Home » » தமிழில் ஆதி நிகண்டு திவாகரம் ! ( திவாகர அகராதி )

தமிழில் ஆதி நிகண்டு திவாகரம் ! ( திவாகர அகராதி )


நிகண்டு நூல்கள்

நிகண்டுக்குத் தோற்றுவாய் தொல்காப்பியச் சொல் அதிகாரத்தின் உரியியல் ஆகும். அதில் உள்ள 100 நூற்பாக்களும் நிகண்டின் பொருளையே கூறுவன. சிறுபகுதி இதற்கு முந்திய இடையியலிலும், பொருளதிகார மரபியலிலும் காணப்படும். இவ்விடங்களில் தாம் விளக்க வேண்டும் என்று கருதிய சொற்களை மட்டுமே தொல்காப்பியர் விளக்கி உரைத்தார். எல்லாச் சொற்களையும் சொல்ல அவர் எண்ணவில்லை. உரியியல், ‘உரிச்சொல் கிளவி விரிக்கும் காலை' என்று தொடங்குகிறது. நிகண்டு என்ற சொல் 15ஆம் நூற்றாண்டு வரை வழக்கத்திற்கு வரவில்லை.

கூட்டம் எனினும் நிகண்டு எனினும் ஒக்கும்

என்பது சங்கர நமசிவாயர் நன்னூலில் (சூத்திரம் 460க்கான உரை) எழுதியிருக்கும் குறிப்பு. ‘இவ்விலக்கணம் அறிவதற்கு முன் நிகண்டறிக' என்றாம், அறியும் முறை அதுவாகலான்' என்றும் அவர் எழுதுகிறார். திண்ணைப் பள்ளிக்கூடங்களில் சிறுபிள்ளைகள் - ஏழு எட்டுக்கு உட்பட்ட வயதில் - நிகண்டினை நெட்டுருச் செய்து வந்தார்கள்.

முதன்முதலாக 16வது நூற்றாண்டில் தான், ‘மண்டல புருடர்' தம் நூலை, ‘நிகண்டு சூடாமணி என்று ஒன்று சொல்வேன்' என்கிறார். அதற்கு முன்பு வரை நிகண்டுகள் உரிச்சொல் என்ற பெயராலேயே வழங்கின. சொல்லுக்குப் பொருள் விளக்கம் தரும் அகராதிகளாக நிகண்டுகள் இலங்கின.

திவாகர நிகண்டு

‘நிகண்டு' எனும் பிரிவில் திவாகரம் முதலில் தோன்றிய நூல் ஆகும். இதன் காலம் கி.பி.9ஆம் நூற்றாண்டு ஆகும். பண்டைக்காலத்தில் வாழ்க்கையின் எத்துறையிலும் முக்கியமான பொருளை நினைவில் இருத்த வேண்டும் என்றால் அதைப் பாட்டாகவே எழுதி வைத்தார்கள். அதே நிலை இடைக்காலத்திலும் தொடர்ந்தது. இலக்கணமும் பாட்டாகவே எழுதி வைக்கப்பட்டிருத்தலைக் காணலாம். நிகண்டுகள் முதலியன இன்றுவரை பாட்டாகவே இருப்பதை இதற்கு உதாரணமாகச் சொல்லாம்.

தமிழின் ஆதி நிகண்டு திவாகரம் ஆகும். திவாகரத்தைச் செய்தவர் திவாகரர் ஆவார். ‘திவாகரர்', ‘திவாகரன்' என்ற சொற்களுக்கு, ‘பகலைச் செய்பவன், சூரியன்' என்று பொருள். படைக்கலங்கள் பற்றி இவர் விரிவாகவும், விளக்கமாகவும் கூறி உள்ளார். எனவே இவர் ஒரு போர் வீரராக இருத்தல் வேண்டும் என்று பேராசிரியர் அருணாசலம் கூறுவார்.

“அம்பர் காவலன் சேந்தன் அம்பிகை மீது அந்தாதி பாடினான்” என்று சொல்ல வந்த திவாகரர், அம்பிகையைப் புகழ்வதால் இவர், சைவர் என்று கூறுவர். அம்பிகையைப் புகழ்வது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். முனிவர் என்ற பெயரை வைத்துச் சமணர் என்பது தவறு என்கிறார் பேராசியர் அருணாசலம். 880இல் திவாகரர் நிகண்டு செய்தார்.

திவாகரம் 12 பிரிவுகளைக் கொண்டது. அவை,

(1)     தெய்வப் பெயர்த் தொகுதி
(2)     மக்கள் பெயர்த் தொகுதி
(3)     விலங்கின் பெயர்த் தொகுதி - மக்கள், தேவர், தாவரம் அல்லாத பிற யாவும்
(4)     மரப் பெயர்த் தொகுதி - தேவதாரு முதல் மூங்கில் வரை 79 மரங்கள்.
(5)     இடப் பெயர்த் தொகுதி - உலகு, திசை, கடல், மலை, ஆறு முதலியன.
(6)     பல்பொருள் பெயர்த் தொகுதி - பிற தொகுதிகளில் சொல்லாதன - உலோகம், மணி போன்றவை.

பதினோராம் பகுதியாகிய ஒரு சொல் பலபொருள் பெயர்த் தொகுதியில் - ‘அரி' என்ற ஒரு சொல்லை எடுத்து அதற்கு 23 பொருள் தந்து இதில் 15 தமிழ்ப் பொருள் ; 8 வடமொழியில் இருந்து வந்த பொருள் என்கிறார்.

12ஆம் பகுதி பல்பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதி ஆகும். இது பிற்காலத்தில், ‘தொகை அகராதி' எனப்பட்டது (தொகை - தொகுதியாக, கூட்டமாக உள்ள பொருள்கள்)

கூறியது கூறினும் குற்றமில்லை
வேறொரு பொருளை விளக்குமாயின்


என்ற முன்னுரையோடு ஒன்றில் தொடங்கி 83 வரையில் தொகைப் பொருளைக் கூறுகிறார்.

ஆங்கிலத்தில் உள்ள, ‘Dictionary', ‘Thesauras' என்ற இரண்டும் நிகண்டை ஒத்தவை. சொல்லுக்குப் பொருள் தருவது அகராதி. திவாகர நிகண்டின் பதினொராம் பகுதி அகராதி போன்றது. ஒத்த கருத்துடைய சொற்களை ஓரிடத்தில் சேர்த்துக் கொடுப்பது, ‘thesauras' ஆகும்.நிகண்டின் முதல் பத்துத் தொகுதிகளும் இவ்வமைப்பினது. ஆங்கில மொழியில் ரோஜட் என்பவர் 19வது நூற்றாண்டில் முதன்முதலாக இப்படி ஒரு தொகுதி செய்து வெளியிட்டார.

தமிழில் ஒன்பதாவது நூற்றாண்டிலேயே செய்யுள் வடிவத்தில் திவாகரரால் செய்யப்பட்டு, அதைத் தழுவிப் பின்னர் இருபதாம் நூற்றாண்டு வரை சுமார் இருபது நிகண்டுகள் வந்திருப்பது தமிழின் சிறப்பாகும்.

1 comments:

  1. இந்த நிகண்டு இணையதலம் வாயிலாக வாங்க இயலுமா? இயலுமென்றால் தக்க இணைப்பு தந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger