Home » » ஏழாவது ஊழி – சுற்றுச்சூழல் கட்டுரைகள்: நூல் அறிமுகம்

ஏழாவது ஊழி – சுற்றுச்சூழல் கட்டுரைகள்: நூல் அறிமுகம்


தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் அறிவுஜீவிகளுக்கு பஞ்சமே கிடையாது. உலக அளவில் நடைபெறும் நிகழ்ச்சிகளையும், ஏற்படும் மாற்றங்களையும் இயற்கை அறிவுடனும், இணையத்தின் துணையுடனும் விரித்தெழுதி பிரபல பத்திரிகைகளில் இடம் பிடிப்பார்கள். ஆனால் உள்ளூரில் நடக்கும் எந்த ஒரு பிரச்சனைக்கான காரணங்களையோ, காரணமானவர்களையோ அடையாளம் காட்டி எழுத மாட்டார்கள்.

கானுயிர்களுக்கும், கடல்வாழ் உயிரினங்களுக்கும் கவலைப்படும் இவர்களுக்கு போக்குவரத்து நெரிசலால், தொழிற் பெருக்க புகையால் ஏழைகள் படும் அவதி தெரியாது. தெரிந்தாலும் எழுதி அதிகார வர்க்கத்தை பகைத்துக் கொள்ள விரும்ப மாட்டார்கள்.

Environmental Romanticism is much safer than Environmental Activism.

இதற்கு எதிர்நிலையில்-மக்கள் தரப்பில் இருந்து செயல்படுகின்றன ஐங்கரநேசனின் எழுத்துகள். “இன்னும் மீதமிருக்கிறது நம்பிக்கை” என்ற பூவுலகின் நண்பர்கள் வெளியிட்ட நூல் ஒன்றின் தலைப்பில் முன்னுரையை தொடங்கியிருக்கும் ஆசிரியர் மீதமிருக்கும் நம்பிக்கையின் அடையாளமாக திகழ்கிறார்.
ஈழத்தமிழரான இவர் சென்னையில் முதுநிலை தாவரவியல் படித்துள்ளார். எனினும் இவரது அறிவு தாவரவியலையும் தாண்டி வரலாறு, சமூகவியல், பொருளியல், சட்டம், அரசியல் என அனைத்து திசைகளிலும் பயணிக்கிறது. சூழல் குறித்த விரிந்த பார்வையின் காரணமாக பூவுலகில் உள்ள செல்வங்கள் குறித்தும், அவற்றை சூறையாடும் பன்னாட்டு சதிகள் குறித்தும் தெளிந்த பார்வையோடும், அதை உலகுக்கு உணர்த்தும் இயல்பான மொழியோடும் இந்த நூலை படைத்துள்ளார்.

புவி வெப்பம் குறித்த கட்டுரையுடன் ஆரம்பமாகும் நூல், அடுத்த அத்தியாயத்திலேயே அதற்கு காரணமான அமெரிக்காவை விமர்சனம் செய்கிறது. சூழல் என்பது சமூகம் மட்டுமே சார்ந்த அம்சம் அல்ல என்பதை உணர்த்தும் நோக்கிலும் கட்டுரைகள் உள்ளன. நவீன சமையலறையில் உள்ள பாத்திரங்களே நஞ்சாகும் அவலம், நாகரீக உடையான ஜீன்ஸ் சூழலுக்கு எவ்வாறு எதிரானது, செல்லிட பேசிகள் விளைவிக்கும் அபாயம், கோக்-பெப்சி போன்ற பூச்சி மருந்துகள், பிளாஸ்டிக், அஸ்பெஸ்டாஸ் போன்றவை குறித்து அபாய மணி அடித்து கட்டுரைகள் எச்சரிக்கை செய்கின்றன.

சிலந்தி, வண்ணத்துப்பூச்சி, தவளை, கடற்குதிரை ஆகியவை குறித்த கட்டுரைகள் நமது வாழ்நாளிலேயே பல உயிரினங்கள் அழிவை சந்திக்கும் அவலத்தை சொல்கின்றன. இவற்றின் அழிவு, என்ன விளைவை ஏற்படுத்தும் என்ற எச்சரிக்கையை கூறவும் தவறவில்லை.

மனிதக் குரங்குகளையும், குரங்கு மனிதர்களையும் அடையாளம் காட்டும் கட்டுரை மிகவும் ரசனையுடனும், ஆழ்ந்த அறிவுடனும் எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக சிம்பன்சி, போனபோ வகை குரங்குகளின் பாலியல் வாழ்வை ஒப்பிடுவதன் மூலம் மானுடவியலின் துவக்கத்துக்கான அடிப்படை சுட்டிக்காட்டப்படுகிறது.

ஓரின, ஈரின சேர்க்கை மட்டுமல்லாமல் சுயஇன்பத்திலும் போனபோ வகை குரங்குகள் ஈடுபடுகின்றன என்பது பலருக்கும் புதிய தகவலாக அமையும். ஆனால் இந்த குரங்குகளுக்கு, வேட்டைக்காரர்கள் முதல் நவீன தொழில் நுட்பத்தின் சோதனைச்சாலைகள் வரை ஏற்படும் ஆபத்துகளை விவரிக்கும் போது நவீன உலகின்மீது ஒரு சிறு கோபம் கிளர்ந்தெழுகிறது.

சூழல் என்பது தாவரம், விலங்குகள் போன்ற உயிரினங்கள் மட்டும் சார்ந்தது என்று பலரும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில், அறிவுச் சொத்துரிமை சட்டங்கள் என்ற பெயரில் விவசாயிகளின் உரிமைகள் பறிக்கப்படுவதும் இந்த நூலில் சுட்டிக்காட்டப்படுகிறது. அறிவுச்சொத்துரிமை என்ற மோசடி கருத்தியலுக்கான அடிப்படைகளில் ஒன்றாக இருக்கும் மரபணு மாற்றம் என்ற திரிபுவாத வணிக நுட்பமும் விளக்கமாக சுட்டப்படுகிறது. ஆதி மனிதர்களின் அறிவைக் கவரும் நோக்கில், அவர்களது பாரம்பரியத்தை அழித்தொழிக்கும் சதியாக மொழியை அழிக்கும் போக்கும் கண்டிக்கப்படுகிறது.

இவையெல்லாம் பொதுவாக இருந்த போதும் ஈழம் குறித்த கட்டுரைகள் சிறப்பு கவனத்திற்குரியன. யாழ்ப்பாணத்தில் பாழாகும் கிணறுகள் குறித்த கட்டுரையும், யாழ்ப்பாணம் பாலையாகுமா என்ற கட்டுரையும் தாயகம் மீதான அவருடைய அக்கறையை உணர்த்துகிறது.

சிங்கம் குறித்த கட்டுரையில் கீழ்க்கண்டவாறு வரலாற்று விமர்சனத்தையும் ஆசிரியர் முன் வைக்கிறார்: “சிங்களர்கள் தங்களது தேசியத்தை சிங்கத்துடன் அடையாளப்படுத்த விரும்பியமைக்கு அவர்கள் பின்பற்றுகின்ற பெளத்த மதமும் ஒரு காரணம் ஆகும். அசோகச் சக்கரவர்த்தி புத்த நெறிகளை பரப்பும் நோக்கில் இலங்கைக்கு தனது மகள் சங்கமித்திரையைப் போதிமரக்கிளையுடன் அனுப்பி வைத்த்தாக மகாவம்சம் கூறுகிறது. அசோகச் சக்கரவர்த்தி பெளத்த போதனைகளைப் பதிப்பித்த கல்தூண்களின் தலைகளில் இருந்த சிங்கங்கள் இலங்கையின் சிங்களத் தலைமைகளில் செல்வாக்கு செலுத்தியிருக்கும் என்பது திண்ணம். எவ்வாறாயினும், இலங்கை பல்லினத்துவமுடைய ஒரு தீவு. அதன் தேசியக்கொடியில் பெரும்பான்மையைப் பிரதிநிதித்துவம் செய்யும் சிங்கத்தைப் பொறித்தமையானது இன-மத சமத்துவத்தை வேண்டிய அசோகரின் போதனைகளுக்கு முரணானதாகும். அதுவும், சிங்கத்தை வாளேந்த வைத்தமை, கொல்லாமையை வலியுறுத்தும் பெளத்த மதக் கோட்பாடுகளுக்கு முற்றிலும் விரோதமானது. இந்தப் பேரினவாத சிங்கம்தானே, தமிழனைக் கொல்வோம் என்பதன் குறியீடாக நின்று இன்றுவரை தமிழர்களை நரவேட்டையாடி வருகிறது. சிங்களத் தேசியம் கற்பனைக்கு இடங்கொடாது, சிங்களவர்களினதும், தமிழர்களினதும் பூர்விக நிலங்களில், இலங்கைக் காடுகளின் அரசனாக வாழ்ந்து கொண்டிருக்கும் சிறுத்தைப்புலியை இலங்கையின் பொதுவான குறியீடாகத் தேர்வு செய்திருந்தால், தமிழர்கள் தங்களுக்கான தனியான தேசிய அடையாளங்களை தேடவேண்டிய அவசியம் நேர்ந்திராது. இலங்கைத் தீவு இத்தனை இரத்தக்களரிகளையும் சந்திக்க வேண்டிய துர்ப்பாக்கியமும் நேராமல் போயிருக்கும்.”

இலங்கைக்கு சென்ற இந்திய ராணுவம் அமைதி ஏற்படுத்துதல் என்ற பெயரில் ஈழத்தமிழர்களின் இறையாண்மையை சூறையாடிய அதேநேரத்தில் “பார்த்தீனியம்” என்ற விஷ களைச்செடியை இலங்கை மண்ணில் குடியேற்றிய அவலமும் இந்தத் தொகுப்பில் சூழல் நோக்கில் விவரிக்கப்பட்டுள்ளது.

சூழல் கேடுகளுக்கு பெருகி வரும் மக்கள் தொகையே காரணம் என்றும், இல்லை என்றும் முதலாளித்துவ-மார்க்சிய சொல்லாடல்கள் தொடர்ந்துவரும் நிலையில், அதற்கான தீர்வை ஆசிரியர் முன்வைக்கிறார்: “வளர்முக நாடுகளின் வள ஆதாரங்களைச் சுரண்டிக் கொழுத்து வாழும் மேற்கு நாடுகள் தங்களைப் போன்ற பணக்கார நாடுகளுக்கே உலகம் சொந்தம் என்று கருதுகின்றன. இதனால் ஏழை நாடுகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் தங்களது உணவைத் தட்டிப்பறிக்க மேலதிகமாக வந்து சேர்ந்த “ஒரு வாய்” என்றே பார்க்கின்றன.

ஆனால், ஏழை நாடுகள் பிறப்பைக் கொண்டாட வேண்டியுள்ளது. ஒவ்வொரு குழந்தையின் வருகையும் அன்றாட வருமானத்துக்குக் கைகொடுக்க வந்த “இரண்டு கைகள்” ஆகவே அவை நினைக்கின்றன. இந்த வித்தியாசம் இருக்கும் வரையில் ஏழை நாடுகளில் குடும்பக் கட்டுப்பாடு என்பது யதார்த்தப்பூர்வமானதல்ல மாறாக, வளர்ந்த நாடுகளுக்கு இணையாக ஏழை நாடுகளின் வாழ்க்கைத் தரத்திலும் கல்வியறிவிலும் ஏற்படும் வளர்ச்சியே, அதன் மக்கள்தொகையை தானாகக் கட்டுக்குள் கொண்டுவரும். இதற்கு வளர்ச்சியடைந்த நாடுகள், தங்களின் ஆடம்பரமான மிகை நுகர்வை சற்று குறைத்துக் கொண்டாலே போதுமானது.”

இந்த நூலில் இடம்பெற்றுள்ள புகைப்படங்களும்கூட பல கருத்துகளை வலுவாக முன்வைக்கின்றன. தவளைகள் குறித்த கட்டுரையில் வேதி நச்சுகளால் மரபணு குளறுபடி ஏற்பட்டு ஒற்றைக் கண், குறைந்த அல்லது அதிக கால்களுடன் பிறந்து துள்ளித் திரிய இயலாமல் மாண்ட தவளைகளின் படங்கள் இடம்பெற்றுள்ளன. வேதி நச்சுகளே இந்த விளைவுகளை ஏற்படுத்தும்போது தாவர மரபணுவில் மாற்றம் ஏற்படுத்திய உணவை உட்கொள்ளும் மனிதக் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கேள்விகள் வயிற்றில் அமிலத்தை சுரக்க வைக்கின்றன.

வணிகமும், பொருள் சேர்த்தலுமே அறமாக இருக்கும் இன்றைய காலக்கட்டத்தில் கனமான விஷயங்களோடு கூடிய இந்த நூலை அழகுற வடிவமைத்து வெளியிட்ட சாளரம் பதிப்பக உரிமையாளர் வைகறை பாராட்டுதலுக்கு உரியவர்.

படிக்க, பாதுகாக்க, பரிசளிக்க உகந்த இந்த நூலை தமிழ்ச் சமூகம் ஆதரிக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சமூக நோக்கமுள்ள மேலும் பல நூல்கள் வெளிவரும்.

வெளியீடு:
சாளரம், 2/1758, சாரதி நகர், என்ஃபீல்டு அவென்யூ, மடிப்பாக்கம், சென்னை – 600091.
விலை: ரூ 250.00 பக்கங்கள்: 431
 
 
 
 

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger