளித்திருந்தார். செல்லப்பனாரின் காலத்தில் வ.உ.சி.யின் உரையை வெளிக்கொணரும் முயற்சி நிறைவேறவில்லை.
தந்தையின் நிறைவேறாத கனவை நனவாக்க பாரி அமர்ஜோதி முயன்றார். தக்கோர் கலந்தாலோசனைக்குப்பின் பதிப்பிக்கும் பொறுப்பு, பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் குமரவேலர் வசம் ஒப்படைக்கப்பட்டது. . இவர் உரை வேந்தர் அவ்வை துரைசாமிப் பிள்ளையின் மருகர் என்பதும் ஓர் சிறப்பு..
ஆறு திங்கள் அரிதின் முயன்று முனைவர் குமரவேலர் எல்லோரும் போற்றும் வகையில் தம்மிடம் கொடுக்கப்பட்ட பொறுப்பை நிறைவு செய்தார்.
பாரி திரு.அமர்ஜோதி ”திருக்குறள் வ.உ.சிதம்பரனார் உரை” நூலை 728 பக்கங்களில் 2008-இல் முதற்பதிப்பாகக் கொண்டு வந்தார். 2010-இல் இந்த நூலுக்குத் தமிழக அரசின் பரிசும் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஓர் அரசியல் வித்தகராக,
ஆன்மிக உணர்வுடையவராக,
படிப்பாசிரியராக,
இதழாசிரியராக,
தொழிற்சங்கப் போராளியாக,
கப்பல் நிறுவனச் செயலாளராக,
சிறந்த வழக்குரைஞராக,
தன் வரலாறு முதலியவற்றைத் தீட்டிய கவிஞராக,
மக்கள் உள்ளம் கவர்ந்த பேச்சாளராக,
நல்ல மொழி பெயர்ப்பாளராக.
இவ்வாறு பன்முகத்திறன் கொண்ட வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் எழுதிய
திருக்குறள் உரையின் சிறப்பு அடுத்த வலைப்பதிவில் தொடரும்.
நூல் வெளியீடு :- பாரி நிலையம், 90-பிராட்வே, சென்னை- 600 108
தொலைபேசி எண் :-25270795
0 comments:
Post a Comment