லஞ்சம்
என்பதற்கு சுத்த தமிழில் கையூட்டு என்கிறார்கள். இதை விட பிச்சை என்று
சொல்வதே மிகவும் சரியானதாக இருக்கும். ஏன், எப்படி, எதற்காக என்று
பார்ப்போம்.
பொதுவாக, நாம் அன்றாட வாழ்க்கைக்கு
தேவைப்படும் உணவு மற்றும் உடமைகள் கேட்டு வருபவர்களை தான் பிச்சைக்காரர்கள்
என்கிறோம். இவர்களுக்கு அரசு அங்கீகாரமாக, ‘‘வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள்’’ என்று பெருமையாக சான்றிதழும் கொடுக்கிறது.
ஆனால், உண்மையில் பார்க்கப்போனால்
நாட்டில் பலவேறு விதங்களில் பிச்சைக்காரர்கள் இருந்து கொண்டுதான்
இருக்கின்றனர். இப்பிச்சைக்காரர்களுக்கு நீங்கள் பிச்சைப் போட்டுக்
கொண்டுதான் இருக்கிறீர்கள் என்று நான் சொன்னால், ‘இல்லையில்லை. நான் பிச்சை போடுவதே இல்லை’ என்று விவாதம் செய்ய விரும்புபவர்கள் எப்படியெல்லாம் பல்வேறு மாறுபட்ட விதங்களில் பிச்சைப் போடுகிறீர்கள் என்பதை பார்ப்போம்.
தெருவோர, சாலையோர மற்றும் வீடு தேவிவரும் பிச்சைக்காரர்கள் தவிர, ‘‘அனுதினமும் மக்களை சந்திக்கும் பிச்சைக்காரர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் பொது ஊழியர்கள்தாம்’’.
போக்குவரத்துறை என்று எடுத்துக் கொண்டால்
சொந்த வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவல் துறையினருக்கு பணப்பிச்சை
போடுகிறார்கள். வாகன ஒட்டிகள் அல்லாத பிற பயணிகள் சில்லரையை கொடுக்க
விரும்பாத நடத்துனர்களுக்கும், கொண்டு செல்லும் சுமைக்கு கட்டணம் அல்லாது
கூடுதல் பணம் கேட்கும் நடத்துனருக்கும், இவரின் மூலமாக ஓட்டுனருக்கும்
பணப்பிச்சை போடுகிறார்கள்.
நெடுந்தொலைவு பயணத்தில் வழியோர
உணவகங்களில் அப்பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் ஏதாவது ஒன்றை
சாப்பிடுவதன் மூலமாக அப்பேருந்தின் நடத்துனருக்கும், ஓட்டுனருக்கும்
உணவுப்பிச்சை போடுகிறார்கள்.
இவற்றையெல்லாம் கண்டும் காணாத மாதிரி
இருக்கும் அப்போக்குவரத்து கழக நிர்வாகிகளுக்கு எந்த விதத்தில் ஓட்டுநர்
மற்றும் நடத்துனர்களால் பிச்சைப் போடப்படுகிறது என்பது தெரியவில்லை.
மொத்தத்தில், அரசு வரி என்கிற பெயரில்
குடிமக்களிடம் நம்மிடம் இருந்து பிச்சையை சட்டப்பூர்வமான கட்டாயமாக்கி
(பிடுங்கி) தனது ஆட்சி அதிகாரத்தை பலப்படுத்திக் கொள்வதற்காக தன்
ஊழியர்களுக்கு பல்வேறு வகைகளில் வாரி வழங்குகிறது.
இதில் அரசையும், அது சார்ந்த ஊழியர்களை
மட்டும் குறை சொல்வது என்பது நடுநிலையான சிந்தனையாக இருக்காது. மாறாக,
பல்வேறு தரப்பட்ட மக்கள் எப்படி எல்லாம் அதிநுட்பமான முறையில் பிச்சை
எடுக்கிறார்கள் என்பதையும் சொல்ல வேண்டும்.
நுகர்வோர் பாதுகாப்பு குழுக்கள் தங்களின் அதிகாரங்களைத் தவறாக பயன்படுத்தி பல்வேறு விதங்களில், விதங்களில் பிச்சை எடுக்கின்றன.
லஞ்சப்
பிச்சையை ஒழிப்பதற்காக புறப்பட்டுள்ள பல்வேறு தன்னார்வ அமைப்புகள் ஆண்டுச்
சந்தா அல்லது ஆயுள் சந்தா என்ற பெயரில் பிச்சை எடுக்கின்றன.
சிறுவர்
மற்றும் முதியோர் இல்லங்களை நடத்துபவர்கள் அவர்களை மூலதனமாக வைத்து
விவரிக்க இயலாத வகையில் பல்வேறு விதங்களில் பிச்சை எடுக்கின்றனர்.
தொழிற்சங்கங்கள் தொழிலாளிகளை ஏமாற்றி விட்டு முதலாளிகளோடு கை கோர்த்து விடுகின்றன.
மொத்தத்தில், தொண்டு (செய்வதற்காக
புறப்பட்ட) நிறுவனங்கள் எல்லாம் ஃபண்டு நிறுவனங்கள் ஆகி விட்டன. தொண்டு
நிறுவனங்களை சல்லடை போட்டு சலித்தாலும் கிடைப்பதில்லை என்பதைப்பற்றி பக்கம்
பக்கமாகச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனாலும், லஞ்சப் பிரச்சினைக்கு தீர்வு
என்ன என்பதுதானே முக்கியம்.
லஞ்சம், கையூட்டு என்பது ஒரு கேவலமான வார்த்தையல்ல. மாறாக, புனிதமான வார்த்தைகள் என்றாகி விட்ட இன்றைய கால கட்டத்தில் ‘‘பிச்சை’’ என்ற வார்த்தை மட்டும் கொஞ்சம் அருவருக்கத்தக்க சொல்லாக கருதப்படுகிறது.
எனவே, இனி யாராவது எந்த விதத்திலாவது லஞ்சம் கேட்டால், ‘‘அதற்கு பதிலாக எனக்கு பிச்சை போட்டு பழக்கமில்லை. பிச்சை போடுபவர்களாக பார்த்து கேளுங்கள்’’ என்றோ அல்லது ‘‘பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போடுவது தர்மம். ஆனால், உங்களுக்கு போடுவது அதர்மம்’’ என்றோ பலர் அறிய பகிரங்கமாக ஒருமுறைச் சொல்லிப் பாருங்களேன்.
தனது மானம், மரியாதை, கௌரவம் என
எல்லாம் ஏற்கனவே இருந்தது போலவும் ஆனால், தற்போது போய் விட்டது போலவும்
கருதி, அதனை மீட்டெடுக்கும் விதமாக உங்களுக்கு தெரிந்தோ, தெரியாமலோ கூட
உங்களிடம் இருந்து பிடுங்கிய லஞ்ச பணத்தை கூட, பலர் அறிய திரும்ப கொடுத்து
விடுவார்கள் என்பது எனக்கு பலவிதங்களில் கிடைத்த சுவரசியமான அனுபவம்.
அதோடு, வேறு யாரிடமும் கூட இது போன்று பிச்சை எடுக்க வெட்கப்படுவார்கள்.
ஆம்! மனம்
விரும்பி கொடுப்பது மட்டுமே தருமம். கேட்டு கொடுப்பது பிச்சையேதான்
என்பதால் இந்தச் சொல்லும் அனைத்து சூழ்நிலையிலும், அனைத்து இடங்களிலும்,
உங்களின் லஞ்சப் பணத்தை காப்பாற்றி லஞ்சத்தை ஒழிக்க ஒரு சிறந்த வழியாக
இருக்கும் என நம்புகிறேன்.
(மத்திய சட்ட அமைச்சகத்தின் நிதியுதவியுடன் விரைவில் வெளிவர உள்ள கடமையைச் செய்! பலன் கிடைக்கும் இதழின் தொகுப்பு நூலில் இருந்து…)
0 comments:
Post a Comment